Published : 29 Aug 2019 12:09 PM
Last Updated : 29 Aug 2019 12:09 PM
கார்கில் போரின்போது பல இந்திய ராணுவ வீரர்களைக் காப்பாற்றிய பெண் ராணுவ பைலட் குஞ்ஜன் சக்சேனாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி - போனிகபூர் தம்பதியின் முதல் மகள் ஜான்வி கபூர். ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின், ஜான்வி நடிப்பில் முதல் படமான 'தடக்' வெளியானது. 'தடக்' படத்தின் இணைத் தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோஹர், ஜான்வியை வைத்து மீண்டும் படம் தயாரித்துள்ளார்.
’குஞ்ஜன் சக்சேனா - தி கார்கில் கேர்ள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் பெண் ராணுவ பைலட் குஞ்ஜன் கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்கிறார். குஞ்ஜன் சக்சேனா கார்கில் போர் சமயத்தில் காயம்பட்ட எண்ணற்ற இந்திய ராணுவ வீரர்களைப் பாதுகாப்பாக இடம் மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர். சவுர்ய சக்ரா விருது பெற்ற முதல் பெண்ணும் இவரே. இவரது வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படம் இது.
படத்தின் முதல் பார்வை போஸ்டரைப் பகிர்ந்த கரண் ஜோஹர், "பெண்ணால் பைலட் ஆக முடியாது என்றார்கள். ஆனால், உறுதியாக இருந்து பறக்க வேண்டும் என்று விரும்பினார்!. 'குஞ்ஜன் சக்சேனா - தி கார்கில் கேர்ள்’, மார்ச் 13, 2020 அன்று வெளியாகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்துக்காக ஜான்வி தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டதோடு, 6 கிலோ எடை குறைத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஷரன் சர்மா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் பங்கஜ் திரிபாதி, வினீத் குமார் சிங், அங்காத் பேடி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment