Published : 02 Oct 2019 05:55 PM
Last Updated : 02 Oct 2019 05:55 PM
'சுசீலா 65' என்ற பெயரில் நடைபெற்ற பாடகி சுசீலாவின் விழாவில் ஒரே மேடையில் இளையராஜா, வைரமுத்து பேசியுள்ளனர்.
சமீபத்தில் பழம்பெரும் பின்னணிப் பாடகி சுசீலா திரைத்துறைக்கு வந்து 65-வது ஆண்டுகள் ஆனதையொட்டி, 'சுசீலா- 65’ விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதற்காக பிரத்யேகமான இசைக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு சுசீலாவின் பெருமைகளைப் பேசினர்.
இந்த விழாவில் நீண்ட வருடங்கள் கழித்து இளையராஜா - வைரமுத்து இருவரும் கலந்து கொண்டனர். இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதால் நீண்ட வருடங்களாக இருவரும் இணைந்து பணிபுரிவதில்லை. பல்வேறு முன்னணி இயக்குநர்கள் முயற்சி செய்தும், அதை இளையராஜா தவிர்த்துவிட்டார். இந்நிலையில் 'சுசீலா 65' விழாவில் இருவரும் கலந்து கொண்டனர். இருவரும் மேடையில் இணைந்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவுமில்லை, பேசிக்கொள்ளவுமில்லை.
இந்த விழாவில் சுசீலாவின் பெருமைகள் குறித்து இளையராஜா பேசும் போது, 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே' பாடல் வரிகள் குறித்தும் சுசீலா பாடியது குறித்தும் குறிப்பிட்டார். அப்போது, "இன்றைக்கும் இந்தப் பாடலின் வரிகள் இந்த இளைஞர்களுக்கு எவ்வளவு பொருத்தமாக உள்ளது என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். கவிஞர் கண்ணதாசனைப் போல ஒரு கவிஞன் இந்த உலகத்தில் கிடையவே கிடையாது. பாடல் சொன்னவுடன் வரிகளைச் சொன்னவர்கள் இந்த உலகத்திலேயே ஒருவரும் கிடையாது. இன்றைய இளைஞர்களுக்கும் பொருந்தும் வகையில் கவிஞர் கண்ணதாசனுடைய பாடல்கள் இருக்கும். அவருடைய புகழ் மேலும் ஓங்குமாறு சுசீலா அம்மா அவரது பாடல்களைப் பாடினார்" என்று இளையராஜா தெரிவித்தார்.
அடுத்ததாக சுசீலாவின் பெருமைகள் குறித்து வைரமுத்து பேசும்போது, "’கண்ணுக்கு மையழகு’ பாடலை நீங்கள் பாடியதால்தான் சரித்திரத்தில் இடம்பெற்ற பாடலாக மாறியுள்ளது. இந்தப் பாடல் ரஜினி நடித்த 'மனிதன்' படத்துக்காக எழுதப்பட்டது. ஆனால், பல முறை ஆர்மோனியப் பெட்டியின் மீது வைத்தும் உயிர் பெறாமல் இருந்தது.
உலகத்தில் சிறந்த கவிஞன் கண்ணதாசன் என்பதில் எங்களுக்கும் வேறுபாடில்லை. மேலும், உலகத்தில் சிறந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை. அந்த மொழியோடும், வாழ்வோடும் அவர் கொடுத்ததை எல்லாம் சுசீலா அம்மாவின் குரல் தமிழகமெங்கும் கொண்டுவந்து சேர்த்தது" என்று பேசினார் வைரமுத்து.
இசையமைப்பாளர் இளையராஜாவின் பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே கவிஞர் வைரமுத்துவின் பேச்சு அமைந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT