Published : 17 Sep 2019 01:29 PM
Last Updated : 17 Sep 2019 01:29 PM
வி.ராம்ஜி
கமலையும் ரஜினியும் சேர்ந்து படம் பண்ணிக்கொண்டிருந்த காலகட்டம் அது. ‘ஆடுபுலிஆட்டம்’, அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘அவள் அப்படித்தான்’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ என வரிசையாக படங்கள் வந்துகொண்டிருந்தன.
அந்த சமயத்தில், கமலிடமும் ரஜினியிடமும் கால்ஷீட் வாங்கியிருந்தார் பஞ்சு அருணாசலம். இருவருக்குமான கதைத்தேர்வும் தயாராக இருந்தது. பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் என்கிற தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார் பஞ்சு அருணாசலம்.
இந்த சமயத்தில் கமலுக்கு திடீரென ஒரு யோசனை. ‘இருவரும் சேர்ந்து நடிப்பதால், சம்பளம் அதிகமாகாமல் இருக்கிறது. இருவருக்கும் இருக்கிற மார்க்கெட் வேல்யூ, ஒரே படத்தில் ஏன் முடங்க வேண்டும். எனவே நீயும் நானும் தனித்தனியே படம் பண்ணினால் என்ன?’ என்று ரஜினியிடம் தெரிவித்தார் கமல். இதைக் கேட்ட ரஜினி, ‘அட... ஆமாம்ல. கரெக்ட் கரெக்ட். அப்படியே செய்வோம்’ என்றார்.
இருவரும் பஞ்சு அருணாசலத்தை சந்தித்தனர். தாங்கள் எடுத்த முடிவைத் தெரிவித்தனர். ‘கொடுத்த அட்வான்ஸ் அப்படியே இருக்கட்டும். அதே கால்ஷீட் தேதி. அதில் மாற்றமும் இல்லை. ரஜினியை வைத்து ஒரு படம் பண்ணுங்கள். என்னை வைத்து ஒரு படம் பண்ணிக்கொள்ளுங்கள்’ என்று சொல்ல, இந்தத்திட்டம் பஞ்சு அருணாசலத்துக்குப் பிடித்துவிட்டது.
ஆனால் அவருக்கு இருக்கும் ஒரே பிரச்சினை. யார் இயக்குநர் என்பதுதான். இருவரும் நடிக்கும் படத்துக்கு எஸ்.பி.முத்துராமன் இயக்குநர் என்று முடிவாகி இருந்தது. இப்போது ஒரே சமயத்தில் இருவரும் கொடுத்த தேதிகளை வைத்துக்கொண்டு, இரண்டு படங்களையும் எஸ்.பி.முத்துராமன் எப்படி இயக்கமுடியும்? என்று குழம்பித் தவித்தார் பஞ்சு அருணாசலம்.
இதுகுறித்து எஸ்.பி.முத்துராமன் தெரிவிக்கும் போது, ‘’ ரஜினியை வைத்து எடுக்கும் படத்தை எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்யட்டும். என்னை வைத்து இயக்கும் படத்தை, எஸ்.பி.எம்மிடம் இதுவரை உதவி இயக்குநராக இருந்த ஜி.என்.ரங்கராஜன் இயக்கட்டும். பார்த்து சமாளித்துக்கொள்ளலாம் என்று கமல் சொன்னார். எல்லோருக்கும் இது சரியென்று பட்டது.
அதன்படி, பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில்,ஒரே சமயத்தில் கமலை வைத்து ஒரு படமும் ரஜினியை வைத்து ஒரு படமும் தயாரிக்கப்பட்டது. இந்தப் படங்கள்தான், ‘கல்யாணராமன்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’. இதில் ரஜினியை வைத்து ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தை நான் இயக்கினேன்’’ என்கிறார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.
’கல்யாணராமன்’ படத்தை ஜி.என். ரங்கராஜன் இயக்கினார். இந்தப் படம் 1979ம் ஆண்டு ஜூலை மாதம் 9ம் தேதி ரிலீசானது. எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘ஆறிலிருந்து அறுபது வரை’ செப்டம்பர் 14ம் தேதி வெளியானது. இரண்டு படங்களும் வர்த்தக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெகுவாக கொண்டாடப்பட்டன.
இதில், ‘கல்யாணராமன்’ படத்தின் ஒலிச்சித்திரம், ரேடியோவிலும் கல்யாண வீடுகளிலும் ஒலிபரப்பப்பட்டது. இந்தப் படத்தை இயக்கிய ஜி.என்.ரங்கராஜன், ’கடல்மீன்கள்’, ‘எல்லாம் இன்பமயம்’, ‘மகராசன்’ உள்ளிட்ட பல படங்களை கமலை வைத்து இயக்கினார்.
ரஜினியின் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகவும் ரஜினியின் பண்பட்ட நடிப்பைப் பறைசாற்றும் படமாகவும் இன்றைக்கும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது ‘ஆறிலிருந்து அறுபது வரை’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT