Published : 17 Oct 2019 03:47 PM
Last Updated : 17 Oct 2019 03:47 PM
வி.ராம்ஜி
பொருத்தமில்லாத திருமணங்களை வைத்துக்கொண்டு கதை பண்ணுவது தமிழ் சினிமாவுக்கு ஒன்றும் புதிதல்ல. 'பட்டிக்காடா பட்டணமா' டைப் கதைகள் ஏகத்துக்கு வந்திருக்கின்றன. ஹிட்டுகளும் தந்திருக்கின்றன. மனதுக்குப் பிடிக்காத மனைவி, திருமணம் நடந்ததையே மறைக்கும் கணவன், அவனுக்கு இன்னொருத்தி மீதான காதல் வாழ்க்கை, இதையெல்லாம் தெரிந்துகொண்டு அந்த அப்பாவிப் பெண் எடுக்கும் முடிவு... என அத்தனை சோகங்களையும் கலகலவெனச் சொன்னவிதத்தில் உயர்ந்து நிற்கிறது ‘கோபுரங்கள் சாய்வதில்லை’!
அசிங்கமான உருவம் கொண்ட மனைவி. கிராமத்துப் பெண். பெயர் அருக்காணி. நகரத்தில் வேலை செய்யும் நாயகன். இருதரப்பு அப்பாக்களும் நண்பர்கள். எனவே இருவரும் சேர்ந்து, இருவருக்கும் திருமணம் செய்துவைத்துவிடுகிறார்கள். அருக்காணியைக் கண்டதும் நொறுங்கிக் கதறுகிறான் ஹீரோ.
திருமணம் முடிந்து, வேலைக்கு வந்தால், அங்கே உடன் வேலை செய்பவர்கள், அருக்காணியை வைத்து ஓட்டுகிறார்கள். அருக்காணியைக் கொண்டே இவனை கேலி செய்கிறார்கள். கூனிக்குறுகிப் போகிறான்.
அலுவலகத்தின் சார்பாக வெளிமாநிலம் செல்லும் நிலை. அங்கே விழாவில், விருது வாங்குகிற ஜூலியைச் சந்திக்கிறான். அவளைக் கண்டதும் உள்ளே பூக்கிறது. பெங்களூருவில் இருந்து ஜூலியும் சென்னையில் இருந்து முரளியும் வந்திருக்கிறார்கள். மீண்டும் ஊருக்குச் செல்கிறார்கள்.
பின்னர், பெங்களூருவுக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு செல்கிறான். அங்கே ஜூலியைச் சந்திக்கிறான். இருவருக்கும் மெல்ல மெல்ல காதல் பூக்கிறது. தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆன தகவலைச் சொல்லாமலே அவளுடன் வாழ்கிறான்.
இந்தநிலையில், அருக்காணியை வீடு பார்த்து குடும்பம் நடத்தாமல், இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறான் முரளி. இதனால் அம்மாவுக்கு உடல்நலமில்லை என்று தந்தி வர, விழுந்தடித்துக்கொண்டு ஊருக்கு வருகிறான். மனைவியை அழைத்துப் போகச் சொல்லி அப்பா உத்தரவிட, தட்டமுடியாமல் அழைத்துச் செல்கிறான்.
பெங்களூரு வந்து இறங்கியதும் ஸ்டேஷனில் அருக்காணியை விட, ஜூலியின் அண்ணன் அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறான். ‘புருஷனைத் தொலைத்துவிட்டு நிற்கிறாள்’ என்று சொல்கிறான். அருக்காணியைக் கண்டதும் முரளி, வெலவெலத்துப் போகிறான். தன் கணவன், இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதை அறிந்து அதிர்ந்து போகிறாள் அருக்காணி.
கணவன் இன்னொருத்தியுடன். அந்த வீட்டில் மனைவி வேலைக்காரி. அருக்காணிதான் தன் கணவனின் முதல் மனைவி என்பது ஜுலிக்கு தெரிந்ததா. தெரிந்த பிறகு என்ன செய்தாள்... என்பதையெல்லாம் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருப்பதுதான் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’.
மோகன், சுஹாசினி, ராதா, எஸ்.வி.சேகர். வினுசக்ரவர்த்தி, கமலாகாமேஷ் என பலரும் நடித்த இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
எவரெஸ்ட் பிலிம்ஸ் கலைமணி, படத்தைத் தயாரித்ததுடன் கதையையும் எழுதியிருந்தார். திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார் மணிவண்ணன். பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தார். பிறகு படம் இயக்கினார். அவர் இயக்கிய முதல் படம்தான் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’. வெள்ளிவிழா கொண்டாடிய படம்.
கதாசிரியரும் தயாரிப்பாளருமான கலைமணியிடம், மணிவண்ணனின் திறமையைச் சொல்லி, அவருக்கு சான்ஸ் வழங்கும்படிச் சொன்னவர்... இளையராஜா. படத்துக்கு, மணிவண்ணனின் நண்பர் சபாபதிதான் ஒளிப்பதிவாளர். இளையராஜா இசையில் எல்லாப் பாடல்களுமே ஹிட். ’பூவாடைக்காற்று’ என்ற பாடல் மிக அழகிய மெலடி. ’எம் புருசன் தான் எனக்கு மட்டும்தான்’ என்ற பாடல் செம ஹிட்டு.
இந்தப் படம், மிகச்சிறந்த படம் என்றும் குடும்பத்துடன் காண வேண்டிய படம் என்றும் பொழுதுபோக்குடன் கூடிய நல்ல கருத்துள்ள படம் என்றும் கொண்டாடினார்கள் ரசிகர்கள். இளையராஜாவின் பின்னணி இசை, படத்துக்கு கூடுதல் பலம்.
இன்னொரு விஷயம்... இந்தப் படம் ரிலீசாகும் போது, போஸ்டர் விளம்பரத்தில் புது யுக்தியைச் செய்திருந்தார் மணிவண்ணன்.
இந்தப் பக்கம் பாக்யராஜ். அந்தப் பக்கம் மணிவண்ணன். இருவரின் கைகளிலும் கத்தி. இருவருக்கும் கத்திச்சண்டை. ‘பாரதிராஜாவின் சீடர்களில் சிறந்தவர் யார்? பாக்யராஜுக்கும் மணிவண்ணனுக்கும் கடும் போட்டி’ என்று விளம்பரம் செய்திருந்தார். இந்த விளம்பரம் ரசிகர்களிடம் முதல்நாளே பற்றிக்கொண்டது. கூட்டம்கூட்டமாக, குடும்பம் குடும்பமாக வந்து பார்த்தார்கள். பார்க்கத்தொடங்கினார்கள். திரும்பத் திரும்பப் பார்த்தார்கள்.
மோகனின் நடிப்பு கச்சிதம். ராதாவும் யதார்த்த நடிப்பை வழங்கினார். வினுசக்ரவர்த்தியும் கலகலக்க வைத்தார். எல்லாரையும் விட சுஹாசினி. நடிப்பிலும் சின்னச் சின்ன முகபாவனைகளிலும் அருக்காணியாகவே வாழ்ந்துகாட்டியிருந்தார்.
1982ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி வெளியானது ‘கோபுரங்கள் சாய்வதில்லை’. மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, காலங்கள் கடந்தும் நிற்கிறது. கிட்டத்தட்ட, படம் வெளியாகி 37 வருடங்களாகிவிட்டன.
இன்றைக்கும் ‘அருக்காணி’ நம் மனதில் நிமிர்ந்து நிற்கிறாள். கம்பீரமாய் நிற்கிறாள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment