Published : 08 Jun 2015 04:50 PM
Last Updated : 08 Jun 2015 04:50 PM
காலங்கள் மாறலாம். பொழுதுகள் ஓடலாம். கணங்கள் மறையலாம். ஆனால் புவியின் காலை விடியலும், இரவுத் துயிலும் மாறியதில்லை. 'கடல் தாண்டிக் கரையேறும் காலை நிலா'வில் தொடங்கும் 'குற்றம் கடிதல்' படப்பாடல் நகர வாழ்க்கையின் வெவ்வேறான வாழ்க்கை நிலைகளில் வாழும் மனிதர்களின் காலை எவ்வாறானதாக இருக்கிறது என்பதை அழகான வரிகளுடன் பொருத்திச் செல்கிறது. | வீடியோ இணைப்பு கீழே |
அதிகாலையில் பூஜை வழிபாடுகளைச் செய்யக் கிளம்பும் மனிதர், தெருவோரங்களில் ஓடிப் பிடித்து விளையாடும் சிறுவர்கள், காலை வெயிலில் கடலில் குதித்தாடும் பையன்கள், மெல்ல விழிக்கும் சூரியனின் சிணுங்கலில் பறந்தாடும் பறவைகள், ஆர்ப்பரிக்கும் அலைகள், இன்னும் பலப் பல பாத்திரங்களின் காலைப் பொழுதுகள் எப்படித் துவங்குகின்றன?
"நாளை என்பது இன்று உன்னிடம்; இன்று எனும் இந்தக் கவிதை யாரிடம்?"
வண்டியில் பயணிக்கும் புதிதாய் திருமணமான தம்பதி, பள்ளிக்குச் செல்ல அடம்பிடித்து, மிட்டாய் சாப்பிட்டு சமாதானமாகிச் செல்லும் சிறுவன், ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நிர்வகிக்கும் அவனின் அம்மா, பேருந்தில் புத்தகம் படித்துக் கொண்டே வருபவர், பள்ளி முதல்வராக இருக்கும் கணவர், அங்கேயே ஆசிரியையாக வேலை பார்க்கும் மனைவி, இருவரும் இருசக்கர வண்டியில் வேலைக்கு வரும் காட்சிகள் என காலைப் பொழுதை இன்னும் இனிமையாக்கிக் காட்டுகின்றன.
அதே நேரம் ''பூச்செண்டு தருமா? போர்க்களம் தருமா? வாழ்க்கையை மாற்றும் நினைவுகள் தருமா, நாள்தோறும் பல கேள்விகள்தானே?!'' என்று வினா எழுப்பவும் செய்கின்றன.
குற்றம் செய்வதைத் தவிர்க்கச் சொல்லும் திருவள்ளுவரின் 44வது அதிகாரமான குற்றம் கடிதலைத் தலைப்பாகக் கொண்ட இப்படம், 16ஆவது ஜிம்பாவே பன்னாட்டுத் திரைப்பட விழாவில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே தமிழ் திரைப்படம். நவம்பர் 20, 2014 முதல் நவம்பர் 30, 2014 வரை நடந்த கோவா திரைப்பட விழாவில் இந்தியப் பனோரமாவில் திரையிடப்பட்ட ஒரே தமிழ்ப்படம். 12ஆவது சென்னைத் திரைப்படவிழாவில் கடைசி நாளன்று முன்னோட்டமாக வெளியிடப்பட்டு சிறந்த தமிழ்ப்படம் என்ற விருதைப் பெற்ற படம். இந்தியாவில் 62ஆவது திரைப்பட விருதுகளில் தமிழில் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்ற படம். இத்தனை பெருமையும் குற்றம் கடிதல் என்னும் ஒற்றைத் திரைப்படத்துக்கே!
அத்துடன், 16ஆவது மும்பை திரைப்பட விழாவில் ஆயிரத்தில் ஒருவன், ஆரண்ய காண்டம் திரைப்படங்களுடன் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. முற்றிலும் புதுமுகங்களே நடித்துள்ள இந்தத் திரைப்படத்தை ஜே. சதீஸ் குமாரும் கிறிஸ்டி சிலுவப்பனும் தயாரிக்க, ஜி. பிரம்மா இயக்கியிருக்கிறார். இதில் சிறுவன் அஜய், இராதிகா பிரசித்தா, சாய் இராஜ்குமார், பவல் நவகீதன் நடித்துள்ளனர்.
ஜெரால்ட் தீரவ் எழுதியிருக்கும் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் நகரத்தின் காலையையும், வாழும் வாழ்க்கையையும் காட்சிகளோடு அழகாய்ப் பொருந்துகின்ற ன. " ஒவ்வொரு நாளின் வண்ணங்கள் யாவும் நிரந்தர மாயம்!" என்னும் ஒற்றை வரி போதும் இப்பாடலுக்கு!
தினமும் எல்லாருக்குமாய் பொதுவாய்த்தான் விடிகிறது காலை; ஒரே மாதிரியாக விடிகிறதா வாழ்க்கை?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT