Published : 11 Aug 2019 02:23 PM
Last Updated : 11 Aug 2019 02:23 PM

இந்திய அளவில் ட்ரெண்டான ரஜினியின் ‘பாட்ஷா’

ரஜினியின் ‘பாட்ஷா’ இன்று (ஆகஸ்ட் 11) சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டதால், இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனது.

ரஜினி நடிப்பில் 1995-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி ரிலீஸான படம் ‘பாட்ஷா’. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில், ஹீரோயினாக நக்மா நடித்தார். ரகுவரன், ஜனகராஜ், தேவன், விஜயகுமார், ஆனந்த் ராஜ், சரண் ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
பிளாக் பஸ்டர் ஹிட் படமான இது, ஒரு வருடத்துக்கும் அதிகமாக கிட்டத்தட்ட 15 மாதங்கள் வரை திரையரங்கில் ஓடியது. ரஜினியின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது இந்தப் படம். ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி, எல்லாத் தரப்பினரையும் கவர்ந்த படம் என்ற பெருமை கொண்டது.
‘பாட்ஷா’ படத்தை ஒருமுறை மட்டும்தான் பார்த்தேன் எனச் சொல்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு திரும்பத் திரும்ப பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். 1990-களில் வெளிவந்த படமாக இருந்தாலும், 2000-ல் பிறந்தவர்களும் ரசிக்கும் படமாகத் திகழ்கிறது ‘பாட்ஷா’.
அதனால்தான், எப்போது டிவியில் ‘பாட்ஷா’ படம் போட்டாலும், மற்ற வேலைகளை விட்டுவிட்டு குடும்பத்தோடு டிவி முன் அமர்ந்து விடுகின்றனர்.
அந்த வகையில், இன்று காலை சன் டிவியில் ‘பாட்ஷா’ படம் ஒளிபரப்பப்பட்டது. விடுமுறை நாள் என்பதால், அப்படியே அந்தப் படத்தைப் பார்க்கத் தொடங்கினர் ‘பாட்ஷா’ ரசிகர்கள். மேலும், இதைப்பற்றி சமூக வலைதளங்களில் பதிவிட, அதைப்பற்றித் தெரியாமல் இருந்தவர்கள் கூட சன் டிவிக்கு மாற்றி ‘பாட்ஷா’ படத்தைப் பார்த்தனர்.
இதனால், #BaashaOnSunTv என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது. ரிலீஸான 25-வது வருடத்தை விரைவில் கொண்டாட இருக்கும் ‘பாட்ஷா’வை, எத்தனை வருடங்கள் ஆனாலும் கொண்டாடிக்கொண்டே இருப்பார்கள் ரசிகர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x