Published : 25 Oct 2019 01:08 PM
Last Updated : 25 Oct 2019 01:08 PM

கமல், ரஜினி... ஆனாலும் பாக்யராஜ்தான் தீபாவளி ஹிட்டு! 

வி.ராம்ஜி


கமல், ரஜினி படங்கள் வந்திருந்த போதிலும் பாக்யராஜ்தான் செம ஹிட்டடித்தார். பாலசந்தர், பாரதிராஜா படங்களும் அந்த வருடத்தில், அந்த நாளில் வந்தது. இது, 1981ம் ஆண்டின் தீபாவளி ரிலீஸ் ரிசல்ட்.


இந்த வருடம் அக்டோபர் மாதம் 27ம் தேதி தீபாவளித் திருநாள். 1981ம் ஆண்டு, அக்டோபர் 26ம் தேதி தீபாவளிப் பண்டிகை வந்தது. இந்த தீபாவளிக்கு விஜய்யின் ‘பிகில்’, கார்த்தியின் ‘கைதி’ ரிலீசாகியிருக்கிறது. 81ம் ஆண்டில் ஏழெட்டுப் படங்கள் ரிலீசாகின.


இயக்குநர் கே.பாலசந்தரின் ‘தண்ணீர்... தண்ணீர்’ 81ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. சரிதா, ராதாரவி, வாத்தியார் ராமன் நடித்த இந்தப் படத்தின் கதை, வசனம் கோமல் சுவாமிநாதன். இன்று வரை இருக்கிற தண்ணீர்ப் பிரச்சினையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது இந்தப் படம்.


முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில், சிவாஜி, சரிதா, சரத்பாபு, ஜெய்சங்கர் நடிப்பில் உருவான ‘கீழ்வானம் சிவக்கும்’ திரைப்படம் வெளியானது. டாக்டரான சிவாஜியின் மகன் ஒரு பெண்ணைக் கெடுத்துவிட, அவள் இறந்து போக, அவளின் பார்வை இழந்த அண்ணன் ஜெய்சங்கர் அவனைப் பழிவாங்கத் துடிக்க, இப்போது மாமனாருக்கும் மருமகளுக்கும் நடக்கிற மெளன யுத்தம்தான் படத்தின் கதை. சிவாஜியும் சரிதாவும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருந்தார்கள்.


சத்யா மூவீஸ் தயாரிப்பில், ரஜினி, ஸ்ரீதேவி, சிரஞ்சீவி நடித்த ‘ராணுவ வீரன்’ தீபாவளிக்கு வெளியானது. ராணுவத்தில் இருந்து ஊருக்கு வந்த வீரனுக்கும் கொள்ளைக் கும்பலுக்கும் நடுவே நடக்கிற சடுகுடு சண்டைகள்தான் படத்தின் மையக்கரு. அந்தக் கொள்ளைக் கூட்டத் தலைவனும் ராணுவ வீரனும் நண்பர்கள் என்பதுதான் டிவிஸ்ட்.


இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில், கமல், மாதவி, ராதா, ஸ்வப்னா நடித்து வெளியான படம் ‘டிக்... டிக்... டிக்...’. மாடலிங் பெண்கள், புகைப்படக் கலைஞர், வைரக்கடத்தல் தலைவன் என முக்கோணம் கொண்டு, கதை பின்னப்பட்ட, ஆக்‌ஷன் திரில்லர் கதை.
மேலும், அந்த வருடத்தின் தீபாவளியின் போது, தேவர் பிலிம்ஸின் ‘அஞ்சாத நெஞ்சங்கள்’ திரைப்படம் வெளியானது. இதில், சுமன், சரிதா நடித்திருந்தார்கள். அதேபோல் ஆர்.சி.சக்தியின் இயக்கத்தில், சந்திரசேகர், விஜயசாந்தி நடித்த ‘ராஜாங்கம்’ திரைப்படம் முதலான படங்களும் வெளியானது. இதில் பாக்யராஜ் நடித்து இயக்கி, அம்பிகா, ராஜேஷ், கல்லாபெட்டி சிங்காரம் முதலானோர் நடித்த ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படமும் வெளியானது. ஆக, 81ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி, தீபாவளித்திருநாளன்று, ஏழெட்டுப் படங்கள் வெளியாகின.
சமூகப் பிரச்சினைகளை அலசிய விதத்தில், ‘தண்ணீர்... தண்ணீர்’ பெரிதாகப் போகவில்லை. கமல் - பாரதிராஜா கூட்டணியில் பிரமாண்டமாக மிரட்டுகிற படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்குத் தீனியாக ‘டிக்... டிக்... டிக்...’ அமையவில்லை. ராணுவ வீரன் சப்ஜெக்ட்டும் ரஜினியின் ஒட்டுமீசையும் ஒட்டவே இல்லை.


இதில், சிவாஜியும் சரிதாவும் போட்டிபோட்டு நடித்த, ‘கீழ்வானம் சிவக்கும்’ பேசப்பட்டது. காட்சிக்குக் காட்சி கைத்தட்டினார்கள் ரசிகர்கள். மாமனாருக்கும் மருமகளுக்கும் நடக்கிற போட்டாபோட்டி ரசிக்கப்பட்டது. ‘கடவுள் படைத்தான்’ பாடல், முணுமுணுக்கச் செய்தது. படம் வெற்றி அடைந்தது.


ஆனால், எல்லாப் படங்களையும் தூக்கிச் சாப்பிட்டது... ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படம்தான். தன் மனைவியான அம்பிகாவை, ஒரு வாரத்தில் அவளின் காதலனிடமே சேர்த்துவைக்கிறேன் என்று சொல்லும் கதையும் ‘என் காதலி உங்களுக்கு மனைவியாகலாம். ஆனால் உங்கள் மனைவி எனக்குக் காதலியாக முடியாது’ எனும் கருத்தும் என... அறைந்து சொன்னதில்தான் இருக்கிறது படத்தின் இமாலய வெற்றி.


பாக்யராஜ் - அம்பிகா, பாக்யராஜ் - காஜா ஷெரீப், பாக்யராஜ் - கல்லாபெட்டி சிங்காரம், பாக்யராஜ் - ராஜேஷ்... என எல்லா காம்பினேஷன் காட்சிகளுமே ஜீவனுள்ளவை. குறும்பும் குசும்பும் கொண்டவை. உணர்ச்சிப்பூர்வமானவை.


படத்தின் கதையும் அதைச் சொல்லும் விதத்திலான திரைக்கதையும் ரசிகர்களைக் கட்டிப் போட்டது. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது. அப்படித்தான் பார்த்தார்கள் ரசிகர்கள். அந்தத் தீபாவளிக்கு வந்த படங்களில், சில்வர் ஜூப்ளி கொண்டாடியது ‘அந்த 7 நாட்கள்’ படம்தான்.
கமல், ரஜினி, சிவாஜி படங்கள் வந்திருந்தாலும் பாலசந்தர், பாரதிராஜா படங்கள் வந்திருந்தாலும் பாக்யராஜின் ‘அந்த 7 நாட்கள்’ செம ஹிட்டடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x