Published : 18 Jul 2019 05:07 PM
Last Updated : 18 Jul 2019 05:07 PM

'இந்தியன் 2' அப்டேட்: ஐஸ்வர்யா ராஜேஷ் - ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம்

கமல் நடிக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தில் புதிதாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்தார். இப்படம்தான் கமல் - ஷங்கர் இணைந்து பணியாற்றிய கடைசிப் படம்.

தற்போது 22 வருடங்கள் கழித்து ‘இந்தியன் 2’ உருவாகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 18-ம் தேதி தொடங்கி சில நாட்களில் நிறுத்தப்பட்டது. தற்போது அந்தப் படத்தில் நிலவி வந்த சிக்கல்கள் அனைத்தையும் சுபாஷ்கரன் - ஷங்கர் இருவரும் அமர்ந்து பேசி சரி செய்துவிட்டனர்.

இதனால் ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்பு செல்ல ஆயத்தமாகி வருகிறது படக்குழு. காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் கமலுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். தற்போது இந்தக் கூட்டணியில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். என்ன கதாபாத்திரம் என்பது சஸ்பென்ஸ் என்கிறது படக்குழு.

லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். மேலும், இந்தப் படத்தில் சித்தார்த், வித்யூத் ஜம்வால் ஆகியோரும் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகின. 

தற்போது 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி வரும் கமல், அதற்குப் பிறகு 'இந்தியன் 2' மற்றும் 'தலைவன் இருக்கின்றான்' ஆகிய படங்களில் மாறி மாறி நடிக்க முடிவு செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x