Last Updated : 22 Jun, 2015 03:14 PM

 

Published : 22 Jun 2015 03:14 PM
Last Updated : 22 Jun 2015 03:14 PM

ரோமியோ ஜூலியட்டை தடுக்காதது ஏன்?- டி.ராஜேந்தர் பதில்

'ரோமியோ ஜூலியட்' பட வெளியீட்டை தடுக்காதது ஏன் என 'விழித்திரு' இசை வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர் விளக்கம் அளித்தார்.

கிருஷ்ணா, வித்தார்த், தன்ஷிகா, பேபி சாரா, இயக்குநர் சமுத்திரக்கனி, இயக்குநர் வெங்கட்பிரபு, அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்க மீரா கதிரவன் இயக்கியிருக்கும் படம் 'விழித்திரு'. சத்யா இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தேவி திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்டு டி.ராஜேந்தர் பேசும்போது, "வாழ்க்கையில் தொலைஞ்சு போகுது என்று சொல்பவர்களால் ஜெயிக்கவே முடியாது. தொலைந்ததை எவன் ஒருவன் விடாமல் தேடிக் கொண்டிருக்கிறானோ அவன் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிப்பான். காதலில் தோற்றவன் தேடிக்கொண்டே இருந்தால், தேடிக் கொண்டே இருப்பான். அது ஒரு தேடல். கடமைக்காக போராடிவிட்டு ஈழத்தை இன்றைக்கு வரைக்கும் தேடிக்கிட்டே இருக்கிறானே. அதே போல தான், தேடிக் கொண்டே இருந்தால் தேடல் ஒரு நாள் கிடைக்கும். அந்த விடியல் ஒரு நாள் பிறக்கும்.

அந்த தேடல் என்ற உணர்வுமிக்கவனாக, இந்த படத்திலே மீரா கதிரவனிடம் இருந்த அந்த துடிப்பைப் பார்த்து மட்டும் தான் இப்படத்தில் நான் பாடினேன். 'ரோமியோ ஜூலியட்' பட இயக்குநர் லஷ்மன் தன்னை என்னுடைய ரசிகர் என்று சொன்னார். படத்திலே ஜெயம் ரவியை என் ரசிகராக காட்டியிருந்தார். என்னுடைய உரிமையை பெறாமல் பயன்படுத்திய என் வசனத்தை வெட்டி விட்டேன். பாட்டைக் கூட வெட்ட வேண்டும் என்றால் வெட்டி இருக்கலாம். ஆனால், அந்த பாட்டை என் உயிராக நினைக்கிறேன் என்று இயக்குநர் லஷ்மன் மற்றும் ஜெயம் ரவி தெரிவித்தார்கள்.

ஒரு தயாரிப்பாளரை புண்படுத்த வேண்டாம் என்று சங்கத் தலைவர் தாணுவும் கேட்டார். தயாரிப்பாளர் கஷ்டப்படக்கூடாது என்று தான் அப்பாட்டை பெருந்தன்மையோடு விட்டேன்.

’அரைச்ச மாவை அரைப்போமா’ என்று இயக்குநர் பேரரசு எழுதிய பாட்டு 'வல்லவன்' படத்தில் இடம்பெற்றது. அப்பாடல் மூலமாக என்னுடைய மகன் சிம்பு இந்த தலைமுறைக்கு என்னைக் கொண்டு சேர்ந்துவிட்டார். என்னுடைய படத்திற்கு மட்டும் பாட்டு எழுதிவிட்டு, யாருடைய படத்திற்கு போய் எழுதாதவன் நான். இயக்குநர் கேட்டுக் கொண்டதற்காக 'விழித்திரு' படத்தில் எழுதினேன்.

எனக்கு இனிமேல் வெளிச்சம் எல்லாம் தேவையில்லை. யாராவது இருளில் இருந்தால், அவர்களுக்கு என்னுடைய வெளிச்சத்தை காட்டி, அவர்களுக்கு வெளிச்சம் தர வேண்டும் என நினைக்கிறேன். ஒரு நாள் இரவில் ஒரு கதையைச் சொல்ல முடியும் என்ற இந்தப் படத்திற்கு, நான் ஒரு சின்ன மெழுகுவர்த்தியாக இருக்க வேண்டும் என இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன். " என்று உணர்ச்சி பொங்க பேசினார்.