Published : 29 Aug 2019 12:36 PM
Last Updated : 29 Aug 2019 12:36 PM

’வா மச்சான் வா... வண்ணாரப்பேட்டை...’ - ‘வண்டிச்சக்கரம்’ படத்துக்கு 39 வயது

வி.ராம்ஜி


சில படங்கள் பொழுதுபோக்கு அம்சங்களால், நமக்குப் பிடித்துப் போகும். இன்னும் சில படங்கள், நம் வாழ்க்கையையோ எங்கோ, யாரோ வாழும் வாழ்க்கையையோ எடுத்துச் சொன்ன விதத்தில், நம் மனம் கவர்ந்திருக்கும். அப்படி மனம் கவர்ந்த படங்களில், ‘வண்டிச்சக்கரம்’ படமும் ஒன்று.


கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள மிகப்பெரிய மார்க்கெட்டையும் அங்கே வாழும் தமிழர்களின் வாழ்வியலையும் அவர்களுக்குள் இருக்கிற பொருளாதார ஏக்கங்களையும் பதிவு செய்த படம்தான் ‘வண்டிச்சக்கரம்’. வண்டிச்சக்கரமென்றால் வண்டிச்சக்கரமா... இது நம் வாழ்க்கைச் சக்கரம். அதுதான் கதை.


மார்க்கெட்டில், மாமூல் வாங்கிப் பிழைக்கும் ரெளடி கஜா. அந்த கஜாதான் சிவகுமார். அவருக்கு ஒரு அல்லக்கை. அவர்தான் வினுசக்ரவர்த்தி. அந்த மார்க்கெட்டை ஒட்டிய குடிசைப் பகுதியில் வசிக்கும் வடிவுதான் நாயகி. அவர்... சரிதா. தலையில் சும்மாடும் அதன்மேல் கூடையும் கூடையில் சாப்பாட்டு கேரியரும் எடுத்துச் சுமந்து சென்று பிழைப்பவள். சரிதாவின் தாத்தா சாமிக்கண்ணு, கை வண்டியில் லோடு ஏற்றிச் சென்று, பிழைப்பவர்.


மார்க்கெட்டுக்கு அருகில் உள்ள பணக்காரக் குடியிருப்புகளின் ஒன்றில் வசிக்கும் வெளியூர் கல்லூரி வாத்தியார் (பேராசிரியர்) சிவசந்திரன். இவர் வீட்டிலும் வேலை பார்ப்பார் சரிதா. அந்த ஊரில், இஷ்டத்துக்கு கதையளந்து ஏதேதோ விற்று, காசு பார்க்கும் சுருளிராஜன். திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு பகட்டாக வாழும் சிஐடி சகுந்தலா.


அந்தப் பகுதியில் சாராயக்கடை வைத்திருப்பவர் சிலுக்கு. அவர்தான் சிலுக்கு ஸ்மிதா என்று சொல்லவும் வேண்டுமா என்ன?
இவர்கள்தான் கதை மாந்தர்கள். இவர்களைச் சுற்றித்தான் ‘வண்டிச்சக்கரம்’ சுழலும்.


மாமூல் வாங்கிப் பிழைப்பு நடத்தும் சிவகுமாரை சரிதாவுக்கு சுத்தமாகப் பிடிக்காது. சுருளிராஜனும் சிஐடி சகுந்தாலும் சேர்ந்து திருடுவார்கள். இது கலகலப்புச் சேர்ப்பு. சிலுக்கு போர்ஷன். இது கிளாமருக்கு. ஆனாலும் படத்தினூடே வராமல், இவையெல்லாம் சேர்ந்தே பயணிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். சுருளிராஜன் அந்தக் கடைக்குள் இரவெல்லாம் இருந்துகொண்டு அடிக்கும் லூட்டி, ஆரம்பத்தில் சிரிக்கவைத்தாலும் போகப்போக, போரடிக்க வைத்துவிடும். இரண்டே இரண்டு மணி நேரப் படத்துக்கு, இந்தக் காமெடி சற்றே நீளம்தான்.


கல்லூரி வாத்தியார் சிவசந்திரனுக்கு சரிதாவைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று உள்ளுக்குள் ஆசை. ஆனால் தயக்கம். இந்தநிலையில், சரிதாவின் தாத்தா இறந்துவிடுவார். அவருக்கான காரியங்களையெல்லாம் சிவகுமார்தான் செய்வார். குடிசைகளை காலி செய்யச் சொல்லும் அரசாங்கம். அப்போது சரிதாவை தன் வீட்டுக்கு அழைத்து வருவார் சிவகுமார். பிறகு ஒருகட்டத்தில் சிவகுமாரும் சரிதாவும் திருமணம் செய்துகொள்ளும் நிலை ஏற்படும்.


இதன் பிறகு ரெளடித்தனத்தில் இருந்தும் மாமூல் வாங்கிக் கொண்டிருந்த மாமூல் வாழ்க்கையில் இருந்தும் விலகுவார். உழைக்க முனைவார். கை வண்டி இழுப்பார். ஆனால் அதுவரை அவர் மீதிருந்த பயமும் மரியாதையும் விலகும். ஏளனமாகப் பார்ப்பார்கள்.


