Last Updated : 05 Sep, 2019 04:17 PM

 

Published : 05 Sep 2019 04:17 PM
Last Updated : 05 Sep 2019 04:17 PM

முதல் பார்வை: மகாமுனி 

கொலை உள்ளிட்ட கொடூரக் குற்றங்களுக்கு ஸ்கெட்ச் போட்டுத் தரும் மகா, கிராமத்துக் குழந்தைகளை வளர்ச்சியை நோக்கி நகர்த்தும் முனி ஆகிய இருவரின் கதையே 'மகாமுனி'.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் மகாதேவன் (ஆர்யா) கால் டாக்ஸி டிரைவராக வேலை செய்கிறார். உள்ளூர் அரசியல்வாதி முத்துராஜ் (இளவரசு) சொல்லும் சின்னச் சின்ன வேலைகளை பிசிறே இல்லாமல் செய்து முடிக்கிறார். இதனால் குரு நாராயணன் (அருள்தாஸ்), ஆதி நாராயணன் (மதன்குமார்) என்ற இரு சகோதரர்களின் பகைக்கு ஆளாகிறார். பகை பழிவாங்கும் படலமாக உருவெடுக்க, முதுகில் கத்திக்குத்துடன் உயிருக்குப் போராடும் ஆர்யா மருத்துவரை சிகிச்சைகாகச் சந்திக்கிறார்.

ஈரோடு மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் அம்மா ரோகிணியுடன் வசிக்கிறார் முனிராஜ் (இன்னொரு ஆர்யா). இளங்கலை உயிரியல் படித்த அவருக்கு பிரம்மச்சரியத்தைக் கடைபிடிப்பதே முதன்மைக் குறிக்கோள். கிராமத்துக்குக் குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தருவது, உலகத் திரைப்படங்களைத் திரையிடுவது என்று அவர்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறார். இவரைப் பார்த்து ஆச்சரியப்படும் தீபா (மஹிமா நம்பியார்) முனிராஜுடன் பழகுகிறார். சாதிப் பாகுபாடு பார்க்கும் தீபாவின் தந்தை ஜெயராமன் (ஜெயப்பிரகாஷ்) முனிராஜைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார்.

மகாதேவன், முனிராஜ் என்ற இருவரையும் கொலை செய்ய இருவேறு விதமான கும்பல்கள் காத்திருக்கின்றன. இந்நிலையில் மகாதேவன், முனிராஜின் நிலை என்ன, இவர்கள் இருவருக்கும் சம்பந்தம் உள்ளதா, மகாதேவனின் குடும்பப் பின்னணி என்ன, கொலைச் சம்பவத்துக்கு ஸ்கெட்ச் போட்டுத் தரும் மகாதேவன் மனம் மாறினாரா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

'மௌனகுரு' படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் சாந்தகுமார், கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு 'மகாமுனி'யுடன் வந்துள்ளார். மனித மனத்தில் இருக்கும் பேராசை, போட்டி, பொறாமை, வஞ்சம் ஆகிய குணங்களை கதாபாத்திரங்களின் வழியாகச் சொன்ன விதத்தில் முத்திரை பதிக்கிறார். மனித வாழ்வின் முரண்களைப் பேசியிருக்கும் சாந்தகுமார் அதைப் பதிவாக மட்டுமே விட்டுச் சென்றதில் கொஞ்சம் சறுக்கியுள்ளார்.

இதுவரை ஆர்யா நடித்த படங்களில் நடிப்பில் 'தி பெஸ்ட்' என்று 'மகாமுனி'யைச் சொல்லலாம். இரட்டைக் கதாபாத்திரங்களிலும் மனிதர் நின்று நிதானித்து ஸ்கோர் செய்கிறார். மகாதேவன், முனிராஜ் ஆகிய இருவருமே புத்திசாலிகள் என்பது பொதுவான பண்பாக இருந்தாலும் முரட்டுக் கோபம், தன்னைக் கொல்ல நினைப்பவனை முந்தும் விவேகம், அரசியல்வாதியின் சொல்லுக்குக் கீழ்பணிதல், யாருக்கும் அஞ்சாமல் எதிர்த்து நிற்றல் ஆகியவற்றில் மகாதேவனாக தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். மனைவி, குழந்தையின் நிலை கருதி இளவரசுவிடம் கெஞ்சும் இடத்திலும் துரோகம் செய்ததை உணர்ந்து பழிக்குப் பழி வாங்க ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும்போதும் மனித வாழ்க்கையின் உணர்வுகளை பக்குவமாகக் கடத்துகிறார்.

நிதானம், பொறுமை, அமைதி, அடிதடி என்றாலே என்னவென்று தெரியாத அப்பாவித்தனம், அருகில் இருப்பவர்களின் வஞ்சக மனம் புரியா நீரோடையைப் போன்ற உள்ளம், பிறருக்கு உதவும் குணம், வீரம், சாதி குறித்து மாணவர்களுக்குப் புரியவைப்பது என்று முனிராஜ் கதாபாத்திரத்தில் ஆர்யா சாந்தத்தின் வார்ப்பு. அவர் செய்யும் யோகாசனங்களும் நல்வழிப்படுத்துவதாகவே உள்ளன.

இந்துஜா, மஹிமா நம்பியாரின் கதாபாத்திரங்கள் முழுமையடையவில்லை. பதற்றம், பயம், தவிப்பு, இயலாமை ஆகியவற்றை இந்துஜா நன்கு வெளிப்படுத்தியுள்ளார். தந்தையாக இருந்தாலும் தப்பை தட்டிக்கேட்கும் துணிச்சலான கதாபாத்திரத்தில் மஹிமா நன்றாக நடித்துள்ளார். ஆனால், இருவரின் கதாபாத்திரங்களும் செயற்கையாகவே உள்ளன.

இன்ஸ்பெக்டர் தேவராஜனாக நடித்த ஜி.எம்.சுந்தர், திருமூர்த்தியாக நடித்த சூப்பர் குட் சுப்பிரமணி, கோபாலாக நடித்த யோகி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். இளவரசு பாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார். ரோகிணி, பாலாசிங், அருள்தாஸ், மதன்குமார், காளி வெங்கட், தீபா ஆகியோர் சில காட்சிகளில் வந்துபோனாலும் தடம் பதிக்கிறார்கள்.

அருள் பத்மநாபனின் ஒளிப்பதிவும் தமனின் இசையும் படத்துக்குக் கூடுதல் பலம் சேர்க்கின்றன. சாபு ஜோசப்பின் படத்தொகுப்பில் நேர்த்தி பளிச்சிடுகிறது. ஆக்‌ஷன் பிரகாஷின் சண்டைக் காட்சிகள் யதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கருவேல மரங்களை அழிப்பதின் அவசியம், பிளாஸ்டிக் ஒழிப்பு, சாதிப் பாகுபாடு, ஆணவக்கொலை, ஆங்கில மீடியத்தில் படிக்கும் நிலை, போராட்டத்தின் போது பிரியாணி அண்டாவை அப்படியே தூக்கிச் செல்வது, கம்ப ராமாயணம், பெரிய புராணம் யார் எழுதியது என்பது தெரியாமல் அரசியலில் நீடிக்க என்ன வழி என்று சமகால அரசியலை இயக்குநர் சாந்தகுமார் மிக லாவகமாகத் திரைக்கதையில் சேர்த்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது.

''நாமெல்லாம் மிருகமா இருந்தப்போ உணவும் இனப்பெருக்கமும் மட்டுமே தேவையா இருந்துச்சு. அதுல கொஞ்சம் மிருகங்கள் சிந்திக்க ஆரம்பிச்சது. அப்படிப்பட்ட மிருகங்களுக்கு மனுஷங்கன்னு பின்னால பேர் வெச்சிக்கிட்டாங்க. அந்த மனுஷங்களுக்கு மிருகங்கள்கிட்ட இல்லாத பேராசை, போட்டி, பொறாமை, வஞ்சம்னு நிறைய குணங்கள் சேர்ந்துடுச்சு, மனுஷனோட மனசும் நிம்மதி இழந்துடுச்சு'', ''ஒருத்தன் பொறந்ததுல இருந்து சாவுற வரைக்கும் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தாங்கிறதை வைச்சுதான் அவன் சந்ததி செத்தவங்களோட நல்லது, கெட்டதை தூக்கிச் சுமக்க வேண்டி வரும். அவன் சந்ததி நல்லதை சுமக்கப்போவதா, கெட்டதைச் சுமக்கப்போவதாங்கிறதுதான் அந்தக் கணக்கு'' என வசனங்கள் வழியாக இயக்குநர் சாந்தகுமார் படத்தின் ஆதாரத்தை உணர்த்துகிறார்.

ஆனால், இதை இயக்குநர் சாந்தகுமார் கொஞ்சம் சுற்றிவளைத்துச் சொல்லியிருக்கிறார். நிதான கதியில் செல்லும் திரைக்கதை அதே நிலையில் தொடர்கிறது. இரட்டைக் கதாபாத்திரங்களின் எழுச்சி - வீழ்ச்சி குறித்து போதுமான அளவில் சொல்லப்படவில்லை. அதுவே படத்தின் பாதகமான அம்சம். மஹிமா நம்பியாரிடம் ரோகிணி தன் மகன் குறித்துக் கூறிய பிறகும், ஆர்யா குறித்து அவர் ஏன் ஜெயப்பிரகாஷிடம் பேசவில்லை, மனநலக் காப்பகத்தில் ஆர்யா எப்படி சேர்க்கப்படுகிறார், அவர் எப்படி மனதை அமைதிப்படுத்தும் ஆசனங்களை திடீரென்று செய்கிறார் போன்ற சில கேள்விகள் எழுகின்றன. அதற்குப் படத்தில் பதில் இல்லை. மகாதேவன் எப்படி தனி ஆளாய் வளர்ந்தார் என்பதற்கும் நியாயப்படுத்தும் காட்சிகள் இல்லை. இந்தக் குறைகளைச் சரிசெய்திருந்தால் 'மகாமுனி' மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x