Published : 15 Aug 2019 02:57 PM
Last Updated : 15 Aug 2019 02:57 PM

பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’க்கு 34 வயது!

வி.ராம்ஜி

சில கதைகளைச் சொல்லும் போது, சில படங்களைப் பற்றி பேசும் போது, கத்தி மேல் நடக்கிற விஷயம் என்பார்கள். அப்படியொரு கத்தி மேல் நடந்து வித்தை காட்டிய இயக்குநர்கள் ஏராளம். அவர்களில், இயக்குநர் பாரதிராஜாவுக்கு தனியிடம் உண்டு. தன் ஒவ்வொரு படங்கள் மூலமாகவும் தன் படத்துக்கான ரசிகக் கூட்டத்தின் வட்டத்தை பெரிதுபடுத்திக் கொண்டே போன பாரதிராஜா, அந்தப் படத்தின் மூலமாக, வட்டத்தை ஏக்கர் கணக்கில் பிரமாண்டப்படுத்தினார். அவரின் மண்ணும் மனசுமான இன்னொரு படைப்பாக வந்த அந்தத் திரைப்படம்... ‘முதல் மரியாதை’.


‘இவர் ஏற்று நடிக்காத வேடங்களே இல்லை’ என்று சிவாஜியைச் சொல்லுவார்கள். உண்மைதான். எத்தனையெத்தனையோ கேரக்டர்களில் வெளுத்து வாங்கியவர். கதைக்கும் கேரக்டருக்கும் உயிர் கொடுத்து, கட்டபொம்மனையும் வ உ சியையும் அப்பர் பெருமானையும் சாக்ரடீஸையும் வீரசிவாஜியையும் அவ்வளவு ஏன்... அந்த சிவபெருமானையே நம் கண் முன்னே காட்சி தரச்செய்த உன்னதக் கலைஞர் சிவாஜி. அப்பேர்ப்பட்ட சிவாஜி எனும் நடிப்பு இமயத்துடன் இயக்குநர் இமயம் கைகோர்த்து, மணக்க மணக்க தந்ததுதான் ‘முதல் மரியாதை’.

‘சிவாஜியுடன் நடிக்கவேண்டும்’ என்று நடிகர் நடிகைகள் ஆசைப்படுவார்கள். ‘சிவாஜியை வைத்து ஒரு படமாவது இயக்கிவிட வேண்டும்’ என இயக்குநர்கள் விரும்புவார்கள். யானையை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் அதற்கு தீனி போடவேண்டுமே. வெறும் சோளப்பொரி, யானை வயிற்றின் ஒரு மூலைக்குக் கூட தேறாது. தீனி வைத்திருந்தால்தான் யானை சாத்தியம். அப்படியொரு கதைத் தீனியுடன், யானையையே வித்தியாசமாகக் காட்டியதுதான் ‘முதல் மரியாதை’.

‘மேரி’யாக வந்த இளம்குமரிக்கு, ‘குயில்’ என்றொரு கேரக்டர்... குருவி தலையில் பனங்காய்தான். ஆனால் மேரியைக் குயிலாக்கி, அந்தக் குருவியை சிட்டுக்குருவியாக்கி, பனங்காயையே பழுக்கச் செய்த மந்திர வித்தையும் செப்படிவித்தையும் பாரதிராஜாவுக்கு, கைவந்த கலை. அவரின் கைவண்ணத்தில், அவரின் இருகரம் கூப்பிய கரங்களுடனும் கரகரத்த குரலுடனும்... ‘ஒவ்வொரு கிராமத்திலும் ஏதோவொரு புல்லாங்குழல், வார்த்தைக்கு வராத சோகத்தை வாசித்துக்கொண்டுதான் இருக்கும். அப்படியொரு சோக ராகத்தைத்தான் ஸ்வரம் பிரித்தேன். அதையே உங்கள் பார்வைக்கு படம்பிடித்தேன்’ என்கிற ஆரம்பத்துடன்... வந்து, நம் மனசின் சோகங்களையெல்லாம் தூக்கிப்போட்டார். பிறகு, அந்தக் கிராமத்தின் மென் சோகங்களையெல்லாம் நம் மனசுக்குள் திணித்துத் தைத்தார். அந்த வலிக்கு மருந்தும் தடவினார். பாரதிராஜா தடவிய அந்த மருந்துதான்... ‘முதல் மரியாதை’.

