Published : 05 Jun 2015 05:56 PM
Last Updated : 05 Jun 2015 05:56 PM
தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அள்ளிய 'காக்கா முட்டை' படம், ரசிகர்கள் மனதை அள்ளியதா?
கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி இயக்கிய குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து, 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்த மணிகண்டன் வெள்ளித்திரையில் தடம் பதித்திருக்கிறார். இந்த காரணங்களே 'காக்க முட்டை' மீது கவனம் ஈர்த்தன.
காக்க முட்டை கதை?
பெரிய காக்கா முட்டைக்கும், சின்ன காக்கா முட்டைக்கும் பீட்சா சாப்பிட வேண்டும் என்பதுதான் மிகப் பெரிய ஆசை. 300 ரூபாய் பீட்சாவுக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள்? கடைசியில் பீட்சா சாப்பிட்டார்களா? என்பதுதான் ஒரு வரிக் கதை.
இந்த ஒரு வரிக் கதையில் எந்த பம்மாத்தும் சினிமாத்தனமும் இல்லாமல் இயல்பாக, கலகலப்பாக படத்தை நகர்த்திய விதத்தில் அப்ளாஸ் அள்ளுகிறார் இயக்குநர் மணிகண்டன்.
பெரிய காக்கா முட்டையாக விக்னேஷும், சின்ன காக்கா முட்டையாக ரமேஷும் நடிப்பில் பின்னி இருக்கிறார்கள். மரத்தில் ஏறி காக்கா முட்டைகளை எடுக்கப் பார்க்கிறான் பெரிய காக்கா முட்டை. 3 காக்கா முட்டைகளையும் எடுத்துட்டு வா என்கிறான் சின்ன காக்கா முட்டை.
ம்ஹும்... ஒண்ணு உனக்கு. ஒண்ணு எனக்கு. இன்னொண்ணு காக்காவுக்கு என்கிறான் பெரிய காக்கா முட்டை...அரங்கம் கரவொலியில் அதிர்கிறது. அங்கிருந்து தொடங்கிய கரவொலி படம் முழுக்க அங்கங்கே நிறைந்திருந்தது.
அச்சு அசலான குழந்தைகள் பதிவை திரையில் பார்த்ததும், பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் 'என்ன மச்சான் பாலு மகேந்திரா படம் மாதிரி இருக்கு?' என்று தன் நண்பனிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
சிறையில் இருக்கும் அப்பாவிடம், வெளியில் இருக்கும் இரு காக்கா முட்டைகளும் சத்தம் போட்டு பேசுவது, பூனையுடன் விளையாடுவதாகச் சொல்வது ரசனையான காட்சிகள்.
தினம் 10 ரூபாய்க்கு நிலக்கரி தூள் எடுத்து கடைக்குப் போடும் காக்கா முட்டைகள் 10 நிமிஷத்தில் 10 ரூபாய் சம்பாதிப்பது இன்னும் சிரிப்பை வரவழைக்கிறது.
சிம்பு பீட்சா சாப்பிடுவதைப் பார்த்து, காக்கா முட்டைகளும் பீட்சா சாப்பிட ஆசைப்படுகிறார்கள். பீட்சா தித்திப்பா இருக்கும் போல இருக்குடா என்று குழந்தைகளோடு சேர்ந்து பாட்டியும் கேட்கிறாள். தியேட்டர் முழுக்க சிரிப்பலை தெறிக்கிறது.
ஒரு கட்டத்தில் அப்பா வேணாம். பீட்சா தான் வேணும் என அடம்பிடிக்கும் காக்கா முட்டைகள் குழந்தைத்தனத்தை விடாமல், இயல்பாக இருப்பதை தியேட்டர் முழுக்க இருக்கும் ரசிகர்கள் எந்த சலனமும் இல்லாமல் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சிம்பு இன்னும் 5 நிமிஷத்துல வந்திடுவார்...ராகுகாலம் 5 நிமிஷத்துல வருது சார் ...- இந்த வசனத்துக்கு டைமிங்கா அடிச்சிருக்காங்க டயலாக் என்று ஒருவர் முணுமுணுத்தார்.
