Published : 27 Aug 2019 12:16 PM
Last Updated : 27 Aug 2019 12:16 PM
ஜிடி கஸ்தூரி. பூக்கார பாட்டி, பஜ்ஜி கடை பாட்டி, இட்லி கடை பாட்டி என நடித்திருக்கும் தமிழ் சினிமாவின் அத்தியாவசிய துணை நடிகை. 68 வயதான கஸ்துரி இதுவரை 700 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். முத்து, அறை எண் 305ல் கடவுள், எங்கேயும் எப்போதும், மெட்ராஸ், இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா என பல படங்களில் இவரைப் பார்த்திருக்க முடியும்.
"நான் நடித்த படங்களின் பெயர்களைச் சொல்ல எனது டைரியைப் பார்க்க வேண்டும். எல்லாமே நல்ல கதாபாத்திரங்கள் தான். ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததைத்தான் முக்கியமாக நினைக்கிறேன். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வந்து அந்தக் கனவுகள் உடைந்து போனவர்கள் பலர். எனக்கு இந்த வயதிலும் நடிக்க வாய்ப்பு வருகிறது. அந்த ஒவ்வொரு வாய்ப்புக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
நான் 25 வருடங்களாக நடித்து வந்தாலும் அவ்வளவாகப் பணம் சம்பாதிக்கவில்லை. ஆனால் நான் எங்குச் சென்றாலும் மக்கள் என்னிடம் பேசுகின்றனர். அதுவே எனக்கு மகிழ்ச்சி" என்கிறார் கஸ்தூரி.
மோசமான திருமண வாழ்க்கை வேண்டாம் என உதறிவிட்டு, 30 வருடங்களுக்கு முன்னால் வேலூரின் அரியூர் குப்பத்திலிருந்து தனது 10 வயது பெண் குழந்தையுடன் சென்னை வந்தவர் கஸ்தூரி.
"எனக்காகவும், என் குழந்தைக்காகவும் என்னால் நிறையச் செய்து சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. என்னால் சமைக்க முடியும், தையல் வேலை தெரியும், நெய் வியாபாரத்தில் பரிச்சயம் உள்ளது. மாதவரத்திலிருந்து வெண்ணெய் கொண்டு வந்து நெய் வியாபாரம் செய்து வந்தேன். ஒரு நாள், ஆல் இந்தியா ரேடியோவில் பணிபுரியும் என் வாடிக்கையாளர் ஒருவர், எனது குரல் நன்றாக இருப்பதால் ஒரு வானொலி நாடகத்தில் என்னை நடிக்க வைத்தார். கமலா என்ற கதாபாத்திரத்தில் நான் பேசினேன்."
பிறகு நாடகக் குழுவில் சேர்ந்து தொடர்ந்து சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார் கஸ்தூரி. இன்று அவர் நடிகர் சங்கத்தின் உறுப்பினர். தற்போது ஒரு மெகா சீரியலிலும் நடித்து வருகிறார். மயக்கம் என்ன தான் தன்னை பிரபலப்படுத்தியது என்று நம்புகிறார் கஸ்தூரி.
"அதுதான் என்னை இளைஞர்களிடம் பரிச்சயமாக்கியது. ஒரு முறை தனுஷ் என்னைப் பார்த்து, என்ன பாட்டி, என்னை தெரியுதா? என்று கேட்டார். உங்களை எப்படி மறக்க முடியும் என்று நான் அவரைக் கேட்டேன்" என்று சொல்லிச் சிரிக்கிறார்.
"ஒரு முறை மோகன்லால் என்று யாரோ ஒருவரின் அலுவலகத்திலிருந்து தொடர்ந்து தொலைப்பேசி அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன. அது யார் என்னவென்றே எனக்குத் தெரியாததால் அந்த அழைப்புகளை நான் ஏற்கவில்லை. இங்கு ரஜினிகாந்த் போல மலையாளத்தில் அவர் பெரிய நட்சத்திரம் என்று யாரோ பிறகு சொன்னார்கள். அதன் பின் தான் லூசிஃபர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்" என்கிறார் கஸ்தூரி.
எந்த கதாபாத்திரத்துக்காகவும் கஸ்தூரி தன்னை தயார் செய்து கொள்வதில்லை. எப்போதும் போல உடையணிந்து, அந்த கதாபாத்திரம் பேசுவது போலப் பேசுவேன் என்கிறார். ஒரு கதாபாத்திரத்துக்கு 1,500 ரூபாய் வரை அவருக்குக் கிடைக்கிறது. தேனாம்பேட்டையில், வாடகை வீட்டில், தானே சமைத்துச் சாப்பிட்டு வருகிறார். இது தான் கனவு கண்டதை விடப் பெரிய வாழ்க்கை என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
அகிலா கண்ணதாசன், தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT