Published : 03 Aug 2019 09:23 AM
Last Updated : 03 Aug 2019 09:23 AM

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்: இயக்குநர் வசந்த பாலன்

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன் என்று இயக்குநர் வசந்த பாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீஸன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குநர் சேரன்ஏன்கலந்து கொண்டார் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஏனென்றால் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நடத்தப்படும் விதம். தேசிய விருது வென்ற இயக்குநர் என்று பாராமல், மற்ற போட்டியாளர்கள் பலரும் அவரை மோசமாக பேசி வருவதாகவும், நடத்தப்பட்டு வருவதாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில் இயக்குநர் சேரனை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுமாறு இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்  வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பான தன் பதிவில், “அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம்!உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும்.

காற்றின் ரகசியப் பக்கங்களில் இந்த செய்தி ஊடேறி உங்களைத்தொடும் என்றே நம்புகிறேன். உங்களின் படங்களின் ரசிகனாய் சொல்கிறேன். வித்யாகர்வத்துடன் நீங்கள் இருந்த இடம் மிக கம்பீரமானது. பருந்து பறக்கும் வானத்தின் உயரத்தில் சஞ்சரிப்பவர் நீங்கள். பாரதிகண்ணம்மா, பொற்காலம் ,ஆட்டோகிராப் என அற்புதமான இலக்கியப்படைப்புகள்.

திரையில் இலக்கியம் செய்ய ஆசைப்பட்டு அதில் வென்று காட்டியவர் நீங்கள். காலத்தின் கரையான் உங்களையும் உங்கள் படங்களையும் அழித்துவிடமுடியாது. இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் பாலுகேந்திராவுடன் ஒப்பிடக்கூடிய திரை ஆளுமை நீங்கள்.

பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு உங்களின் உயரம் தெரியாது. நீங்களும் நடிகர் சரவணனும் ஒன்று என்று தான் நினைப்பார்கள். அறியாமை என்ன செய்ய. உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள். இயக்குனர் சங்கப் பதவியில் கவுரவக் குறைவு ஏற்பட்ட போது உடனே அதை விட்டு வெளியேறினீர்கள்.

ஆகவே கலைஞன் எந்த நிலையிலும் அவனின் மேன்மையை எந்த கீழ்மைக்கும் உட்படவிடுதல் வேண்டாம்" என்று  இயக்குநர் வசந்த பாலன் வேண்டுகோளாக வைத்துள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x