ஊர்ப்பெரியவருக்கும் பரிசல்காரிக்கும் நடுவே ஏற்படுகிற நட்பும் பிரியமும் பேரன்பும் மொட்டுவிட்டு, உள்ளங்கைக்குள் காதலென மலர்ந்து பொத்தி வைத்திருப்பதும், அது ஊருக்கும் உறவுக்கும் தெரியவருவதும் அதன் பிறகு என்ன என்பதும்தான் கதை. நம்மூர் பாஷையில் சொல்லவேண்டும் என்றால், ‘இருபதுக்கும் ஐம்பதுக்குமான காதல்’தான் ‘முதல் மரியாதை’. ஆனால் வேறொரு பாஷையில் சொன்னதால்தான், அது காவியமானது. அந்த பாஷை... பாரதிராஜா பாஷை.

சிவாஜியின் மனைவி வடிவுக்கரசி. ஆனால் பேருக்குத்தான் இந்த உறவு. ஊருக்காகத்தான் இப்படியொரு இணைப்பு. குடும்ப மானம் காக்கத்தான் இந்தப் பிணைப்பு. அந்த ஊருக்கு பஞ்சம் பிழைக்க தன் அப்பனுடன் வருகிறாள் குயில். அன்பு கிடைக்காமல் பஞ்சத்துடன் இருக்கும் ஊர்ப்பெரியவருக்கு வள்ளலென அன்பை அள்ளியள்ளித் தருகிறாள். அதில், மனம் நெகிழ்ந்து, குளிர்ந்து, நெக்குருகிப் போகிறார் அவர்.
எங்கோ தடுமாறியதன் பலன் வடிவுக்கரசிக்கு மகள். நடிகை அருணா. அவளின் கணவனோ களவாணிப்பயபுள்ள. ஊர்ப்பெரியவர் மலைச்சாமிதான் இமய நடிகர் சிவாஜிகணேசன். அவரின் சகோதரி மகன், விடலைப்பையன். ஊரில், செங்கோடன் என்பவனுக்கு செருப்பு தைப்பதுதான் தொழில். அவளின் அழகு மகள் சிவந்திக்கும் அந்தப் பயலுக்கும் லவ்வு. இது ஒருபக்கம். நமக்கு வழக்கமான, பழக்கமான பாரதிராஜாவின் காதல் எபிசோடுகள்.



வீட்டில் கிடைக்காத அன்பை, வாய்க்காலிலும் வரப்புகளிலும் குருவிகளிடமும் தேடுகிறார்; பாடுகிறார். குயிலிடமும் அப்படித்தான். அங்கே, இவர்களின் சந்திப்புகளை, ஊரில் கயிறுதிரிக்கும் ஜனகராஜ், திரித்துத்திரித்து வடிவுக்கரசியிடம் சொல்கிறார்.

இத்தனையையும் சொல்லிவிட்ட நிலையில், குயிலைச் சொல்லாவிட்டால் எப்படி?

