Last Updated : 02 Aug, 2019 05:56 PM

 

Published : 02 Aug 2019 05:56 PM
Last Updated : 02 Aug 2019 05:56 PM

முதல் பார்வை: ஜாக்பாட் 

இரு பெண்கள் நூதனத் திருட்டு வேலைகளில் ஈடுபட்டால், அவர்கள் அட்சயபாத்திரத்தைத் திருடுவதற்காக திட்டம் தீட்டினால் அதுவே 'ஜாக்பாட்'. 

ரேவதியும் ஜோதிகாவும் கார் திருடுவது, பணம் பறிப்பது என நூதன முறையில் திருடி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். ஜோதிகா தியேட்டரில் ரகளையில் ஈடுபட, சிறைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அங்கு சச்சு சொல்லும் அட்சயப் பாத்திரத்தைத் தேடிச் செல்கின்றனர். ஆனந்த்ராஜ் வீட்டுத் தொழுவத்தில் இருப்பதைக் கண்டுபிடித்து, அதைத் திருட முயல்கின்றனர். ஆனால், அதற்கு ஏகப்பட்ட தடைகள்.  எனக்கு மட்டும் அட்சயப் பாத்திரம் கிடைத்தால் இல்லாமையை இல்லாமல் ஆக்குவேன் என்று சொல்லும் ஜோதிகாவும் ரேவதியும் அட்சயப் பாத்திரத்தைத் திருடினார்களா, மந்திரத்துக்குக் கட்டுப்படும் மனோபாலா என்ன ஆனார், ஆனந்தராஜ் ஏன் சோமசுந்தரத்தைத் தேடி பழிவாங்க நினைக்கிறார், யோகி பாபுவின் நிலை என்ன, சமுத்திரக்கனியின் மகளுக்கு இருக்கும் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

கதைக்காக, சம்பவங்களுக்காக இயக்குநர் கல்யாண் அதிகம் கவலைப்படவில்லை. குலேபகாவலி படத்தைக் கலைத்துப் போட்டு ஒரு கதை பண்ணியிருக்கிறார். அப்படத்தின் இன்னொரு வெர்ஷன் என்று கூடச் சொல்லலாம். ஆனால், நகைச்சுவையில் இயக்குநர் எந்தக் குறையும் வைக்கவில்லை. இந்த மனுசனுக்குள்ளே என்னமா டைமிங் சென்ஸ் இருக்கு என்று பாராட்டும் அளவுக்கு பின்னியிருக்கிறார்.

அக்‌ஷயா கதாபாத்திரத்தில் ஜோதிகா சரியாகப் பொருந்துகிறார். ரயில்வே ஸ்டேஷனில் ஜோ என்ட்ரி ஆகும் போது ஆரம்பிக்கும் ஸ்லோமோஷன், பில்டப் காட்சிகள் படம் முடியும் வரை அவரைப் பின் தொடர்வது தான் கொஞ்சம் அலுப்பு. மற்றபடி ஜோ கதாபாத்திரதுக்கான மெனக்கிடல், பன்ச் பேசுவது, ஓங்கி அடிச்சா மூணு டன் வெயிட் பார்க்குறியா என கலாய்ப்புப் படலத்தில் ஜொலிக்கிறார். 

ரேவதி படம் முழுக்க அட்டகாசப்படுத்துகிறார். நடனம், ஃபைட் என்று எல்லாவற்றிலும் ஒரு கை பார்த்திருக்கிறார். ஆனந்தராஜ் இரட்டைக் கதாபாத்திரங்களில் செம்மையாக நடித்துள்ளார். அவரின் நகைச்சுவை உணர்வு வியப்பூட்டுகிறது. யோகி பாபு சுய கலாய்ப்புக்கு தன்னை ஒப்புக் கொடுத்துள்ளார். ஆனால், நடிப்பில் அப்ளாஸ் அள்ளுகிறார். 

மன்சூரலிகான், நான் கடவுள் ராஜேந்திரன், கிங்ஸ்லி, பழைய ஜோக் தங்கதுரை என்று எல்லோரும் கிடைக்கிற கேப்பில் சிக்ஸர் அடிக்கிறார்கள். 
சமுத்திரக்கனி, தேவதர்ஷினி, மைம் கோபி, அந்தோணி தாசன், சச்சு, நண்டு ஜெகன், செம்மலர் அன்னம், சூசன், மனோபாலா, இமான் அண்ணாச்சி, கும்கி அஸ்வின் என்று படம் முழுக்க ஏராளமான நட்சத்திரங்கள். அத்தனை பேரும் ஒரு காட்சியிலாவது ஸ்கோர் செய்கிறார்கள். 

ஆனந்தகுமாரின் ஒளிப்பதிவில் லைட்டிங், கோணங்கள் படத்துக்கு வலு சேர்க்கும் அம்சங்கள். விஷால் சந்திரசேகரின் இசையில் அறிமுகப் பாடல் ஓ.கே. ஜாக்பாட் பாடலைக் கத்தரி போட்டிருக்கலாம். பின்னணி இசையில் விஷால் வேற லெவல். விஜய் வேலுகுட்டியின் எடிட்டிங் தொய்வில்லாமல் படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. 

படத்தின் ஆதார அம்சம் நகைச்சுவைதான். அதனால் லாஜிக் பற்றி இயக்குநர் கவலைப்படவில்லை. திருடுவதற்கான பின்னணி, காரணம் என்று எந்த எமோஷனலையும் சொல்லாமல் மெசேஜ் சொல்கிறேன் என்று நியாயம் கற்பிக்காமல் நகைச்சுவையின் போக்கில் இயக்குநர் திரைக்கதையை நகர்த்தியிருப்பது புத்திசாலித்தனம். ஒவ்வொரு நகைச்சுவைக் காட்சிக்கும் இயக்குநர் கல்யாண் கொடுக்கும் ஃபினிஷிங் அற்புதம்.

100 ரூபாய் நோட்டு காய்க்கும் செடி, செடி, கொடியை வைத்து உடலை மறைக்க ஆனந்த்ராஜ் கொடுக்கும் விளக்கம், தப்புத்தப்பான தமிழை ஆனந்த்ராஜ் சரியாக உச்சரித்து உணர்ந்து வழி தேடி காரைத் தொலைக்கும் காட்சி, தண்ணீர் பிரச்சினையை அழகாக அணுகிய விதம், சந்திரமுகி, சிங்கம், விஸ்வரூபம் படக் கலாய்ப்புகள், பன்ச் வசனத்தை நய்யாண்டி செய்வது, வசனங்களில் நகைச்சுவையத் தெறிக்க விடுவது என கல்யாண் நம்பி வந்தவர்களை சிரிக்க வைத்து அனுப்புகிறார். 

1918 காலகட்ட அட்சயப் பாத்திரத்துக்கான லிங்க்கையும் சமகாலத்துடன் இணைத்ததோடு ஜோதிகா- ரேவதியின் அடுத்தகட்டச் செயல்பாடுகளையும் பதிவு செய்திருக்கும் விதம் சிறப்பு. மொத்தத்தில் நகைச்சுவை மேஜிக்கை ரசிக்கத் தயார் என்றால் 'ஜாக்பாட்' பார்க்கலாம். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x