Published : 06 Jun 2015 06:02 PM
Last Updated : 06 Jun 2015 06:02 PM
தமிழ் திரையுலகின் இளம் இயக்குநர்களுக்காக 'பாகுபலி' படத்தை எப்படி உருவாக்கினார் என்று ஒரு நாள் வகுப்பு எடுக்க வேண்டும் என சூர்யா வேண்டுகோள் விடுத்தார்.
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'பாகுபலி'. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஜூலை 10ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
'பாகுபலி' தமிழ் பதிப்பின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 'பாகுபலி' மொத்த படக்குழுவும் இவ்விழாவில் பங்கேற்றது.
இவ்விழாவில் சூர்யா பேசியது, " 'பாகுபலி' படத்தின் பட்ஜெட் விஷயத்தில் மட்டும் பெரிய படம் கிடையாது. ராஜமெளலி உழைப்பிலும் பெரிய படம் தான். இந்திய சினிமா பெருமை கொள்ளும் விதமாக ஒரு படம் பண்ணியிருக்கிறார்கள்.
இந்திய சினிமாவை மகிமைப்படுத்தும் விதமாக காட்ட நம்மால் மட்டும் தான் முடியும். இப்படத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நான் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அது இன்று நடந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. கலைக்கு மொழி தடையாக இருக்கக் கூடாது. அனைத்து தரப்பிற்கும் இப்படம் சென்று சேர வேண்டும். தெலுங்கு, தமிழ் என சினிமாவை பிரிக்காதீர்கள்.
TROY, BENHUR போன்ற படங்களுக்கு நமது பதில் தான் 'பாகுபலி'. அவர்கள் படங்களை ஒரே உணர்வை வைத்து பண்ணி இருப்பார்கள். ஆனால், நமது படங்களில் பல உணர்வுகள் இருக்கிறது. பொன்னியின் செல்வன், மகாபாரதம், ராமாயணம் ஆகியவற்றில் உள்ள உணர்வுகள் எவ்வளவுக்கு எவ்வளவு இப்படத்தில் வைக்கலாம் என்று நினைத்து பணியாற்றி இருக்கிறார்கள்.
இந்தியா எவ்வளவு பணக்கார நாடாக இருந்தது என்பதை இப்படம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்பது போல ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரும் பணியாற்றி இருக்கிறார்கள். பிரபாஸ், ராணா இருவரிடமும் எப்படி இரண்டரை வருடங்கள் ஒரு படம் பண்ணுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறேன்.
இப்படத்தில் ஒவ்வொரு பாத்திரத்தில் நடித்தவர்களும் என்னுடைய பாத்திரம் தான் பெஸ்ட் என்று சொல்கிறார்கள். அதை எழுதுவது சாதாரண விஷயம் கிடையாது. எங்களிடம் நிறைய இளம் இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் இப்படம் எப்படி உருவாக்கினார்கள் என்று தெரிய வேண்டும். அவர்களுக்கு ஒரு நாள் வகுப்பு எடுக்க வேண்டும், அது அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
அனைவருமே திரையரங்கிற்கு சென்று இப்படத்தைப் பார்க்க வேண்டும், 8 கோடி பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்றால், 40 லட்சம் பேர் திரையரங்கிற்கு வந்து படத்தைப் பார்க்கிறார்கள். கண்டிப்பாக அனைவருமே திரையரங்கிற்கு வந்து பார்க்க கூடிய படமாக 'பாகுபலி' இருக்கும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT