Published : 10 Aug 2019 04:15 PM
Last Updated : 10 Aug 2019 04:15 PM
நடிகை ரகுல் ப்ரீத் சிங் 'இந்தியன் 2' படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
1996-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'இந்தியன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கமல்ஹாசனின் நடிப்புக்கு தேசிய விருதும் கிடைத்தது. மீண்டும் ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது.
படம் தொடங்குமா, தொடங்காதா என்று ஆரம்பத்தில் சந்தேகங்கள் நிலவினாலும் தற்போது முழுவீச்சில் படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட ரவிவர்மன், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் கவனம் செலுத்துவதால் படத்திலிருந்து விலகிவிட்டார். தற்போது ரத்னவேலு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றவுள்ளார்.
இந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை உறுதி செய்துள்ள ரகுப் ப்ரீத், "இந்தப் படத்தில் நடிப்பை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். எனது நடிப்பு வாழ்க்கையில் இவ்வளவு சீக்கிரம் கமல்ஹாசன் - ஷங்கர் போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றும் வாய்ப்பை நான் தவறவிட விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்.
ரகுக் ப்ரீத் சிங் நாகார்ஜுனாவுடன் நடித்துள்ள 'மன்மதுடு 2' படம் தற்போது தெலுங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங்குக்கும் நடிகை ஜான்சிக்கும் இடையே இருக்கும் முத்தக்காட்சி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT