Published : 03 Sep 2019 01:04 PM
Last Updated : 03 Sep 2019 01:04 PM

’புவனா ஒரு கேள்விக்குறி’ - அப்பவே அப்படி கதை

வி.ராம்ஜி


பெண்களின் பெயரை படத்துக்குத் தலைப்பாக்கி படம் பண்ணியதெல்லாம் எண்பதுகளின் இறுதிவரை, அதிகமாகவே இருந்தது. அதன் பிறகுதான் ஹீரோயிஸம் உச்சிக்குப் போனது. நாயகிகள், படத்தில் வெறுமனே வந்து போகிறவர்களானார்கள். நாயகிகளை மையப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து இன்றைக்கு அத்தியென படங்கள் வந்தாலும், எழுபதுகளிலும் எண்பதுகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்கள் ஏராளம். அப்படியொரு படம்தான்... புவனா ஒரு கேள்விக்குறி.


சிவகுமார், ரஜினி, சுமித்ரா... ஆகிய மூவரைக் கொண்டும் உருவான ‘புவனா ஒரு கேள்விக்குறி’ அன்றைக்கு மிகப்பெரிய வெற்றி, இன்றைக்கும் நினைவிருக்கிறது.


சிவகுமார்தான் நாகராஜன். ரஜினியின் பெயர் சம்பத். சுமித்ராதான் கதைத்தலைப்புக்கு உரியவள். அவள்தான் புவனா. நாகர்கோவிலில் வசித்து வரும் நாகராஜும் சம்பத்தும் நண்பர்கள். இருவருக்கும் எவருமில்லை. நாகராஜ், சபலக்காரன். பார்க்கும் பெண்களை வசியம் செய்து, வழிக்குக் கொண்டுவந்து, காரியம் முடிந்ததும், கழற்றிவிடுபவன். ‘ஏண்டா இப்படி பண்றே? உனக்கு இரக்கமே கிடையாதா?’ என்று எப்போதும் சம்பத் புலம்பியபடி அறிவுரை சொல்லிக்கொண்டே இருப்பான். ஆனால் நாகராஜ் கேட்டால்தானே?


தெருவோரத்தில் கடை வைத்து பிழைத்து வரும் நாகராஜும் சம்பத்தும், துணிகளைக் கொள்முதல் செய்ய சென்னைக்கு ரயிலேறுவார்கள். அப்போது, ரயிலில் முத்து (ஒய்.ஜி.மகேந்திரன்) என்பவர் இருப்பார். அவரிடம் கோயில் திருப்பணிக்குச் செலுத்தவேண்டிய பணம் பெட்டியில் இருக்கும். ரயில், விழுப்புரத்தில் நிற்கும். அப்போது ஒய்.ஜி.மகேந்திரன் காபி குடிக்கச் செல்லுவார். அங்கே நெஞ்சுவலி வந்து, பிளாட்பாரத்தில் இறந்துகிடப்பார். அதேநேரத்தில், பெட்டியில் பணம் இருப்பதைத் தெரிந்துகொண்ட சிவகுமார், அந்தப் பணத்தை அபகரித்து எடுத்துக்கொள்வார்.


போலீஸ் விசாரிக்கும். ஆனால் சந்தேகப்படாது. அதேசமயம், ஒய்.ஜி.மகேந்திரனின் சகோதரியான சுமித்ரா, சந்தேகப்படுவார். சிவகுமாரையும் ரஜினியையும் சந்தித்து விவரம் கேட்பார். ஆனால் பணம் என்னானது என்று தெரியாது என்று சொல்லிவிடுவார். அதேநிலையில், சுமித்ராவை மடக்கிப் போட காதல் வலை வீசி, விழச் செய்வார் சிவகுமார். சுமித்ரா கர்ப்பமாவார். ஆனால் கைவிடுவார்.