அந்தக் குயில்தான் ராதா. அவரின் நடிப்புலகப் பயணத்தில், இப்படியொரு கனமான பாத்திரத்தை அதுவரை ஏற்கவில்லை அவர். சிவாஜிக்கு ஜோடியாக மட்டுமல்ல... இணையாகவும் நடித்திருப்பார். ராதா பரிச்சயமான, பிடித்த நடிகை. அதேபோல், பிடித்தமான, பிரியமான நடிகை ராதிகா. ஆனாலும் ராதாவுக்கு ராதிகாவின் குரல் கொடுக்க வைத்த துணிச்சலும் தைரியமும் பாரதிராஜாவுக்கே உரித்தானது.
மனசின் துக்க ஏக்கங்களைச் சொல்லிக் கொண்டே இருக்கிற வேளையில் திடுக்கென ஓர் ட்விஸ்ட். ராதா கொலை செய்திருப்பார். கொலையாளியை நமக்குத் தெரியும். அது சத்யராஜ். கதைப்படி ஊருக்குத் தெரியாது, யாரென்று. கூட்டத்தின் நடுவிருந்து எட்டிப் பார்க்கும் வடிவுக்கரசி, பார்த்ததும் பதைத்துப் போவார். அதிர்ந்து போவார். அப்படியே பின்வாங்குவார். போலீஸ் அங்கிருப்பவர்களைத் துரத்தும். பசங்களெல்லாம் தண்ணீரில் கால் வைத்து ஓடுவார்கள். அந்தத் தண்ணீர், வடிவுக்கரசியின் நெற்றியில், நெற்றிப் பொட்டில் வந்து விழும். பொட்டு கரையும். வடிவுக்கரசியின் காதலன் சத்யராஜ் என்பதையும் வடிவுக்கரசியின் மகளுக்கு அப்பா அவர்தான் என்பதையும் இந்த ஒரு ஷாட்டில், எந்த வசனமும் இல்லாமல் நமக்கு உணர்த்திவிடுவார்.

தான் மனதுக்குள் முதல் மரியாதை கொடுத்து வரும் சிவாஜியின் மனைவியுடைய காதலன் ஊருக்கு, பரிசலில் வருகிறான். அவன் ஊருக்குள் நுழைந்தால், சிவாஜியின் மானம் மரியாதையே போய்விடும் என்பதால், அவனைக் கொன்று போடுகிறார் ராதா.

‘நம் குடும்பத்தைக் காப்பாத்துற குலசாமி நீதாம்பா’ என்று தன் மாமன், காலில் விழுந்து கேட்டதற்காக, வடிவுக்கரசியைக் கல்யாணம் செய்து கொள்கிறார் சிவாஜி. மாமா, கால் தொட்டு வேண்டிக்கொண்டதால்,அன்று முதல் செருப்பு அணிவதையே தவிர்க்கிறார்.

சாதியெல்லாம் பார்க்காமல், தன் தங்கை மகன் தீபனுக்கும் செருப்பு தைப்பவரின் மகள் ரஞ்சனிக்கும் திருமணம் செய்துவைக்கிறார். தன் மகள் அருணாவின் கணவன் ராமநாதன், ரஞ்சனியின் நகைகளுக்கு ஆசைப்பட்டு, அறுத்தெடுக்கிறான். அவனுடைய கட்டைவிரலை, வாயால் கவ்விக்கொள்கிறாள். அவளிடம் இருந்தும் ஊரிடமிருந்தும் தப்பிக்க, தன் கட்டைவிரலையே வெட்டிவிட்டு ஓடுகிறான். இதெல்லாம் தெரிந்ததும் தன் மருமகப்புள்ளையை போலீசில் பிடித்துக் கொடுக்கிறார் சிவாஜி. இவையெல்லாம் கதையோட்டம் அல்ல. மனித வாழ்வியலின் உயிரோட்டங்கள்.



சிவாஜியின் மனைவியாக வடிவுக்கரசி. கறைப்பல்லும் அந்தக் கறையின் வழியே தெறித்து வழிகிற பழமொழிகளும் அந்தப் பழமொழிக்குள் இருக்கிற நச்சு வார்த்தைகளுமாக அசாத்திய நடிப்பை, அசால்ட்டாகத் தந்திருப்பார். இன்னும் உயரம் தொடவேண்டியவர் வடிவுக்கரசி. ராட்சச நடிப்புக்குச் சொந்தக்காரர். இதிலும் பிரம்ம ராட்சஷிதான்.

