Published : 08 Aug 2019 11:31 AM
Last Updated : 08 Aug 2019 11:31 AM
வி.ராம்ஜி
‘’பார்வையற்ற கேரக்டர்ல ‘நிறைகுடம்’ படத்துல நடிச்சப்போ, அந்தக் கேரக்டரை எப்படிப் பண்ணனும்னு சிவாஜி சார் ரொம்பவே ஹெல்ப் பண்ணினார்’’ என்று நடிகை வாணிஸ்ரீ, ‘நிறைகுடம்’ படம் வெளியாகி 50 வருடங்களான நிலையில் தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
முக்தா பிலிம்ஸ் தயாரிக்க, முக்தா சீனிவாசனின் இயக்கத்தில், சிவாஜி, முத்துராமன், வாணிஸ்ரீ நடித்த ‘நிறைகுடம்’ 8.8.1969 அன்று வெளியானது. இன்றுடன் படம் வெளியாகி 50 ஆண்டுகளாகிவிட்டன.
இந்தப் படத்தின் கதையை இயக்குநர் மகேந்திரன் எழுதியிருந்தார். திரைக்கதை, வசனத்தை சோ எழுதியிருந்தார். இந்தப் படத்துக்கு வி.குமார் இசையமைத்திருந்தார். படம் வெளியாகி, சக்கைப்போடு போட்டது.
இதில் கதாநாயகியாக நடித்த வாணிஸ்ரீயை இந்து தமிழ் திசை ஆன்லைனுக்காக தொடர்பு கொண்டு, வாழ்த்துகளைத் தெர்வித்தோம்.
பின்னர், வாணிஸ்ரீ ‘நிறைகுடம்’ தொடர்பான நினைவுகளை பிரத்யேகமாகப் பகிர்ந்துகொண்டார்.
‘’’நிறைகுடம்’ படத்தை மறக்கவே முடியாது. முக்தா பிலிம்ஸ் நிறுவனத்திலும் முக்தா சீனிவாசன் சார் இயக்கத்திலும் ஏற்கெனவே படம் பண்ணிய அனுபவம் உண்டு. அதேபோல ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் சிவாஜி சாருடன் முதன்முதலாக நடித்தேன். ‘நிறைகுடம்’ சிவாஜி சாருடன் நான் நடித்த இரண்டாவது படம்.
இந்தப் படம் பண்ணும் போது நான் பிஸியான நடிகை. வரிசையாக படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். முக்தா பிலிம்ஸ் கம்பெனியைப் பொருத்தவரை, எல்லாவற்றிலும் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துகொண்டதை வியந்து பார்த்தேன். இந்த நிறுவனத்துக்கு மட்டுமின்றி எல்லா படக்கம்பெனிக்கும் என்னை ரொம்பவே பிடிக்கும். ஏனென்றால், நான் கெடுபிடிகள் செய்யமாட்டேன். அதுவேண்டும் இதுவேண்டும் என்று தொந்தரவு செய்யமாட்டேன்.
‘நீ வீட்ல இருந்தாலும் சாப்பிடத்தானே போறே. பிறகு, ஏன் இங்கே இவங்களை இப்படி அதுவேணும் இதுவேணும்னு அலைக்கழிக்கிறே. என்ன தர்றாங்களோ அதைச் சாப்பிடப் பழகிக்கோ’ன்னு எங்க அம்மா எங்கிட்ட சொல்லிருக்காங்க. அதன்படி நடக்கறதாலேயே என்னை எல்லாருக்கும் பிடிக்கும். வந்தோமா, நம்ம கேரக்டரை சரியாப் பண்ணினோமாங்கறதுலதான் என் கவனம் இருக்கும்.
‘நிறைகுடம்’ படம் ஜாலியான படமா ஆரம்பிச்சு, அப்படியே சீரியஸாயிரும். கதைப்படி நடுவுல எனக்கு பார்வைபோயிரும். அப்ப எப்படி நடக்கணும், முகத்தை எப்படி வைச்சுக்கணும், கண்களை எப்படி வைக்கணும்னெல்லாம் சிவாஜி சார்தான் சொல்லிக்கொடுத்தார். அதை மறக்கவே முடியாது.
அதேபோல, செட்டுக்குள்ளே வந்துட்டார்னா, சிவாஜி சார் வெளியே போகவே மாட்டார். டைரக்டர் ‘பேக் அப்’னு சொன்னபிறகுதான் கிளம்புவார். மத்தவங்க நடிக்கிறதையெல்லாம் பாத்துக்கிட்டே இருப்பார். நான் பேசுற தமிழையும் அந்த உச்சரிப்பையும் முகபாவங்களையும் கவனிச்சுப் பாராட்டுவார் சிவாஜி சார். அதேபோலத்தான் முக்தா சீனிவாசன் சாரும்! ‘பிரச்சினையே தராத நடிகைம்மா நீ’ன்னு சீனு சார் சொல்லுவார். இல்லேன்னா, அவரோட ‘ஆயிரம் பொய்’ படத்துலயும் ‘நிறைகுடம்’ படத்துலயும் ஒரேசமயத்துல நடிக்கக் கூப்பிடுவாரா?
மத்தபடி, சிவாஜி சார் சஞ்சீவி மலை மாதிரி. அந்த மலைலேருந்து வர்ற ஒருதுகள் கூட மருத்துவ குணம் கொண்டதாத்தான் இருக்கும். நடிப்பும் அப்படித்தான். முதன்முதல்ல, பார்வையற்ற கேரக்டரைப் பண்றேன். அதைச் சிறப்பா செஞ்சிருந்தேன்னா, அதுக்கு சிவாஜி சார்தான் காரணம்.
இவ்வாறு நடிகை வாணிஸ்ரீ தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT