Published : 29 Aug 2019 10:59 AM
Last Updated : 29 Aug 2019 10:59 AM
'பிகில்' படப்பிடிப்பில் பெரும்பாலான நேரம் 1000 பேர் வரை தளத்தில் இருந்ததாகவும், 200 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது என்றும் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அட்லீ - விஜய் இணையின் மூன்றாவது படம் 'பிகில்'. இதில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. கால்பந்து விளையாட்டை மையாமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படம் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தைப் பற்றிய செய்திகள் சரியாக வராதது குறித்து ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை காட்டமாக வெளிப்படுத்தி வந்தனர்.
இதற்கு பதில் சொல்லும் வகையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:
" 'பிகில்' எங்கள் கனவுப் படம். எங்கள் இதயத்தையும், ஆன்மாவையும் அர்ப்பணித்து உழைத்திருக்கிறோம். நம் தளபதி படப்பிடிப்புக்கு கிட்டத்தட்ட 150 நாட்கள் கொடுத்தார். 200 நாட்கள் இடைவெளி இன்றி படப்பிடிப்பு நடந்தது. 400 தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் அதிகமானோர் இதில் பணியாற்றியுள்ளனர். 80 சதவீதப் படப்பிடிப்பில் கிட்டத்தட்ட 1000 பேர் தளத்தில் இருந்தனர்.
ஒரு தயாரிப்பு நிறுவனமாக எங்கள் முதல் கடமை, படப்பிடிப்பில் எந்தப் பிரச்சினையும் இன்றி பார்த்துக் கொள்வது. எங்கள் இயக்குநர் அட்லீ, இதுவரை நீங்கள் பார்க்காத பிரம்மாண்டத்தில் ஒரு விளையாட்டு சம்பந்தமான படம் எடுக்க வேண்டும் என்று கனவு வைத்திருந்தார். எங்களால் முடிந்தவரை அந்தக் கனவுக்கு ஆதரவு அளித்துள்ளோம்.
ஒரு தளபதி ரசிகராகப் பார்க்கையில் இந்தக் காத்திருப்பு அதிகம் தான். எரிச்சல் தரக்கூடியதும் கூட. ஆனால் எல்லா நாட்களும், 24 மணிநேரமும், எதிர்பார்ப்புகளையும் மீறி சிறந்த உழைப்பை உங்கள் அணி தந்திருக்கும் அதே வேளையில், சமூக ஊடகங்களில் சில விஷயங்கள் எங்கள் மனங்களைச் சோர்வடையச் செய்கிறது.
படம் பற்றிய புதிய செய்திகள் வர வேண்டும் என்றால் அதற்கான விஷயங்கள் தயாராக இருக்க வேண்டும். அந்த விஷயங்கள் உங்கள் எதிர்பார்ப்பை விஞ்சியதாக இருக்க வேண்டும். அதனால்தான் இந்தத் தாமதம். எனவே உங்கள் காத்திருப்புக்கு நன்றி. எங்கள் அனைவருக்கும் உங்கள் ஆதரவு, நல்லெண்ணம், ஊக்கம் தேவை. புதிய செய்தியைப் பகிரும் முன் இந்த விஷயத்தைப் பேசி தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைத்தேன்".
இவ்வாறு அர்ச்சனா கல்பாதி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT