Published : 02 Sep 2019 05:16 PM
Last Updated : 02 Sep 2019 05:16 PM
பிக்பாஸ் நிர்வாகம், வனிதாவுக்கு மாற்றாகவே என்னை எண்ணி, உள்ளே அனுப்பியது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடையில் சென்று, சில நாட்களிலேயே திரும்பி வந்த கஸ்தூரி, தன்னுடைய தைரியமான, சர்ச்சைகள் நிறைந்த ட்விட்டர் கருத்துகளுக்குப் பெயர் போனவர். அதையே பிக்பாஸிலும் மக்கள் எதிர்பார்த்தனர், அது நடந்ததா, அந்நிகழ்ச்சியின் கொள்கைகள், எதிர்பார்ப்புகள், நிஜங்கள் என்ன? விரிவாகப் பேசுகிறார் கஸ்தூரி.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவுடன் எப்படி உணர்ந்தீர்கள்?
நான் பொய் சொல்வதில்லை, கலவையான உணர்வு இருந்தது, மிகுந்த நிம்மதியாகவும் மகிழ்வாகவும் இருந்தது. ஏனெனில் நான் சேரன் உள்ளே இருக்கவேண்டும் என்று விரும்பினேன். ஒன்று அவர் வெளியேறுவார், இல்லையெனில் நான் வெளியேற வேண்டும் என்று எண்ணினேன்.
நான் வெளியில் இருந்து பார்த்தவரை தர்ஷனுன் சாண்டியும் ஃபேவரிட்டாக இருந்தனர். உள்ளே சென்ற பிறகுதான் தெரிந்தது. அவர்களை வெளியே இருக்கும் மக்களுக்கு மட்டுமில்லை, உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கும் பிடிக்கிறது என்று.
இதில் பங்கேற்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்?
3 வருடங்களாக மறுத்த பிறகு, இந்த முறை ஒப்புக்கொண்டேன். ஏனெனில் நான் அப்போது கொஞ்சம் ஓய்வாக இருந்தேன். என்னால் மறுக்க முடியாத வகையில் என்னை அழைத்தனர். என்னை நானே சுய பரிசோதனை செய்துகொள்ளவும் விரும்பினேன்.
குறிப்பிட்ட சில ஒழுக்க நெறிமுறைகளைக் கடைபிடிக்க முடியாமா என்று தெரிந்துகொள்ளவே சென்றேன். அமைதியையும் தெளிவையும் எனக்குள்ளேயே கண்டுகொண்டேன்.
வெளியில் இருக்கும் கஸ்தூரியாகவே பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் இருந்தீர்களா?
இதைக் கமல் கேட்டார். எல்லோரும் கேட்கின்றனர். கஸ்தூரி, கஸ்தூரியின் வீட்டுக்குள் எப்படி இருப்பார் என்று யாருக்கும் தெரியாது, அவர்களுக்கு ட்விட்டரில் இயங்கும் 'பிராண்ட் கஸ்தூரி'யை மட்டுமே தெரியும். நான் கால்பந்து குறித்து எழுதுகிறேன் என்பதற்காக, வீட்டுக்குள் கால்பந்து விளையாட வேண்டுமா என்ன?
குறிப்பிட்ட ஒருவரின் அதிகாரம், புகழ் ஆகியவற்றைப் பார்க்காமல் தைரியமாக விமர்சிப்பவர் என்னும் பெயர் இருக்கிறது. ட்விட்டரில் கருத்து சொல்கிறேன்; விமர்சனம் வைக்கிறேன் என்பதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் கேட்கப்படும் முதிர்ச்சியற்ற அவதானிப்புகளுக்கு பதில் சொல்லவேண்டும் என்கிற அவசியமில்லை. நீங்கள் பார்க்க நேரிட்டவற்றுக்கு நான் பொறுப்பலல.
மக்களின் தவறுகளை மட்டுமே பூதக்கண்ணாடி வைத்து பிக்பாஸ் பார்ப்பது ஏன்?
அவர்கள் பெண்கள் மீதான வெறுப்பைக் கொண்டாடினர். இன்னும் அதைச் செய்கின்றனர்.
மக்கள் கஸ்தூரியை வனிதாவுக்கு மாற்று என்று எதிர்பார்த்தார்களா?
மக்களைப்பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் பிக்பாஸும் அதன் தயாரிப்பாளர்களும் அது மாதிரியான கடுமையான அணுகுமுறையைத்தான் என்னிடம் எதிர்பார்த்தனர். என்னுடைய ட்விட்டர் டைம்லைனை வைத்து அவ்வாறு தவறாக எண்ணி, அனுப்பினர்.
நீங்கள் என்னுடைய ட்விட்டர் பக்கத்தைப் பின் தொடர்பவர்களாக இருந்தால், சுமார் 10 ஆயிரம் ட்வீட்டுகளைக் காண வேண்டும். அதில் 3 ட்வீட்டுகள் வேண்டுமெனில் அரசியல் கருத்தாகவோ, விமர்சனமாகவோ இருக்கும். அவைதான் சர்ச்சையாக உருமாறி, செய்தியாகின்றன. அதனால் அப்படிப்பட்ட பிம்பம் ஏற்பட்டுவிட்டது.
மதுமிதா வெளியேற்றத்தின்போது எப்படி உணர்ந்தீர்கள்?
அப்போது எனது இதயம் நொறுங்கி விட்டது. அதுகுறித்துப் பேசுவதே கடினமாக இருக்கிறது. அந்த நாளில் அடிப்படை மனிதத் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். என்னுடைய மூளையில் முதலில் தோன்றியது மதுமிதாவுக்கு மருத்துவ உதவி வேண்டும் என்பதுதான்.
நான் முழுமையாக வெறுப்பவர்கள் எதாவது முட்டாள்தனத்தை செய்து, ஆபத்தில் இருந்தாலும் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்றுதான் தோன்றும். இரண்டாவதாக இதை மீண்டும் செய்யாதீர்கள் என்று சொல்லத் தோன்றும். கேலி செய்வதோ, கிண்டலுக்கு ஆளாக்குவதோ, அவர்களைக் குறிவைப்பதோ, விமர்சிப்பதோ, விலக்கிவைப்பதோ என்னுடைய அகராதியில் இல்லை. யாராவது ஆபத்தில் இருக்கும்போது, நீங்கள் அவரை எவ்வளவு வெறுக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை, அவர்களுக்கு என்ன செய்கிறீர்கள் என்பதுதான் அவசியம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார் என்று நினைக்கிறீர்கள்?
வெற்றி மட்டுமே அனைத்துமல்ல. சென்று சேரும் இடமும் அதற்கான பாதையும்தான் முக்கியம்.
படங்கள் எதிலாவது கமிட் ஆகியிருக்கிறீர்களா?
'தமிழரசன்', 'வெல்வெட் நகரம்' ஆகியவை வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றன. இந்த மாதத்தில் இன்னும் சில படங்கள் தொடங்கப்பட இருக்கின்றன. இவை தாண்டி கையில் கல்வி சம்பந்தமான ஒரு வேலையும் காத்திருக்கிறது.
இவ்வாறு கஸ்தூரி தெரிவித்தார்.
-ராஜஸ்ரீ தாஸ், தி இந்து (ஆங்கிலம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT