Published : 13 Oct 2019 06:26 PM
Last Updated : 13 Oct 2019 06:26 PM

‘சூப்பர் சிங்கர்’ இறுதிப்போட்டியில் பங்கேற்கும் முதல் போட்டியாளர்

‘சூப்பர் சிங்கர்’ இறுதிப்போட்டியில் பங்கேற்கும் முதல் போட்டியாளர் யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’. சிறந்த பாடகர்களைத் தேர்ந்தெடுக்கும் இந்த நிகழ்ச்சி, சீனியர் மற்றும் ஜூனியர் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதில், சீனியர் பிரிவின் 7-வது சீஸன் தற்போது நடைபெற்று வருகிறது.

உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயால், ஸ்வேதா மோகன் ஆகிய நான்கு பேரும் நடுவர்களாக இருந்து வழிநடத்தும் இந்த நிகழ்ச்சியை, மா.கா.பா.ஆனந்த் மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு அனிருத் இசையமைப்பில் பாட வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

முருகன், புண்யா, விக்ரம், கெளதம், சாம் விஷால் ஆகிய 5 பேரும் தற்போது இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக உள்ளனர். இதில், இருவரை நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நேற்று (சனிக்கிழமை) ஒளிபரப்பான நிகழ்ச்சியில், இறுதிப்போட்டிக்கான சூப்பர் சோஃபாவில் விக்ரம் முதலில் இடம்பிடித்தார். ஆனால், அவருக்குப் பிறகு பாடிய முருகன், விக்ரமை ரீப்ளேஸ் செய்து சூப்பர் சோஃபாவில் அமர்ந்தார்.

சாம் விஷால், கெளதம், விக்ரம், முருகன் ஆகிய நான்கு பேர் மட்டுமே நேற்றைய நிகழ்ச்சியில் பாடிய நிலையில், இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்ச்சியில் பாடும் புண்யா, முருகனை ரீப்ளேஸ் செய்து நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு ‘சூப்பர் சிங்கர்’ ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

இந்நிலையில், இறுதிப்போட்டிக்குத் தேர்வான முதல் போட்டியாளர் யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது. பி.சுசீலா பாடிய ‘மன்னவன் வந்தானடி தோழி’ பாடலை புண்யா சிறப்பாகப் பாடினாலும், அவருக்கு சூப்பர் சோஃபா கிடைக்கவில்லை. எனவே, முருகனே இறுதிப்போட்டியின் முதல் போட்டியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

“இந்த மேடைக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். என் வாழ்நாள் முழுவதும் இந்த வாய்ப்பை மறக்க மாட்டேன். அண்ணா, தம்பி, அம்மா, தங்கை என்றுதான் நடுவர்களை நினைத்தேன், அவர்களை எப்போதும் நடுவர்களாக நினைத்ததே கிடையாது.

இறுதிப்போட்டிக்குத் தேர்வானதை என் மனைவி கிருஷ்ணவேணிக்கு அர்ப்பணிக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அதேபோல், இறுதிப்போட்டியின் இரண்டாவது போட்டியாளரைத் தேர்ந்தெடுக்கும் இரண்டாவது சுற்றில், சூப்பர் சோஃபாவில் முதலாவதாக சாம் விஷால் இடம்பிடித்தார். அவரைத் தொடர்ந்து பாடிய விக்ரம், சாம் விஷாலை ரீப்ளேஸ் செய்து சூப்பர் சோஃபாவில் இடம்பிடித்தார். ஆனால், அவருக்குப் பிறகு பாடிய புண்யா, விக்ரமை ரீப்ளேஸ் செய்து, இறுதிப்போட்டிக்குச் செல்லும் இரண்டாவது போட்டியாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

“எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை. இந்த மேடைக்கு வர முடிவெடுத்தது, என் வாழ்க்கையில் நான் எடுத்த மிகப்பெரிய விஷயம். ‘நீ டாக்டராகவே இருந்திருக்கலாம். உனக்கெல்லாம் எதுக்கு மியூஸிக்? அதெல்லாம் சரிப்பட்டு வராது. என்னதான் மாடர்ன் உலகமாக இருந்தாலும், கல்யாணம், பிறகு குழந்தை என்றுதான் வாழவேண்டும்’ என இந்தச் சமூகம் நினைக்கிறது.

‘கனவை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்’ என சின்ன வயதில் கூறுவார்கள். ஆனால், வளர்ந்த பிறகு நிஜத்தில் அது நடப்பதே இல்லை. அது ஏன் எனத் தெரியவில்லை. நான் என்ன புண்ணியம் செய்தேன் எனத் தெரியவில்லை. என்னுடைய அம்மா, அப்பாதான் என்னை ஊக்கப்படுத்தி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செய்தனர்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அடுத்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள அரையிறுதிப் போட்டியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x