Published : 18 Jul 2019 02:55 PM
Last Updated : 18 Jul 2019 02:55 PM

''முதல் படத்துல ஒரு திட்டு கூட வாங்கலை’’ -  நடிகை ராதாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ ப்ளாஷ்பேக் பேட்டி

வி.ராம்ஜி
’’என்னோட முதல் படத்துல, பாரதிராஜா சார் ஒரு தடவை கூட என்னைத் திட்டவே இல்ல’’ என்று நடிகை ராதா, ‘அலைகள் ஓய்வதில்லை’ நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். ‘அலைகள் ஓய்வதில்லை’ ரிலிசான நாள் இன்று. 
1981ம் ஆண்டு, ஜூலை 18ம் தேதி ‘அலைகள் ஓய்வதில்லை’ வெளியானது. இன்றுடன் 38 வருடங்களாகிவிட்டன. இளையராஜா தயாரிக்க, பாரதிராஜா இயக்க, இந்தப் படத்தில், கார்த்திக், ராதா இருவரும் அறிமுகமானார்கள். ஆக, கார்த்திக்கும் ராதாவும் திரைக்கு வந்தும் 38 வருடங்களாகிவிட்டன.
நடிகை ராதாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தோம். பிறகு, ‘அலைகள் ஓய்வதில்லை’ பட அனுபவங்கள் குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்குப் பிரத்யேகமாகப் பகிர்ந்துகொண்டார்.   
‘’அப்போது நான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன். கொஞ்சம் பயம், தயக்கம்  எல்லாம் இருந்தது. பல ஷூட்டிங்கெல்லாம் பார்த்திருக்கிறேன் என்றாலும் கூட, நானே நடிப்பது என்பது எனக்கு புது அனுபவம்தான். அதை இன்று வரை என்னால் மறக்கவே முடியாது. 
எனக்குப் பெரிய பிரச்சினையாக இருந்தது மொழிதான். அப்போது தமிழ் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இருந்தாலும், புரிந்துகொள்ளமுடியும். டைரக்டர் பாரதிராஜா சார் படத்தில் நடிக்கும் போது, என்ன ப்ளஸ் பாயிண்ட் என்றால், பாரதிராஜா சார், ஒரு காட்சியில் என்ன செய்யவேண்டும் என்பதை அப்படியே நமக்கு நடித்துக் காட்டுவார். அதை நன்றாக உள்வாங்கிக்கொண்டு, அவர் செய்து காட்டியதில் பாதியளவு நடித்தாலே பேர் வாங்கிவிடலாம். ஒவ்வொரு காட்சியில் நடித்துமுடித்ததும், சட்டென்று டைரக்டர் சார் என்ன சொல்கிறார் என்று பார்த்துக்கொண்டே இருப்பேன். ‘டேக் ஓகே’ என்று அவர் சொல்லிவிட்டால், ‘அப்பாடா’ என்று நிம்மதியாகிவிடுவேன். 
யோசித்துப் பார்த்தால், படத்தில் பல காட்சிகள் முதல் டேக்கிலேயே ஓகே ஆகியிருக்கின்றன. சில காட்சிகள் மட்டுமே மூன்று, நான்கு டேக்குகள் வரை போயிருக்கின்றன. மற்றபடி, ஏதோ பிக்னிக் போனது போல்தான் படப்பிடிப்பு நாட்கள் இருந்தன. கார்த்திக்குடன் இருக்கும் பசங்க ஜாலியாக அரட்டையடிப்பார்கள். நன்றாகவே பொழுதுபோகும். நான் குளிக்கச் செல்லும் போது, பசங்க கலாய்க்கிற காட்சி வேடிக்கையின் உச்சம். ‘படிக்கப் படிக்க பாவாடை ஏறுதுடோய்’, ‘அக்கா, சீக்கிரம் பிஏவை முடிச்சிருங்க’ என்றெல்லாம் கிண்டல் பண்ணுவார்கள். அடுத்ததாக, அந்தப் பசங்க எல்லோரும் கோவணம் கட்டிக்கொண்டு குளிக்க வரும் காட்சி எடுக்கப்பட்டது. அதைப் பார்த்துவிட்டு, நான் கிண்டல் செய்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. இந்த கலாட்டாவையெல்லாம் மறக்கவே முடியாது. 
பாறையில் அமர்ந்து காத்திருப்பேன். விச்சு ரொம்ப நேரம் கழித்து வருவது போல் காட்சி. ‘ஏன் லேட்டு?’ என்பேன். ‘கொஞ்சம் நேரமாயிருச்சு’ன்னு கார்த்திக் சொல்லுவார். ‘ஏன் நேரமாயிருச்சு’ என்று கேட்பேன். ‘கொஞ்சம் லேட்டாயிருச்சு’ன்னு சொல்லுவார் அவர். ‘அதான் ஏன் லேட்டாயிருச்சுன்னு கேட்டேன்’ன்னு சொல்லுவேன். இப்படியே போகும் டயலாக். ’மூணுலேருந்து மூணரை வரைக்கும் அந்தப் பாறைல காத்திருந்தேன். அப்புறம் இந்தப் பாறைல காத்திருந்தேன். அதுக்குப் பிறகு இந்தப் பாறைல உக்கார்ந்திருந்தேன்’ன்னு சொல்லுவேன். இதுதான் படத்துல நான் நடிச்ச முதல் காட்சி. 
படத்தில் நான் ரொம்பவே நடித்ததாகச் சொல்ல பல காட்சிகள் உண்டு. இப்போது படம் பார்த்தாலும், என்னை நானே பாராட்டிக்கொள்ளும் விதமாக அமைந்தது என்று அந்த ஒரு காட்சியை உதாரணமாகச் சொன்னாலே போதும். 
’அண்ணன் தியாகராஜன், எனக்கு சூடு போட்ருவாரு. அண்ணி சில்க் ஸ்மிதா எனக்கு அட்வைஸ் பண்ணுவாங்க. அப்போ, ‘உங்க கழுத்துல எவ்ளோ நகை இருக்குன்னுதான் எங்க அண்ணன் பாத்துருப்பாரு. எங்க அண்ணன் உங்களுக்கு எவ்ளோ நகை போடுவாருன்னுதான் நீங்க பாத்துருப்பீங்க. அது கல்யாணம். இது காதல். என் மனசுல என்ன இருக்குன்னு அவன் பாத்தான். அவன் மனசுல என்ன இருக்குன்னு நான் பாத்தேன். பணத்தைப் பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்ட உங்களுக்கு, மனசைப் பாத்து காதலிக்கிறவங்களைப் பாத்தா, பைத்தியமாத்தான் இருக்கும்’னு வசனம். இப்போ கூட, இந்தக் காட்சியைப் பாக்கும்போது, ‘அட... நல்லாப் பண்ணிருக்கோமே’ன்னுதான் சந்தோஷமா நினைச்சுக்குவேன். ‘அலைகள் ஓய்வதில்லை’ படமும் அடுத்தடுத்த படங்களும் என தொடர்ந்த வாழ்க்கை, இப்போது 38 வருடங்களாகிவிட்டன என்பதை நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் முக்கியமாக பாரதிராஜா சாருக்கும் நன்றி.
இவ்வாறு நடிகை ராதா தெரிவித்தார். 
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x