Published : 16 Jul 2019 04:45 PM
Last Updated : 16 Jul 2019 04:45 PM

வழக்கு தொடுக்க நடந்த பேச்சுவார்த்தை: அவசரத் தூதுவிட்ட வடிவேலு

'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தொடர்பாக வழக்கு தொடுக்கப் பேச்சுவார்த்தை நடந்ததைத் தொடர்ந்து, அவசரமாகத் தூதுவிட்டுள்ளார் வடிவேலு.

ஷங்கர் தயாரிக்க, சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி'. வடிவேலு நடித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது. படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்தப் பிரச்சினை தொடர்பாக நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால், வடிவேலு தொடர்ச்சியாகப் பிடிவாதமாக இருந்ததால் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியது. இதனால், அவரால் புதிய படங்களில் நடிக்க முடியாமல் போனது. 

'நேசமணி' ட்ரெண்டானதைத் தொடர்ந்து, மீண்டும் உலக அளவில் பிரபலமானார் வடிவேலு. அப்போது அளித்த பேட்டியில் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படக்குழுவினரை கடுமையாகச் சாடினார். இயக்குநர் ஷங்கரை கிராபிக்ஸ் இயக்குநர் என்றும், சிம்புதேவனுக்கு ஒன்றுமே தெரியாது, 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் கதையை அவருடன் அமர்ந்து உருவாக்கினேன் என்றெல்லாம் பேசினார்.



இந்தப் பேச்சுக்கு இயக்குநர்கள் பலரும் வடிவேலுவை தங்களுடைய சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்தார்கள். வடிவேலுவின் பேட்டிக்கு 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படக்குழுவினர் எவ்வித பதிலையும் அளிக்காமல் இருந்தனர். இதில் சில நாட்களுக்கு முன்பு லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் - ஷங்கர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது 'இந்தியன் 2' குறித்த சுமுக முடிவு எட்டப்பட்டது.

அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' குறித்து பேசியிருக்கிறார்கள். இதில் சுபாஷ்கரனும் இடம்பெற்றதற்குக் காரணம் ஏனென்றால், அவர் தான் முதல் பிரதி அடிப்படையில் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தை ஷங்கருடன் தயாரிக்கிறார். சுபாஷ்கரன் - ஷங்கர் இருவரும் இணைந்து வடிவேலு மீது வழக்கு தொடுப்பது குறித்துப் பேசியுள்ளனர்.



லைகா - ஷங்கர் - வடிவேலு மூவருக்குமே சமாதனப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தவர் சீமான். வழக்கு தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவசரமாகத் தூதுவிட்டிருக்கிறார் வடிவேலு. 'வழக்கு எல்லாம் தொடர வேண்டாம். சமாதானமாகப் போகலாம்’ என்று சொல்லியிருக்கிறார். மேலும், இயக்குநர் ஷங்கர் - சிம்புதேவன் குறித்துப் பேசியதற்கும் வடிவேலு வருத்தம் தெரிவித்துள்ளார். 

ஆனால், லைகா - ஷங்கர் - சிம்புதேவன் இணையோ வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாமா அல்லது வழக்கு தொடரலாமா என்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் சந்தித்து எடுக்கப்பட்ட இறுதி முடிவு என்ன என்பது விரைவில் தெரியவரும். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x