பார்க்கில் சந்திக்கும் பையன் தான் வைத்திருக்கும் ஜெர்மன் ஷெப்பர்டு நாய்க்குட்டி 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியது என்கிறான்.
வீட்டில் இருக்கும் நாயை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்க நினைக்கிறார்கள். சொறி புடிச்ச நாய்க்கு 25 ஆயிரமா? போங்கடா என்று விரட்டுகிறார் ஆட்டோக்காரர். இந்தக் காட்சியை நாம் டிரெய்லரில் பார்த்திருக்கிறோம். ஆனால், கதைக்களத்தோடு பார்க்கும்போது அவ்வளவு இயல்பாக, நேர்த்தியாக இருக்கிறது.
சிட்டி சென்டர் கட்டிடத்தைப் பார்த்து, ''சத்தியமா நம்மை உள்ளே விட மாட்டாங்க'' என்று சின்ன காக்கா முட்டை சொல்லும் பன்ச் சூப்பர்ல என்று சொல்லவைக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக அபாரமாக நடித்திருக்கிறார். ரம்மி, பண்ணையாரும் பத்மினியில் பார்த்த ஐஸ்வர்யா நடிப்பில் அத்தனை முதிர்ச்சி. பக்குவப்பட்ட கதாபாத்திரத்துக்கு தகுந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.
பழரசம் கேரக்டரில் ஜோ மல்லூரி கச்சிதம். சிம்பு பீட்சாதான் சாப்பிடுவானா? ரசம் சோறு சாப்பிட மாட்டானா? என்ற ஜோ மல்லூரி கேள்விக்கும் தியேட்டர் குலுங்கத் தவறவில்லை.
அடிக்கடி ஏதாவது ஆட்டையைப் போட்டு பொழப்பை ரமேஷ் திலக் அண்ட் கோ கூட்டணி காமெடி பண்ணுகிறார்கள்.
அந்த கிளைமாக்ஸ் காட்சி இன்னும் அசத்தல். அந்தக் காட்சிக்கு கைதட்டல்கள் நேரம் அதிகரித்துக்கொண்டே சென்றது.
இயக்குநர் மணிகண்டனே ஒளிப்பதிவு செய்திருப்பது படத்துக்கு கூடுதல் பலம். சைதாப்பேட்டை சந்து பொந்துகள், குப்பத்து குடிசைகள், சிட்டி சென்டர், ரயில்வே பாதைகள் என எல்லாவற்றிலும் கேமராவால் புகுந்து விளையாடி இருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசை கதைக்கேற்றார்போல பொருந்திப் போகிறது. சில இடங்களில் சிலிர்க்கவும், நெகிழவும் வைக்கிறது.
படம் முடிந்ததும் தியேட்டரை விட்டு வெளியே வந்தோம். நல்ல படம் பார்த்த திருப்தியில் பேசிக்கொண்டபடி, ரசிகர்கள் நகர்ந்தார்கள்.
பசங்க ரொம்ப இயல்பா நடிச்சு இருக்காங்க. எந்த செயற்கையும் இல்லை என்று பேசிக்கொண்டிருந்தார் ஒரு நடுத்தர வயது மனிதர்.
துணிச்சலான முயற்சி என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு இளைஞர்.
குழந்தைகள் உலகத்தை அப்படியே அழகா பிரதிபலிச்சு இருக்காங்க என்று தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் வேட்டி சட்டை மனிதர் ஒருவர்.
பாலுமகேந்திரா, மகேந்திரன் படங்களுக்குப் பிறகு குழந்தைகள் உலகத்தை அப்படியே காட்டிய படம் என்று சிலாகித்துக் கொண்டிருந்தார் ஒருவர்.
இந்தப் படத்தை தயாரித்ததற்காக தனுஷும், வெற்றிமாறனும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT