Published : 10 Jun 2015 12:58 PM
Last Updated : 10 Jun 2015 12:58 PM

ஃபேஸ்புக்கில் ஆபாச கருத்தாளரை விளாசிய விசாகாவுக்கு த்ரிஷா பாராட்டு

ஃபேஸ்புக்கில் ஆபாச கருத்தாளரை விளாசிய நடிகை விசாகாவுக்கு நடிகை த்ரிஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

'பிடிச்சுருக்கு' எனும் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை விசாகா. அதன் பின்னர் தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாமல் மற்ற மொழிப் படங்களில் நடித்து வந்தார்.

சந்தானம் கதாநாயகனாக அறிமுகமான ''கண்ணா லட்டு தின்ன ஆசையா'' படத்தின் மூலம் திரும்ப கோலிவுட்டுக்குள் நுழைந்தவர் வாலிப ராஜா என்னும் படத்தில் நடித்தார். தற்போது விசாகா, ட்விட்டரில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார். விஷயம் இதுதான்...

தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஆபாசமாக கமெண்ட் செய்த நபர் ஒருவருக்கு சூடாக பதிலளித்து ட்ரெண்டாகி இருக்கிறார்.

சமூக வலைதளங்களின் மீது ஆர்வம் கொண்ட நடிகை விசாகா, படப்பிடிப்புகளின் போதும், சுற்றுலா செல்லும் போதும் எடுக்கும் தன்னுடைய படங்களை முகநூலில் பதிவேற்றுவது வழக்கம். அவற்றுக்குக் கருத்துச் சொல்லும் தனது ரசிகர்களுக்கு உடனடியாக பதிலளிப்பார்.

சமீபத்தில் "ஒவ்வொருவருமே மற்ற எல்லோருக்குமே வெளிநாட்டினர் தான்!" என்ற பொருள் தரக்கூடிய ஆங்கில வாக்கியங்கள் அச்சடிக்கப்பட்ட டிசர்ட்டை அணிந்து "இதுபோன்ற இன்னும் பல வாக்கியங்களை எதிர்பார்க்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

ஏராளமான கமெண்டுகள் வந்து குவிந்த நிலையில், ஒரு நபர், "பார்க்க நன்றாக இருக்கிறீர்கள். மார்பகங்களும்!" என்று கருத்துப் பதிவிட, கோபம் கொண்ட விசாகா, அதற்கு கடுமையான பதிலைப் பதிவு செய்தார்.

1. உங்கள் ப்ரொஃபைல் புகைப்படமாய் இருக்கும் அந்த அழகான குழந்தையின் படத்தை நீக்குங்கள்.

2. முதலில் உங்களின் சொந்தப் புகைப்படத்தை வைக்கும் துணிச்சல் இருக்க வேண்டும். பிறகு கமெண்ட் செய்யலாம்.

3. ஆம். நல்ல மார்பகங்கள்தான், நான் ஒரு பெண். தங்களுடைய மேலான அறிவுக்கு ஒன்றைக் கூற ஆசைப்படுகிறேன். எல்லாப் பெண்களுக்கும் மார்பகங்கள் இருக்கின்றன. உங்கள் அம்மா, தங்கை, மனைவி, பாட்டி, அத்தை, மகள், உறவினர்கள் என எல்லோருக்குமே. அவர்களிடமும் சென்று இதே வார்த்தையைச் சொல்வீர்களா? உங்களை எண்ணி வருத்தப்படுகிறேன்.

இதே வார்த்தையை என் முகத்தைப் பார்த்து உங்களால் கூற முடியுமா? இல்லையென்றால் என் முகநூல் பக்கத்தைவிட்டு வெளியேறுங்கள்."

இந்தப் பதிலுக்கு ஆச்சரியங்களும், ஆதரவுகளும் பெருகிய நிலையில், தற்போது அந்தப் பதிவை நீக்கியுள்ள விசாகா, தான் தேவையில்லாத சர்ச்சைகளுக்குள் சிக்க விரும்பவில்லை எனவும், இதுவரை ஆதரவு தந்தவர்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

விசாகா சிங்கின் இந்த கருத்துக்களை திரையுலகினர் பலரும் வரவேற்று இருக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் #Vishaka என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட்டாகி வருகிறது.

விசாகாவின் விளாசல் பதிலைப் பாராட்டியுள்ள நடிகை த்ரிஷா "இத்தகைய கோழைகளை எதிர்கொண்ட விதம் அற்புதம். பெண்களின் சக்தியையே இது காட்டுகிறது" எனும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் சிலாகித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x