அந்தச் சூழலில், அதே ஊரில் உள்ள பெரும்பணக்காரர் தன் மகள் ஜெயாவை, சிவகுமாருக்கு திருமணம் செய்து வைப்பார். தன் ஜவுளிக்கடையையும் கொடுப்பார். இந்தநிலையில், கர்ப்பமாக இருக்கும் சுமித்ராவுக்குத் துணையாக ரஜினி இருப்பார். நண்பனுக்காக, சுமித்ராவை இந்த நிலைக்கு ஆளாக்கியது நான் தான் என்று சொல்லிவிடுவார். இருவரும் ஒரே வீட்டில், வெளியுலகிற்கு கணவன் மனைவி போல் வாழ்வார்கள்.


ஆனால் கல்யாணமாகி, பல வருடங்களாகியும் சிவகுமார் - ஜெயா தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. தன் காதலி (மீரா) ஒரு விபத்தில் இறந்ததிலிருந்தே பிடிப்பில்லாமல் வாழ்ந்து வரும் ரஜினிக்கு, ஒருகட்டத்தில் சுமித்ராவுடனே வாழலாம் எனும் ஆசை. குழந்தையே பிறக்காத நிலையில், தன் மகனையே தத்தெடுத்து வளர்க்கலாம் என்பது சிவகுமாரின் திட்டம். ஆனால் ரஜினியும் சம்மதிக்கமாட்டார். சுமித்ராவும் அவமதித்து அனுப்பிவிடுவார்.


இந்தநிலையில், சுமித்ராவின் குழந்தை மூளைக்காய்ச்சலால் உயிருக்குப் போராடிய நிலையில், முக்கியமான மருந்தை எழுதித் தருவார் டாக்டர். நட்டநடுராத்திரியில், சிவகுமாரின் மருந்துக்கடையில் அந்த மருந்து இருக்கும். ஆனால் குழந்தையைத் தத்துக்கொடுக்க சம்மதித்தால், மருந்து தருகிறேன் என்பார் சிவகுமார். ரஜினி மறுத்துவிட்டு, மருந்துக்கு அலைவார்.இந்தநிலையில், மருந்தை எடுத்துக்கொண்டு ரஜினியின் வீட்டுக்கு வந்து, சுமித்ராவிடம் தத்துக் கொடுக்கச் சொல்லி பேரம் பேசுவார். ’ச்சீ..நீயெல்லாம் மனுஷனா’ என்று இகழ்ந்து சொல்ல, அங்கே திருந்துவார் சிவகுமார்.


ஆனால், பின்னர், நெஞ்சுவலியால் துடித்து இறந்துபோவார் ரஜினி. கனத்த இதயத்துடன், கதறி, விக்கித்து நிற்பார் சுமித்ரா. அதுவரை ஊருக்கு கணவனும் மனைவியுமாக வாழ்ந்து வந்த சுமித்ரா, அப்போது ரஜினியையே கணவனாக ஏற்பாள். இறந்த பிறகு வெள்ளைப்புடவையுடன் மகனை தூக்கிக்கொண்டு நிற்பாள், விதவையாக!


புவனா ஒரு கேள்விக்குறி என்பதாக படம் முடியும். கனத்த இதயத்துடன் தியேட்டரை விட்டு வெளியே வந்தார்கள் ரசிகர்கள்.
சிவகுமார் நெகட்டீவ் கேரக்டரில் நடித்திருப்பார். ரஜினிகாந்த், நல்லவனாக, தியாகசீலராக நடித்திருப்பார். எழுத்தாளர் மகரிஷியின் நாவலுக்கு, தெளிவான திரைக்கதையும் வசனமும் எழுதியிருப்பார் பஞ்சு அருணாசலம். கருப்புவெள்ளைப் படமென்றாலும், ஒளிப்பதிவும் படமாக்கிய விதமும் நேர்த்தியாக இருக்கும்.


இந்தக் கதையைப் படமாக்குவது என முடிவானதும் ரஜினி கேரக்டருக்கு சிவகுமாரையும் சிவகுமார் கேரக்டருக்கு ரஜினியையும் தான் புக் செய்தார்கள். படப்பிடிப்பு தொடங்குவதற்கு சிலநாள் இருக்கும் போது, அப்படியே அவர்களை கேரக்டர் மாற்றி நடிக்கவைத்தால் என்ன என்று தோன்றியது. இருவரிடம் கேட்க, இரண்டுபேரும் ஒத்துக்கொண்டார்கள். ‘எல்லாப் படத்துலயும் நல்லவனா இருக்கிற சிவகுமார், இதுல கெட்டவன்’ என்பதும் ‘எல்லாப் படத்துலயும் கெட்டவனா இருக்கிற ரஜினி, இதுல நல்லவன்’ என்பதும்... படத்துக்கு மிகப்பெரிய பலமாயிற்று.


பாடல்கள் அனைத்தையும் ஹிட்டாக்கிக் கொடுத்திருப்பார் இளையராஜா. கெட்ட கேரக்டரான நாகராஜனாக சிவகுமார் வருகிற போதெல்லாம், பின்னணியில் மகுடியின் இசையை ஒலிக்கவிட்டு, பின்னணி இசையிலும் கவனம் செலுத்தி அசத்தியிருப்பார். ‘பூந்தென்றலே’ என்ற பாடலும் ‘விழியிலே மலர்ந்தது’ எனும் பாடலும் மெலடியில் மயக்கிப்போடும். முக்கியமாக, ‘ராஜா என்பார் மந்திரி என்பார்’ என்ற பாடல், மிகப்பெரிய வெற்றி பெற்றது. ‘புவனா ஒரு கேள்விக்குறி’க்கு அடையாளமாகவும் இந்தப் பாடல் திகழ்ந்தது.


வசனங்கள் ஓவ்வொன்றும் நறுக்கு தெறித்தாற் போல் எழுதியிருப்பார் பஞ்சு அருணாசலம். ‘அண்ணே... நாகராஜ் அண்ணே... கடப்பாரையவே முழுங்கிட்டியேண்ணே. இதை ஏப்பம் விட்டுட முடியாது. ஒருகட்டத்துல, வயித்தையே கிழிச்சுப் பதம் பாத்துரும்’ என்று ரஜினி சொல்லும்போதெல்லாம் செம கைத்தட்டல். அதேபோல, சுமித்ராவும் ரஜினியும் கோயிலுக்கு வந்து விட்டு வெளியே வருவார்கள். சிவகுமாரும் ஜெயாவும் கோயிலுக்குள் வருவார்கள். ‘என்ன கோயிலுக்கு, என்ன வேண்டுதல்’ என்று சிவகுமாரின் மனைவி ஜெயா ரஜினியிடம் கேட்பார். ரஜினி வேண்டுமென்றே, ‘ஒரு பையந்தான் இருக்கான். அடுத்தது ஒரு பெண் குழந்தையைக் கொடுன்னு வேண்டிக்கறதுக்காக வந்தோம்’ என்பார் ரஜினி.
அதுமட்டுமா? சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், மகனைப் போல் வளர்க்கும் பையனிடம், ‘டேய் பாபு, அங்கிளுக்கு டாட்டா சொல்லுடா’ என்று சிவகுமாரைப் பார்த்து சொல்லச் சொல்லி நக்கலடிப்பார். இந்தக் காட்சிகளுக்கும் வசனங்களுக்கும் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளிக்கொண்டு போனதெல்லாம் தனிக்கதை. படத்தை, மிக அழகாக, தெளிவாக, எல்லோரும் ரசிக்கும்படியாகவும் வியக்கும்படியாகவும் இயக்கியிருப்பார் எஸ்.பி.முத்துராமன்.


2.9.1977 அன்று ரிலீசானது ‘புவனா ஒரு கேள்விக்குறி’. படம் வெளியாகி, 42 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கு ரஜினிகாந்த், மாஸ் நடிகர், சூப்பர் ஸ்டார் நடிகர் என மிகப்பெரிய உச்சத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். ஆனால், ரஜினி மிகச்சிறப்பாக நடித்த படங்கள் என்று பட்டியலிட்டால், அது ரொம்பவே சின்னது. அந்தப் பட்டியலில், முக்கியமானதொரு இடம் ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்துக்கு உண்டு.


‘புவனா ஒரு கேள்விக்குறி’தான். ஆனால், ரஜினியின் ஆரம்பகாலப் படங்களில், மிகப்பெரிய ஆச்சரியக்குறியை உண்டாக்கிய படங்களில், இதுவும் ஒன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x