ஒருநாள்... சிவகுமாருக்கும் அங்கே உள்ள ரவுடி ஜக்குவுக்கும் சண்டை. அப்போது சரிதாவை ஏளனமாகப் பேசிவிடுவான். சிவகுமாரும் கத்தியை எடுத்துக் குத்திவிடுவார். போலீஸ் அரெஸ்ட் செய்துவிடும்.


முன்பு, சோத்துக்கூடையை தூக்கிக் கொண்டு சம்பாதித்து வந்த சரிதாவை, இனி வேலைக்குச் செல்ல வேண்டாம் என சிவகுமார் தடுத்திருப்பார். இப்போது சிவகுமார் ஜெயிலுக்குப் போன நிலையில், பரணில் இருந்து மீண்டும் சோத்துக்கூடையை எடுத்துக்கொண்டு சாலையில் நடந்து செல்வார் சரிதா. அத்துடன் படம் நிறைவுறும். அவளின் வாழ்க்கை எனும் ’வண்டிச்சக்கரம்’ நிற்காமல், சுழன்று கொண்டே இருக்கும்.


சாஃப்ட் கேரக்டர் செய்யும் சிவகுமாருக்கு இதில் ரெளடி கேரக்டர். முரடன் கதாபாத்திரம். அற்புதமாகச் செய்திருப்பார். சரிதா நடிப்பு ராட்சஷி. எந்தக் கேரக்டராக இருந்தாலும் அதில் தன்னைப் பொருத்திக் கொண்டு, அசுரத்தன நடிப்பை வெளிப்படுத்திவிடுவார். இதிலும் அப்படித்தான். சோத்துக்கூடை வடிவாகவே மாறியிருப்பார்.


பாடல்களைப் புலமைப்பித்தன் எழுத, சங்கர்கணேஷ் இசையமைத்தார்கள். ‘ஒரு தை மாசம் வந்தாச்சு நேத்து’ என்றொரு பாடல். ‘தேவி வந்த நேரம்’ என்றொரு பாடல். முக்கியமாக, ‘வா மச்சான் வா, வண்ணாரபேட்டை’ பாடல். அப்போது இந்தப் பாடல் ஒலிக்காத தெருக்களோ டீக்கடைகளோ இல்லை. பாட்டுக் கச்சேரிகளில், இந்தப் பாடலை எப்போது பாடுவார்கள் என ரசிகர்கள் காத்திருந்து விசிலடித்து உற்சாகமடைந்ததெல்லாம் நடந்தது. சாமிக்கண்ணு பாட்டை ஆரம்பிக்க, சுருளிராஜன் பாட... அதற்குத் தகுந்தது போல, எஸ்.பி.பி. தன் குழைவுக்குரலாலும் குசும்புக் குரலாலும் பின்னிப்பெடலெடுத்திருப்பார். தன் பாணியையெல்லாம் கடந்து. இந்தப் படத்துக்குத் தகுந்தபடி கதையை உள்வாங்கிக் கொண்டு, மிக அழகாக இயக்கியிருப்பார் இயக்குநர் கே.விஜயன்.

இன்னொரு கொசுறு தகவல். அப்போதெல்லாம் இரண்டரை மணி நேரம், இரண்டே முக்கால் மணி நேரம் என படங்கள் ஓடும். ஆனால் ‘வண்டிச்சக்கரம்’ இரண்டு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஓடும். இதையெல்லாம் எண்பதுகளின் ரசிகர்கள், பிரமிப்பாகச் சொல்லிப் பேசிக்கொண்டார்கள்.
கஜாவின் அல்லக்கையாக வினுசக்ரவர்த்தி, அசால்ட் பண்ணியிருப்பார். இந்தப் படத்துக்கு கதை வசனம் இவர்தான்.
பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு கச்சிதம். விவேகானந்தா பிக்சர்ஸ் தயாரித்த படம் இது. 1980ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி இந்தப் படம் ரிலீசானது. படம் வெளியாகி, இன்றுடன் 39 வருடங்களாகின்றன.


சிவகுமாரின் ஹிட் லிஸ்ட் படங்களில் இதுவும் ஒன்று. சரிதாவின் ஆகச்சிறந்த நடிப்பில் வந்த படங்களில் வண்டிச்சக்கரமும் ஒன்று. தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஸ்மிதா, சில்க் ஸ்மிதாவாக அறிமுகமாகி, ஆண் பெண் வித்தியாசமில்லாமல் மனங்களில் இடம் பிடித்ததற்குக் காரணமும் இந்தப் படம்தான்.


இந்த உலகம் இன்னும் எத்தனை ஆண்டுகள் சுற்றிச் சுழன்றாலும், சிவகுமார், சரிதா, வினுசக்ரவர்த்தி, சிலுக்கின் ‘வண்டிச்சக்கரம்’ சுழன்றுகொண்டேதான் இருக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x