Published : 30 Aug 2019 05:19 PM
Last Updated : 30 Aug 2019 05:19 PM
கேங்ஸ்டர் குழுக்களுக்கு இடையில் மோதல் நிகழ்ந்தால் அதில் தனி ஒருவன் தன் சாம்ராஜ்ஜியத்தை நிறுவினால் அவனே 'சாஹோ'.
வாஜி நகரத்தில் கேங்ஸ்டராக வலம் வருகிறார் ராய் (ஜாக்கி ஷெராஃப்). அவரின் இடத்துக்கு வர பலரும் போட்டியிடுகின்றனர். மும்பையில் தன் மகனைப் பார்க்க வரும் ஜாக்கி, சக கேங்ஸ்டர் தேவராஜால் (சங்கி பாண்டே) கொல்லப்படுகிறார். அதற்கு காவல்துறை அதிகாரி பிரகாஷும் துணை போகிறார். இந்நிலையில் ஜாக்கியின் மகன் விகாஷ் (அருண் விஜய்) கேங்ஸ்டர் உலகத்துக்கு வருகிறார். அவரை ராயின் இடத்தில் வைத்துப் பார்க்க சிலர் மறுக்கின்றனர். இதனிடையே பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக அண்டர்கவர் போலீஸ் அதிகாரியாக அசோக் சக்கரவர்த்தி (பிரபாஸ்) வருகிறார். அங்கு அம்ரிதா நாயரைக் (ஷ்ரத்தா கபூர்) கண்டதும் காதலில் விழுகிறார். சில புத்திசாலித்தனமான நடவடிக்கைகளால் காவல் துறையை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.
கொள்ளை யாரால் ஏன் நடந்தது, ஜாக்கி ஷெராஃப்பின் நிஜ வாரிசு யார், ஜாக்கியின் இடத்தில் யார் வந்து சாம்ராஜ்ஜியம் செய்கிறார், நீல் நிதின் முகேஷ் திருடனா அல்லது போலீஸா, கேங்ஸ்டர் உலகமே தேடும் அந்த பிளாக் பாக்ஸ் ரகசியம் என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
சர்வானந்த் நடிப்பில் 2014-ம் ஆண்டில் 'ரன் ராஜா ரன்' படத்தை இயக்கிய சுஜித் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 'சாஹோ'வுடன் வந்திருக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் படமா இது? என்று யாராவது கேட்டிருப்பார்கள் போல. மனிதர் காட்சிக்கு காட்சி பில்டப், சண்டை என்று வஞ்சனை இல்லாமல் கொடுத்துள்ளார்.
பாகுபலியில் பார்த்து மிரண்ட பிரபாஸை சாஹோவில் பார்க்க முடியாதது ஏமாற்றம்தான். நடக்கிறார், ஓடுகிறார், பறக்கிறார், காரணம் இல்லாமல் மலையிலிருந்து கீழே குதிக்கிறார், நடனம் ஆடுகிறேன் என்று சிரமப்படுகிறார். ஆனால், நடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். படத்தின் ஒட்டுமொத்த பலமும் பிரபாஸாக இருக்கும்போது அவர் நடிப்பில் கவனம் செலுத்தாதது உறுத்தல்.
இந்தியில் திறமையான நடிகை என்று பெயரெடுத்த ஷ்ரத்தா கபூருக்கு இதில் நடிக்க வாய்ப்பில்லை. பாடல் காட்சிகளில் தாராளம் காட்டியுள்ளார். மற்றபடி வழக்கமான நாயகியாகவே வந்து போகிறார். மந்த்ரா பேடியும் படத்தில் இருக்கிறார். ஆனால், அந்த ட்விஸ்ட் வேஸ்ட்.
அருண் விஜய் யதார்த்தம் மீறாத பக்குவமான நடிப்பை வழங்கியுள்ளார். நுட்பமான அவரது பார்வையும் மேனரிஸமும் டானுக்கான கம்பீரத்துக்கு வலு சேர்க்கிறது. வெண்ணிலா கிஷோருக்கு போதுமான முக்கியத்துவம் இல்லை.
ஜாக்கி ஷெராஃப், லால், நீல் நிதின் முகேஷ், சங்கி பாண்டே, முரளி ஷர்மா, ஈவ்லின் ஷர்மா, சுப்ரீத், மகேஷ் மஞ்சரேக்கர், டின்னு ஆனந்த், பிரகாஷ் பெலவாடி ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.
மதியின் ஒளிப்பதிவில் வாஜி நகரமும் மும்பையும் பிரம்மாண்ட கட்டிடங்களும் காட்சிகளாக விரிகின்றன. படத்தின் ஆகப்பெரிய பலம் ஒளிப்பதிவு தான். தனிஷ்க், குரு ராந்த்வா, பாட்ஷா, ஷங்கர் எஷான் லாய் என நால்வர் இசையமைத்தும் பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. தேவையற்ற இடங்களில் வந்து வேகத்தடையாக நிற்கின்றன. ஜிப்ரானின் பின்னணி இசைதான் தொய்வைக் குறைக்க உதவியுள்ளது. ஸ்ரீகர் பிரசாத் பாடல்களுக்கும், மாஸ் சீன்களுக்கும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
''லேட்டா தெரிஞ்சுக்குறதுக்கு அவன் நம்மள மாதிரி போலீஸ் இல்ல...திருடன்'', ''சந்துல எவன் வேணாலும் சிக்சர் அடிக்கலாம் கிரவுண்ட்ல அடிக்க ஒரு கெத்து வேணும்'' போன்ற சில வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.
பாகுபலி 1, 2 படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடித்த படம் என்பதால் ஏற்பட்ட எதிர்பார்ப்பு அதிகம். ஆனால், சுமாரான திரைக்கதையால் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. மும்பையில் ஒரு அறையைத் திறந்தால் பாம்பு வருவதும், இன்னொரு அறையில் கருஞ்சிறுத்தை இருப்பதும், இன்னொரு பக்கம் மட்டன் ஸ்டால் வைத்திருப்பவர்கள் பிரபாஸைத் தாக்குவதும், ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்கள் பிரபாஸுடன் மல்லுக்கட்டுவதும் நம்பும்படியாக இல்லை. மாஸ் ஃபீல் வர வேண்டும் என்பதற்காக ஏகப்பட்ட சண்டைக்காட்சிகளைப் புகுத்தியிருப்பதும் படத்தின் பலவீனம். அதேபோல படத்தில் ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட் வைத்திருப்பதும் எடுபடவில்லை. லாஜிக் பிரச்சினைகளும் ஏராளம்.
பிரபாஸ் என்ற நாயகனுக்காக எதையும் பார்க்கத் தயார் என்றால் அவரின் ஆக்ஷனுக்கு ரசிகர் என்றால் 'சாஹோ'வைச் சந்திக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT