Published : 13 Oct 2019 03:56 PM
Last Updated : 13 Oct 2019 03:56 PM

விஜயகாந்த்... ஒரே வருடத்தில் 18 படங்கள்

வி.ராம்ஜி

விஜயகாந்த், ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்தார்.

கமலும் ரஜினியும் கோலோச்சத் தொடங்கிய காலகட்டம் அது. கமலுக்கும் ரஜினிக்கும் மளமளவென படங்கள் வந்துகொண்டிருந்தன. 1979ம் ஆண்டு கமல் ஒரு பக்கம் வெற்றிப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்க, ரஜினி இன்னொரு பக்கம் ஹிட் படங்களைத் தந்துகொண்டிருக்க, சிவகுமார், சுதாகர், விஜயன், விஜயகுமார், ஜெய்கணேஷ் என பல நடிகர்களின் படங்களும் வந்தன.

கமல், ரஜினி இருவரும் சேர்ந்து நடித்த படங்களும் வந்தன. ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘நினைத்தாலே இனிக்கும்’ முதலான படங்கள் வந்த அதேசமயத்தில் கமல், ‘கல்யாண ராமன்’, ‘மங்கள வாத்தியம்’ என்றும் ரஜினிகாந்த், ’ஆறிலிருந்து அறுபது வரை’, ‘தர்மயுத்தம்’ என படங்களில் நடித்தார்கள்.

இந்த சமயத்தில், 1979ம் ஆண்டில் ‘அகல்விளக்கு’ ‘தூரத்து இடி முழக்கம்’ , ‘இனிக்கும் இளமை’ என திரையுலகில் களமிறங்கினார் விஜயகாந்த். அடுத்தடுத்த வருடங்களில், விஜயகாந்த் படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். வெற்றியும் குவியத் தொடங்கியது.

81ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. விஜயகாந்த் படம் சுமாரான படமாக இருந்தாலும், முதலுக்கு மோசமில்லாமல் ஓடியது. வசூலைக் குவித்தது. தயாரிப்பாளர்கள் விஜயகாந்த் கால்ஷீட் கேட்டு குவியத் தொடங்கினார்கள்.

1984ம் ஆண்டு, விஜயகாந்துக்கும் அவர் ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஆண்டாகவே அமைந்தது. அந்த வருடத்தில் மட்டும், 18 படங்களில் நடித்தார் விஜயகாந்த்.

‘குழந்தை யேசு’ எனும் படத்தில் நடித்தார். ராம.நாராயணன் இயக்கத்தில், ‘சபாஷ்’ படத்தில் நடித்தார். ‘தீர்ப்பு என் கையில்’, ‘நல்லநாள்’, ‘நாளை உனது நாள்’, ‘நூறாவது நாள்’ முதலான படங்களில் நடித்தார்.

‘மதுரை சூரன்’ எனும் படம் கமர்ஷியலாகப் போனது. ‘மெட்ராஸ் வாத்தியார்’, ‘வீட்டுக்கு ஒரு கண்ணகி’, ‘வெள்ளைப் புறா ஒன்று’, ‘வெற்றி’, ‘வேங்கையின் மைந்தன்’ என படங்கள், சுமாரான படங்களாகவும் சூப்பர் ஹிட் கலெக்‌ஷனுடனும் அமைந்தன.

இந்த சமயத்தில்தான் ‘வைதேகி காத்திருந்தாள்’ மிகப்பெரிய வெற்றியை அளித்தது. ஆக்‌ஷன் ஹீரோவாக மட்டுமின்றி விஜயகாந்த் கேரக்டர் ரோலிலும் பிரமாதம் பண்ணுவார் என நிரூபித்தது.

‘ஜனவரி 1’, ‘குடும்பம்’, ‘சத்தியம் நீயே’, ‘மாமன் மச்சான்’ என அந்த வருடத்தில் மொத்தம் 18 படங்களில் நடித்தார் விஜயகாந்த். இவர் நடித்த எல்லாப் படங்களும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தைக் கொடுக்கவில்லை.

இதன் பிறகுதான், விஜயகாந்த் இன்னும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்தும் படங்கள் பண்ணினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x