Published : 08 Aug 2019 12:29 PM
Last Updated : 08 Aug 2019 12:29 PM
வி.ராம்ஜி
‘’ ‘நிறைகுடம்’ படத்துக்கு வசனம்சோ. ஆனா படத்துல ஒரேயொரு காட்சிக்கு கண்ணதாசன்கிட்ட எழுதி வாங்கிட்டு வந்ததை சிவாஜி சார் கண்டுபிடிச்சிட்டாரு’’ என்று முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி, தனக்குத் தெரிந்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில், முக்தா ராமசாமி தயாரிக்க, முக்தா சீனிவாசன் இயக்கிய ‘நிறைகுடம்’ சிவாஜி, வாணிஸ்ரீ, முத்துராமன், சோ, மனோரமா, மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் நடிப்பில் உருவானது. 8.8.1969 அன்று வெளியானது. எல்லோராலும் வெகுவாக பாராட்டப்பட்ட இந்தப் படம் வெளியாகி, இன்றுடன் 50 வருடங்களாகிவிட்டன.
‘நிறைகுடம்’ பட நினைவுகள் குறித்து, இயக்குநர் முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி, தனக்குத் தெரிந்த தகவல்களை ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்காகப் பகிர்ந்துகொண்டார்.
முக்தா ரவி அளித்த பிரத்யேகப் பேட்டி இதோ...
‘’சிவாஜி சாருக்கும் அப்பாவுக்கும் (முக்தா சீனிவாசன்) ‘அந்தநாள்’ காலத்துலேருந்தே நல்ல பழக்கம் உண்டு. அப்புறம் ஜூபிடர் பிக்சர்ஸ்ல அப்பா வேலை பார்க்கும் போது, இன்னும் நட்பு பலமானது. முக்தா பிலிம்ஸ் கம்பெனி தொடங்கிய பிறகு, அந்தக் கம்பெனிக்கு காமெடிப் படம் எடுக்கிற நிறுவனம்னு பேரு வந்துருச்சு. அப்ப, சிவாஜி சாரை வைச்சு படம் பண்றதுன்னு அப்பா முடிவு பண்ணினார். சிவாஜி சாரும் ஒத்துக்கிட்டார். முக்தா பிலிம்ஸ்ல சிவாஜி சார் நடிச்ச முதல் படம் ‘நிறைகுடம்’. காமெடியா கலகலன்னு ஆரம்பிச்சு, அப்புறம் கொஞ்சம் சீரியஸாகிரும் படம். எல்லாரும் ரசிச்சாங்க.
’உதிரிப்பூக்கள்’, ‘முள்ளும் மலரும்’ தந்த மகேந்திரன் கதைதான் ‘நிறைகுடம்’. திரைக்கதை, வசனத்தை சோ எழுதினார். ‘நிறைகுடம்’ சமயத்துலயே ‘ஆயிரம் பொய்’ படமும் ஒண்ணா ஆரம்பிச்சு, வேலைகள் போயிட்டிருந்தது. அதுல நடிச்ச, வாணிஸ்ரீ, மனோரமா, சோ, தேங்காய் சீனிவாசன், விகே.ராமசாமின்னு பலரும் ரெண்டுபடத்துலயும் நடிச்சாங்க. இதெல்லாம் தனிக்கதை.
அப்பலாம், சிவாஜி சார் படம்னா, கொஞ்சம் இலக்கியமா, ஸ்டைலா, வசனம் பேசுறதுக்கு ஏதாவது காட்சி இருக்கானு விநியோகஸ்தர்கள் உட்பட எல்லாரும் எதிர்பார்ப்பாங்க. அதனால, சிவாஜிக்கும் வாணிஸ்ரீக்கும் கல்யாணமானதும் அப்படியொரு சீன்... டயலாக்னு இருந்தா நல்லாருக்கும்னு அப்பா, சோகிட்ட சொன்னார். ‘என்னால காமெடியாத்தான் எழுத முடியும். இதெல்லாம் பண்ணமுடியாது’ன்னு பிடிவாதம் பிடிச்சாரு சோ. அப்புறம்... அப்படி இப்படின்னு ஒத்துக்கிட்டார்.
மயிலின் தோகை போல் பரந்துகிடக்கிறது உன் கூந்தல் என்பார்கள். ஆனால் நான் அப்படிச் சொல்லமாட்டேன். கணக்கிலடங்காத உன் கேசம், அளவிட முடியாத உன் அன்பைச் சொல்லுகிறது...’ன்னு அந்த வசனம் நீளமா இருக்கும். அந்த வசனத்தை சிவாஜி சார் படிச்சுப் பாத்தார். ‘டேய் இங்கே வாடா’ன்னு சோவைக் கூப்பிட்டார் சிவாஜி சார். ‘இது நீயா எழுதினே?’ன்னு கேட்டார். ‘நீ எழுதின மாதிரி தெரியலியே’ன்னு சொன்னார். ‘டேய் சீனு... இந்த சோ பய சொல்றதையெல்லாம் நம்பிடுறியேடா’ன்னு கிண்டல் பண்ணினார். ஒருகட்டத்துல, சோவால மறைக்கமுடியல. ‘ஆமா சார். இந்த வசனம் நான் எழுதல. கவிஞர்கிட்ட (கண்ணதாசன்) கேட்டு வாங்கிட்டு வந்தேன்’ன்னு சோ உண்மையைச் சொன்னாரு.
மொத்த யூனிட்ல இருந்த எல்லாருமே சோவோட கலாட்டாவை நினைச்சு சிரிச்சாங்க. இப்படி படம் முழுக்கவே நிறைய நிறைய நல்ல விஷயங்கள் நடந்தன.
இவ்வாறு முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT