Published : 25 Jul 2019 04:42 PM
Last Updated : 25 Jul 2019 04:42 PM

’’ அம்மாதான்  அஸ்வினி டாக்டர் ; சங்கிலி முருகன் கேரக்டர் எங்க ஊர்ல இருந்தவருதான்; டைட்டில் பாட்டு பாடிய எம்.எஸ்.வி’’ - கே.பாக்யராஜின் ‘ஒரு கை ஓசை’ அனுபவங்கள்

- ‘ஒரு கை ஓசை’ வெளியாகி 39 வருடங்கள்; பாக்யராஜ் பிரத்யேகப் பேட்டி

வி.ராம்ஜி
‘ஒரு கை ஓசை’ வெளியாகி 39 வருடங்களாகிவிட்டன. 1980ம்  ஆண்டு, ஜூலை 25ம் தேதி படம் வெளியானது. ‘சுவரில்லாத சித்திரங்கள்’ தான் நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் இயக்கிய முதல் படம். ‘ஒரு கை ஓசை’ இரண்டாவது படம். 
படம் வெளியாகி 39 வருடங்கள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இயக்குநர் கே.பாக்யராஜ் ‘இந்து தமிழ் திசை’ ஆன்லைனுக்கு, தன் அனுபவங்களை  பிரத்யேகப் பேட்டியாகத் தந்தார். 
அப்போது பாக்யராஜ் கூறியதாவது: 
‘சுவரில்லாத சித்திரங்கள்’ படம் வெளியாகும் போதே, ‘புதிய வார்ப்புகள்’, ‘கன்னிப்பருவத்திலே’ என நடித்திருந்தாலும் ‘சுவரில்லாத சித்திரங்கள்’ திரைப்படம், பரவலாக எல்லோரிடமும் பேசப்பட்டதாலும், அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு, விநியோகஸ்தர்களிடையே இருந்தது. அந்த ஊக்கத்திலும் தைரியத்திலும்தான் இரண்டாவது படமான ‘ஒரு கை ஓசை’ படத்தைத் தயாரித்து இயக்கினேன். 
படம் ஆரம்பித்து வேலை செய்துகொண்டிருந்த போதே, என் நட்பு வட்டத்தில் உள்ள பலரும் கேட்ட கேள்வி... ‘உனக்கு பேச்சுதான் ப்ளஸ் பாயிண்ட். டயலாக்கும் டயலாக் டெலிவரியும் வைச்சு அப்ளாஸ் வாங்கற ஆளு நீ. ஆனா வாய் பேச முடியாத கேரக்டர் பண்றியே. தப்பாப் படுது’ன்னு சொன்னாங்க. ஆனா, பேச முடியாத அந்தக் கேரக்டர்ல கூட, காமெடி பண்ண முடியும்னு உறுதியா இருந்தேன். அப்புறம், படம் பார்த்துவிட்டு, எல்லோருமே அந்தக் கேரக்டரை நன்றாகச் செய்ததாகப் பாராட்டினார்கள். 
இதேபோல படத்துக்கு ‘ஒரு கை ஓசை’ என்று டைட்டில் வைத்ததையும் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு துளைத்தெடுத்தார்கள். ’சுவர் இருந்தால்தான் சித்திரம்னு சொல்லுவாங்க. ஆனா, நீ ’சுவரில்லாத சித்திரங்கள்’னு பேரு வைச்சே. ரெண்டாவது படத்துக்கு ‘ஒரு கை ஓசை’ன்னு பேரு வைச்சிருக்கியே. ஏன் நெகட்டீவா வைக்கிறே? ஒரு கைல ஓசை வராதுங்கறதுதானே உண்மை. அப்படி இப்படின்னெல்லாம் சொன்னாங்க. இப்படி நெகட்டீவா டைட்டில் வைக்கணும்னு எந்தப் ப்ளானும் இல்லை. எல்லாரும் தெரிஞ்ச வார்த்தையா இருந்தா நல்லாருக்குமே அப்படின்னுதான் பாத்தேன். அவ்ளோதான். அதனால, ‘ஒரு கை ஓசை’ டைட்டில்னு கதை பண்ணும் போதே முடிவு பண்ணினதை மாற்றணும்னு தோன்றவில்லை. 
‘உதிரிப்பூக்கள்’ படத்தில், எப்போதும் சோகமாக இருக்கிற அஸ்வினியின் முகம் என்னை ரொம்பவே பாதித்தது. ‘ஒரு கை ஓசை’ படத்தில், அந்த டாக்டர் கேரக்டர், கொஞ்சம் முதிர்ச்சியான முகமா இருந்தா நல்லாருக்குமே என்று நினைத்தேன். அவரை நடிக்க வைத்தேன். அஸ்வினியும் சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார். ஆனால், ‘ரொம்ப முதிர்ச்சியான முகமாயிருச்சு’ என்று பலரும் என்னிடம் தெரிவித்தார்கள். ஒருவகையில், நானும் பிறகு அப்படித்தான் நினைத்தேன். 