ராதாவுக்காக சிவாஜி ஆடு விலை பேசி விற்கும் காட்சியாகட்டும். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதாகட்டும். ‘நம் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடுபவள் இவள்தானா? ‘அட நீதானா அந்தக்குயில் என்று நெக்குருவதாகட்டும்’, ஊரைவிட்டு ஓடிப்போக முயல்கிற காதல் ஜோடியை வெட்டப் புறப்படுவதும், அப்போது ராதாவின் கேள்விகளால், அரிவாளின் முனையும் அவரின் கோபமும் மழுங்கிப் போவதாகட்டும், ‘நான் எனக்காக சாப்பிடல. உனக்கு வவுறு வலிக்கக்கூடாது பாரு. அதுக்காகத்தேன்’ என்று சப்புக்கொட்டி சாப்பிடுகிற த்வனியாகட்டும்... 1952ம் ஆண்டு தொடங்கிய சிவாஜியின் பயணத்தில்... 1985ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வந்த ‘முதல் மரியாதை’ சிவாஜி... புது சிவாஜிதான்!

ஆர்.செல்வராஜின் கதையும் கனம். வசனமும் ஆழம். வழக்கம் போல், கண்ணனின் கேமிராக்கண்கள், கவிதை எழுதியிருக்கும். ‘ஏ கிளியிருக்கு’, ‘ஏறாத மலை மேல’, ‘ஏ குருவி...’, ‘பூங்காத்து திரும்புமா’, ‘அந்த நிலாவைத்தான் நான் கைல புடிச்சேன்’, ‘வெட்டி வேரு வாசம்’, ‘ராசாவே உன்ன நம்பி’ என்று ‘முதல் மரியாதை’க்கு தன் இசையால் மரியாதை செய்திருப்பார் இசைஞானி இளையராஜா. இமய நண்பனுக்கும் இமய நடிகருக்குமான மரியாதை அது.

வைரமுத்து மட்டும் என்ன... பாட்டு வரிகளெல்லாம் வைரங்கள்; முத்துக்கள்.

அப்போதெல்லாம் கேசட்டுகளின் காலம். ரிக்கார்டும் உண்டு; கேசட்டும் வரும். ‘முதல் மரியாதை’ கேசட்... விற்பனையிலும் மிகப்பெரிய மரியாதையைப் பெற்றுத்தந்தது. ‘என் இனிய தமிழ் மக்களே’ என்று பாரதிராஜாவின் முன்னுரையுடன் தொடங்கி... பின்னர் வைரமுத்துவின் வரிகளும் அவரின் குரலும் நம்மை மயக்கிப்போடும். அப்போது, டீக்கடைகளிலெல்லாம், தேநீர்ச்சுவையுடன் இந்தப் பாடல்களையும் போட்டுக் கலந்து தருவார்கள். ‘ஆனால் ஒரு சந்திரனைப் பார்த்து, தாமரை மொட்டு, அவசரப்பட்டு, அவிழ்ந்துவிடுகிறது. சந்திரன் சபைக்கு வருகிறது. தாமரை செய்த குற்றத்துக்கு சந்திரனுக்கு தண்டனையா?’ என்று வைரமுத்து கம்பீரக்குரலில் சொல்லியதை அடுத்து, ‘ராசாவே உன்ன நம்பி’ பாடல் ஒலிக்கும். அந்தக் கால ரசிகர்களுக்கு வாய்ப்பாட்டு கூட மறந்திருக்கும். இவை அப்படியே நினைவில் கல்வெட்டென பதிந்திருக்கும்.

1985ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியானது பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’. தீபாவளியையும் தாண்டி சக்கைப்போடு போட்டது. இன்றைக்குத்தான் படம் வெளியான நாள். கிட்டத்தட்ட, படம் வெளியாகி, 34 வருடங்களாவிட்டன. 35 வது வருடம் ஆரம்பித்துவிட்டது. இன்னும் எத்தனை வருடங்களானாலும் கூடிக்கொண்டே இருக்கும் ‘முதல் மரியாதை’க்கான மரியாதை.

ஏனெனில்... இது சிவாஜியின் ‘முதல் மரியாதை’.
ராதாவின் ‘முதல் மரியாதை’.
இளையராஜாவின் ‘முதல் மரியாதை’.
வைரமுத்துவின் ‘முதல் மரியாதை’.
மொத்தத்தில்... பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x