Published : 02 Jul 2015 09:20 AM
Last Updated : 02 Jul 2015 09:20 AM

மக்களுக்கு இடையூறு எனில் என் போர்க்கருவி பொறுக்காது: கமல்ஹாசன்

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'த்ரிஷ்யம்' திரைப்படம், தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் ஆகி இருக்கிறது. கமல், கெளதமி, கலாபவன் மணி, சார்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி இருக்கிறார். இப்படம் ஜூலை 3ம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படம் குறித்து கமல்ஹாசன் பேசியது, "மோகன்லால் நடித்த ஒரு நல்ல படம், தானாக தேடி வந்தது. சில நல்ல வாய்ப்புகள் அப்படி வரும். அந்த ஒரு நல்ல படத்தை என் மக்களுக்கு காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறேன். 450 திரையரங்குகளுக்கும் அதிகமாக 'பாபநாசம்' வெளியாக இருக்கிறது. மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழி படங்கள் இப்படத்தின் வெற்றியை நிரூபித்திருக்கிறது.

'பாபநாசம்' படத்தில் கெளதமி நடித்ததற்கு முக்கிய காரணம் இயக்குநர் ஜீத்து ஜோசப் தான். கௌதமியை நான் பரிந்துரை செய்வதில் எனக்கு வெட்கமாக இருந்தது. இயக்குநர் என்னிடம் கேட்டவுடன், நான் வீட்டில் சம்மதா என்று கேட்க வேண்டியிருந்தது. "நீங்க என்ன சொல்றீங்க?" என்று கெளதமி என்னிடம் திரும்பி கேட்டார். இப்படியே சில நேரம் கழிந்தது. இயக்குநர் நம்பிக்கை வைத்தார்; தயாரிப்பாளரும் அதையே விரும்பினார், எழுத்தாளர் ஜெயமோகனும் நல்லா இருக்கும் என சொல்ல, சுற்றி இருப்பவர்கள் எல்லாருமே கூறியதால் 'சுயநல முடிவாக அமையாது' என்று நானும் ஒப்புக் கொண்டேன்.

படம் முடிந்தவுடன் பார்த்தபோது தான், ஏன் அந்த முடிவை எடுத்தார்கள் என தெரிந்தது. சினிமாவில் சில விஷயங்களை வெளியில் இருப்பவர்கள் கூறும்போது தான் எனக்கு தெரிந்தது.

'ஏழை படும் பாடு' படத்தின் பாதிப்பு வெகுவாக 'மகாநதி'யில் இருக்கும். அப்படத்தின் சாராம்சத்தைக் கொண்டு 'மகாநதி' ஆக மாற்றினேன். ஒரு தனிமனித வாழ்க்கை எப்படி சிதைந்து மீண்டும் எப்படி ஒன்றுபடுகிறது என்பது தான் படத்தின் களம்.

நான் எடுக்கும்போது பாத்திரங்களுக்கு நதி பெயரை வைத்து மாற்றினேன். 'பாபநாசம்' புகைப்படங்களைப் பார்த்து விட்டு 'மகாநதி' மாதிரி இருக்கிறது என்கிறார்கள். அதை நான் மறுக்கிறேன். அது ஒரு மாதிரியான நோக்கு. இது வேறு விதமான நோக்கு. வேட்டி கட்டி ஒரு படத்தில் நடித்து விட்டால், வேட்டி கட்டுற படம் எல்லாம் அந்தப் படம் ஆகிவிடாது.

என் குடும்பத்தின் தலைவனாக என்னை நான் நினைத்ததில்லை. ஆனால், என் குடும்பத்தின் தலைவன், தொண்டன் இரண்டுமே நான் தான். நேரம் காலங்கள் பொறுப்பை மாற்றி கொடுக்க வேண்டியதிருக்கும். இப்படத்தை பாபநாசத்தில் எடுக்க வேண்டும் என தோன்றியதால் எடுத்தோம்.

என்னுடைய தனி மனித விமர்சனம் எனது படங்களில் இழையோடுமே தவிர, பாத்திரத்தை போட்டு அமுக்கி விடாது. எனக்கென்று ஒரு சில கொள்கைகள் இருக்கின்றன. எந்த காரணத்தைக் கொண்டும் ஜாதியைப் போற்றும் ஒரு படத்தை பண்ண மாட்டேன். ஜாதியைப் போற்றுவது போல் தலைப்பு இருந்தால் கூட, என்னைக்குடா இந்த ஜாதியை விட்டு தொலையப் போகிறீர்கள் என்று உட்கருத்து இருக்கும். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதி செத்து போய்விட்டார். இன்னும் என்ன ஜாதி என்றே சொல்கிறீர்கள் என்ற ஒரு வார்த்தையாவது வரும்.

வானமாமலையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்த சாமியாரைப் பார்க்கச் சென்றேன். நன்றி சொல்ல சென்றேன். ஏனென்றால் எனக்கு அந்த கடமை இருக்கிறது. மதம் இல்லாமல் போனாலும் என்னிடம் மனிதம் இல்லாமல் போகாது. எல்லா ஆட்களையும் மனிதமாக தான் பார்க்கிறேன். முல்லாவாகவே, ஜீயராகவோ, ஐயராகவோ நான் பார்ப்பதே கிடையாது.

'பாபநாசம்' என்கிற பெயர் இந்திய கலாச்சாரத்தில் இருக்கிற ஒரு பெயர். நாசிக் என்ற ஊரின் முழுப்பெயர் பாபநாசிக் என்பது தான். சில விஷயங்களை நான் நம்புகிறேனோ இல்லையோ, அதை அவமதிக்க மாட்டேன். ஆனால், எனக்கோ, என் மகளுக்கோ, என் மக்களுக்கோ இடையூறாக இருக்கும் என்றால் போர்க்கருவி தன்னால் என் கையில் வந்து நிற்கும்.

பாலியல் குற்றங்கள் போன்றவற்றை தடுப்பது ஒரு ஆளை சார்ந்தது அல்ல. இரவு 12 மணிக்கு ஒரு பெண் முழுக்க நகைகளைப் போட்டுக் கொண்டு பயமின்றி நடந்தால் தான் அது உண்மையான சுதந்திர இந்தியா என்றார்கள். அப்படி என்றால் இந்தியாவிற்கு இன்னும் சுதந்திரம் வரவில்லை என்று அர்த்தம்.

பேருந்தில் தோழனுடன் போய்க்கொண்டிருந்த ஒரு பெண்ணை கற்பழித்திருக்கிறார்கள். அந்த பெண் நகை கூட போட்டுக் கொள்ளவில்லை. இன்னும் சுதந்திரம் வரவில்லை என்று நினைத்து அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாம் செய்துவிட்டோம் என்றால் இதை பெரிய பிரச்சினையாக எடுக்க வேண்டியதில்லை. 'swachh bharat' என்ற ஒரு திட்டத்தை பிரதமர் ஞாபகப்படுத்த வேண்டிய கடமை ஏன் வருகிறது? நாம நமது கடமையை சரியாக செய்யவில்லை என்பதற்கான அர்த்தம் தான் அது.

எது கடும் தண்டனை என்று புரியவில்லை. தூக்கு தண்டனைக்கு கடும் விரோதி நான். மரண தண்டனை என்பது மாற்றி எழுத முடியாத ஒரு தண்டனை. அதை கொடுக்காதீர்கள் என்பது தான் என் கருத்து. கடும் தண்டனை என்பது பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் கட்டுப்பாடு சம்பந்தப்பட்ட ஒன்று. ஆயுள் தண்டனை என்பது 14 வருடங்கள், ராமருக்கும் கொலைகாரனுக்கும் அதே தான். அதில் எனக்கு மறுப்பு உண்டு. கடும் தண்டனை என்பது அதுவல்ல, வாழ்நாள் முழுவதும் அல்லவா இருக்க வேண்டும்?

ஒரு கோட்டைப் போட்டு விட்டு தாண்டாதீர்கள் என்றால் அதை தாண்டாமல் இருப்பதற்கான கடமை அனைவருக்கும் இருக்கிறது. போலீஸ்காரன் வந்து பிடரி கையை வைத்து தாண்டாதே என்று சொல்லக் கூடாது. அதை நாம் செய்ய வேண்டும். அடித்து துன்புறுத்தி சொல்லக்கூடாது, புரியுற மாதிரி சுளீர் என்று சொல்ல வேண்டும். சுகாதாரம் என்பது ஏதோ அரசின் கடமை என்று நினைக்க கூடாது.

'பாகுபலி'க்கு நிதியுதவி செய்த மாதிரி கரண் ஜோஹர் எனது படத்திற்கு பண்ண மாட்டார். அது அவர்களுடைய நம்பிக்கை. நான் ஏன் 'தேவர் மகன்' படத்தை எடுத்தேன். வேறு ஒரு படத்தை எடுத்திருக்கலாமே. 'காக்கா முட்டை' படத்தை நான் ஏன் எடுக்கவில்லை என்று கேட்க முடியாது. 'மருதநாயகம்' படத்துக்கு நிதியுதவி அளிக்கிறோம் என்று சொன்ன அமெரிக்கர்கள் கை கழுவி விட்டார்கள்.

'உத்தம வில்லன்' சொன்ன தேதியில் வெளியாகி இருந்தால் வெற்றி படம் தான். ஒரு படத்தின் வெற்றிக்கு காரணம் கதைக் கரு மட்டுமல்ல. நடிகர்கள் திறமையைத் தாண்டி மக்களும், விமர்சனமும், சொன்ன தேதியில் வெளியாகி இருக்க வேண்டியதும் அதை எத்தனை திரையரங்குகளில் வெளியிடுகிறோம் என்பதும் தான் ஒரு படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது." என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x