இன்னொரு விஷயம்... அஸ்வினியின் டாக்டர் கேரக்டர் கிட்டத்தட்ட என்னுடைய அம்மாவை வைத்து டெவலப் செய்யப்பட்டதுதான். வெள்ளாங்கோவிலில், என் அம்மா நர்ஸ் பணிகளைச் செய்துவந்தார். ஆனால் அவரை எல்லோரும் ‘டாக்டர் டாக்டர்’ என்றுதான் கூப்பிடுவார்கள். அந்த ஊரில் அம்மா ஒரு டிஸ்பென்ஸரி வைத்து, வைத்தியம் செய்து வந்தார். அதே வீட்டில், அம்மா உட்கார்ந்திருந்த அறையிலேயே, அஸ்வினி டாக்டர் காட்சிகளை எடுத்தேன். அந்த வீட்டில் படமெடுத்த போதெல்லாம், அம்மாவின் நினைவு முழுவதுமாக மனதை ஆக்கிரமித்திருந்தது. மறக்க முடியாத நாட்கள் அவை. ஏனென்றால், அப்போது அம்மா உயிருடன் இல்லை. ‘புதிய வார்ப்புகள்’ படம் வெளியாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே, அம்மா இறந்துவிட்டார். அதனால்தான், அம்மாவின் புகைப்படத்துடன், அம்மாவின் செல்லப்பெயரான அம்முலு என்கிற பெயரில், ‘ஒரு கை ஓசை’ படத்தைத் தயாரித்தேன். 
அந்த சங்கிலி கதாபாத்திரமும் சுவாரஸ்யமானதுதான். எங்கள் வெள்ளாங்கோவிலில், 72 வயதான ஒருவர் இப்படித்தான் இரவு முழுவதும் சுற்றிச்சுற்றி வருவார். கிட்டத்தட்ட அவர்தான் ஊருக்குப் பாதுகாப்பு. யார்  வீட்டு வாசலில் நிற்கிறாரோ அந்த வீட்டில் இருந்து காசோ சாப்பாடோ தருவார்கள்.  மாலை நேரங்களில், அவரைச் சுற்றி பெருங்கூட்டம் அமர்ந்திருக்கும். அவர் பல விஷயங்களை, அனுபவங்களை கதைகதையாகச் சொல்லுவார். அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால், ஊரில் உள்ள டீக்கடைகளில், ஒரு கரண்டியில் அல்லது ஒரு புனல் மூலமாகத்தான் டீ கொடுப்பார்கள். அந்த ஐயாவைப் பார்த்த போது எனக்கு 13 வயது. பின்னாளில், ‘ஒரு கை ஓசை’ பண்ணும்போது, அந்த ஐயா நினைவுக்கு வந்தார். ‘சங்கிலி’ கேரக்டர் உருவானது. முருகன் நடித்தார். ‘சங்கிலி முருகன்’ ஆனார். 
படத்தில், டீக்கடையில் கூட நிலவுகிற ஜாதிக் கொடுமையை அன்றைக்கே சொல்லியிருப்பேன். க்ளைமாக்ஸில், உங்களைப் போலவே என் சாதி சனத்தையும் சமதையா நடத்துங்க’ என்று சங்கிலி முருகன் சொல்வது போல் காட்சி வைத்திருந்தேன். அன்றைக்கு பெரிய ஆதரவுமில்லை; எதிர்ப்புமில்லை. ஏனென்றால், அப்போது ஜாதி அரசியலெல்லாம் இல்லை. 
 அதேபோல படத்துக்கு எம்.எஸ்.வி. சார் இசை. ‘அட... டைட்டில் பாடலை எம்.எஸ்.வி. சாரை பாட வைச்சிட்டியே’ என்றார்கள். என் மாமாவின் சிபாரிசில் ஒருவர் என்னிடம் உதவி டைரக்டராகச் சேருவதற்கு வந்தார். அவர் எழுதிய பாட்டு பிடித்திருந்தது. அந்தப் பாடலை, டைட்டிலுக்கு வைத்தேன். எம்.எஸ்.வி. சாரையே பாடச் சொன்னேன். அந்தப் பாட்டும் ஹிட்டானது. மாட்டுவண்டிக்காரர் பாடுகிற மாதிரியான பாடல். என்னிடம் உதவி இயக்குநராக இருந்த கோகுலகிருஷ்ணா வண்டிக்காரராக நடித்தார். பிறகு, இயக்குநர் பாசிலின் படங்களுக்கு வசனகர்த்தாவானார்.  
இப்படி, ‘ஒரு கை ஓசை’ பற்றி சொல்லுவதற்கு, ஏராளமான விஷயங்களும் நல்ல நல்ல அனுபவங்களும் இருக்கின்றன. 39 வருடங்கள் கழித்தும் கூட, இன்றைக்கும் ‘ஒரு கை ஓசை’ படமும் அந்த அனுபவங்களும் அப்படியே எனக்குள் இருக்கின்றன. 
இவ்வாறு கே.பாக்யராஜ் தெரிவித்தார். 
 
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x