Published : 03 Jun 2015 03:34 PM
Last Updated : 03 Jun 2015 03:34 PM

ரஜினி - ரஞ்சித் படத்தின் பின்னணி: லிங்கா பாதிப்புக் குழு புதிய தகவல்கள்

தங்கள் பிரச்சினையை ஒரு வாரத்திற்குள் தீர்க்கா விட்டால், அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிக்க இருப்பதாக, லிங்கா படத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குழுவை வழிநடத்தும் விநியோகஸ்தர் சிங்காரவேலன் தெரிவித்தார்.

மேலும், அவர் 'ரஜினி - ரஞ்சித் படம்' தொடர்பான பின்னணி என சில தகவல்களையும அவர் வெளியிட்டார்.

'லிங்கா' படத்தின் நஷ்ட ஈடு குறித்த பிரச்சினை இன்னும் தீராமல் சிக்கல் நீடித்து வருகிறது. உரிய பணம் கிடைக்கவில்லை என்று விநியோகஸ்தர் சிங்காரவேலன் திருப்பூர் சுப்பிரமணியனை நோக்கி சரமாரியாக கேள்விகளை எழுப்பி இருந்தார். அதற்கு திருப்பூர் சுப்பிரமணியம் " ஒரு வாரத்தில் இந்தப் பிரச்சினை முழுமையாக முடிந்துவிடும். நான் எந்த தருணத்திலும் ரஜினியின் கால்ஷீட் வாங்கித் தருவதாக சொல்லவே இல்லை" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று சிங்காரவேலன் மற்றும் பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அச்சந்திப்பில் சிங்காரவேலன் பேசியது, "ஒரு வாரத்திற்குள் உட்கார்ந்து பேசி எங்களுக்கு ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த வாரம் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை அறிவிக்க இருக்கிறோம்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று சொல்லி இருக்கிறார். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை, யாரிடமும் பொய் சொல்லவில்லை. எந்த நடவடிக்கை எடுத்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தாணு தான் எங்களை மிரட்டி வருகிறார். போலீஸிடம் கூறி கஞ்சா கேஸ் போடுவேன், பாலியல் தொழில் வழக்கு போடுவேன் என்று கூறி வருகிறார்.

என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான புகார்களை தாணு தெரிவித்து வருவதால், அவர் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறேன்.

எந்த ஒரு சலசலப்புக்கும், மிரட்டலுக்கு பின் வாங்க மாட்டோம். திரையரங்க உரிமையாளர்கள், முன்னணி தயாரிப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். நாங்கள் அவர்களது பேச்சை நம்பி ஏமாந்துவிட்டோம். தாணு ஒரு மிகச்சிறந்த நடிகர். மற்ற நடிகர்களிடம் கால்ஷீட் தேதிகள் வாங்கி தயாரிப்பதை விட, அவரே நடிக்கலாம்.

ரஜினி - ரஞ்சித் தயாரிப்பாளர் கூட தாணு அல்ல ராக்லைன் வெங்கடேஷ் தான். ரஞ்சித்திற்கு முன்பணம் கொடுக்கும் போது கூட நான் அவருடைய அலுவலகத்தில் தான் இருந்தேன். அன்றைக்கு உங்களுக்கு எல்லாம் நல்லது நடந்துக் கொண்டிருக்கிறது தம்பி என்று சொன்ன தாணு, இன்று அப்படியே மாறி எங்கள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிறார். ரஜினி படத்துக்கு தாணு 70 கோடி சம்பளம் கொடுக்கிறார். அதில் பாதிக்கு பாதி தானே எங்களுக்கு நஷ்டமே வருகிறது. அதையே நாங்கள் முழுவதுமாக கேட்கவில்லை. இன்னும் 15 கோடி கொடுத்தால் மட்டுமே இப்பிரச்சினை முழுவதுமாக தீரும்.

மேலும் இப்பிரச்சினை தொடர்ந்தால், தாணு தயாரிக்கும் படங்களுக்கு ரெட் போடுவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது" என்றார்.

மேலும், திருப்பூர் சுப்பிரமணியம் பத்திரிகையாளர் சந்திப்பில் செங்கல்பட்டு ஏரியாவுக்கு போக வேண்டிய 'லிங்கா' பணத்தை மன்னன் வாங்கிவிட்டார் என்று கூறப்பட்டது.

ஆனால், இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்கள் பலரும் எங்களுக்கு விநியோகஸ்தர் மன்னன் பணமே தராமல் இழுத்தடிக்கிறார். அவருடைய அலுவலகம் போனாலும் ஆள் இல்லை என்று புகார் தெரிவித்தார்கள்.

போராட்ட எச்சரிக்கை

இதன் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தாணு தயாரிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை எனவும், இந்த முடிவினை மற்ற திரையரங்கு உரிமையாளர்களுக்கு தெரிவிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது. ஒரு வார காலத்திற்குள் ரஜினிகாந்த் தலையிட்டு உரிய நிவாரணத்தை பெற்றுத் தராவிட்டால் எதிர்வரும் 13ம் தேதி ரஜினிகாந்த் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது" என்று அறிவித்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x