Published : 18 May 2015 02:15 PM
Last Updated : 18 May 2015 02:15 PM

ஸ்டார் டைரி 4: அஜித் | ஷாலினியின் உறுதுணை

பாலா இயக்கத்தில் 'நான் கடவுள்' படத்துக்கு முதலில் ஒப்பந்தமானவர் அஜித். அப்போது அஜித்தின் வாழ்க்கையில் இனிமேல் ஏறுமுகம்தான் என்று பலரும் சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால், அப்படம் கைகூடவில்லை. அதனைத் தொடர்ந்து 'பரமசிவன்', 'திருப்பதி' என அஜித் நம்பி பண்ணிய படங்கள் யாவுமே அவருக்கு பெரிய பெயரை வாங்கிக் கொடுக்கவில்லை. அந்தநேரத்தில்தான் 'வரலாறு' நமக்கு கை கொடுக்கும் என்று மிகவும் நம்பினார். அப்படமும் பல்வேறு காரணங்களால் முடங்கியது.

இனிமேல் அஜித்தின் திரையுலக வாழ்க்கை முடிந்தது என்று பலரும் பேச ஆரம்பித்தார்கள். அவ்வாறு தன்னுடைய வாழ்க்கையில் அடி மேல் அடி விழுந்த போது, ஒவ்வொரு அடியிலும் இருந்து "உங்களால் முடியும்" என்று அஜித்தை தூக்கி நிறுத்தியவர் ஷாலினி மட்டுமே!

ஏப்ரல் 24, 2000-ம் ஆண்டு ஷாலினியை திருமணம் செய்தார் அஜித். திருமணத்துக்கு பிறகு ஷாலினிக்காக நிறைய விஷயங்களை மாற்றிக் கொண்டார் அஜித். அவருடைய நண்பர்கள் அனைவருமே இதை பெரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். அதிகம் கோபப்படுவது, அதீத புகைப்பழக்கம் உள்ளிட்ட பல விஷயங்களை மனைவிக்காக ஒரம் கட்டினார்.

ஒருசமயத்தில் கார் ரேஸ் வெறியர் அஜித். அப்போது ஸ்பான்சர் கிடைக்காமல் தன்னுடைய சொந்த பணத்தை போட்டு ரேஸில் பங்கேற்றார். படங்களும் தோல்வி, நண்பர்களுடன் பிரிவு, வரவேண்டிய சம்பள பாக்கி என நீங்கள் பார்க்கும் தற்போதைய அஜித்தை ஒரு காலத்தில் சுழற்றி அடித்தது வாழ்க்கை. அப்போது மனைவி ஷாலினியின் ஊக்கமும் உறுதுணையும்தான் அஜித் மீள்வதற்கு வழிவகுத்தது.

*

அஜித்தை பொறுத்தவரை தான் எளிமையைப் பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். இப்போதும் மாருதி ஸ்விஃட் கார்தான் வைத்திருக்கிறார். ஆனால், மனைவிக்கு கார் என்று வந்துவிட்டால் பெரிய ரகக் கார்கள் தான். அஜித் கார் ரேஸ் என்றால் ஷாலினி பேட்மின்டன் வீராங்கனை. எப்போதுமே குடும்பம் என்ற அரங்கில் ஷாலினியை சாம்பியனாக்கி ரசிப்பார் அஜித்.

திருமண நாளுக்கு விலையுர்ந்த பொருட்கள் வாங்கி கொடுத்து ஷாலினியை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துவது அஜித்துக்கு பிடித்தமான வழக்கங்களில் ஒன்று. திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டு உட்புறம் அனைத்துமே மர வேலைகளால் அலங்கரிக்கப்பட்டது. ஒவ்வொரு 5 வருடதுக்கும் புதிதாக மாற்ற வேண்டும். ஒரு முறை அவ்வாறு மாற்றிய தருணத்தில், ஒரு மிகப்பெரிய பூப்பந்தாட்ட அரங்கம் ஒன்றை வீட்டிற்குள்ளேயே நிறுவினார் அஜித். அப்போது ஷாலினி வேறு வீட்டில் இருந்ததால் அவருக்கு தெரியாது. எல்லாம் வேலைகளும் முடிந்து திருமண நாளும் வந்தது, அப்போது அந்த பூந்பந்தாட்ட அரங்கை திருமண நாள் பரிசாக அளித்தார் அஜித். இவ்வளவு பெரிய அரங்கு வீட்டிற்குள்ளேவா என ஷாலினி தனது கணவரின் அன்பைக் கண்டு நெகிழ்ந்து விட்டார் அன்றைய தினம்.

*

கேரளாவில் உள்ள கிறிஸ்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஷாலினி. திருமணத்திற்கு பிறகு இந்து - கிறிஸ்துவப் பிரார்த்தனைக் கூடம் போல மாற்றினார். இப்போது அஜித்தின் வீட்டு வாசலில் இந்து - கிறிஸ்து - இஸ்லாம் மூன்றும் அடங்கிய பெரிய கற்கள் சுவற்றில் பதிக்கப்பட்டு இருக்கும். விபத்துக்களால் தனது உடலில் இருக்கும் காயங்களுக்கு மருந்து சாப்பிட்டு குண்டான அஜித்தை, மிகவும் இளைத்து பழைய நிலைக்கு மாற்றினார் ஷாலினி. உண்மையைச் சொன்னால் 'பில்லா 2' படத்தில் "என் வாழ்க்கையைச் செதில் செதிலா செதுக்கினதுடா" என்று சொல்வார் அஜித். ஆனால் நிஜவாழ்க்கையில் அஜித்தை செதில் செதிலாக செதுக்கியவர் ஷாலினிதான்.

*

முன்பெல்லாம் அஜித், ரஜினியைப் போல நானும் பெரிய நடிகராக வளர்வேன் என பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ரசிகர் மன்றங்கள் வைத்திருந்தார். தற்போது பேட்டியும் அதிகமாக கொடுப்பதில்லை, ரசிகர் மன்றமும் இல்லை. படம் நல்லாயிருந்தால் திரையரங்கிற்கு சென்று பாருங்கள் என்று கூறிவிடுகிறார். அஜித்தின் இந்த மாற்றத்திற்கு காரணமே ஷாலினிதான் என்கிறார்கள்.

"நீங்கள் ஏன் இப்படி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நடப்பது விதிப்படி நடக்கும். படம் நன்றாக இருந்தால் ஒடப் போகிறது. சந்தோஷமாக எதற்கும் கவலைப்படாமல் இருங்கள். வெற்றி என்பது தானாக உங்களைத் தேடிவரும்" என்று ஷாலினி சொன்னவுடன் சரிதானே என்று உடனடியாக மாற்றிக் கொண்டார்.

முன்பு காபி வித் அனு நிகழ்ச்சியில் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது விஜய்யிடம், "அஜீத்திடம் உங்களுக்குப் பிடிச்ச ஒரு நல்ல விஷயம்?" என்று கேட்ட போது "தன்னம்பிக்கை!" என்றார் விஜய். அந்த தன்னம்பிக்கை அஜித்துக்கு மிகுதியாக முக்கியக் காரணம் ஷாலினி.

தொடர் வெற்றிப் படங்கள், கோடிகளில் புரளும் பணம், கோடிக்கணக்கில் ரசிகர்கள், முடிந்தவரை இயலாதவர்களுக்கு உதவிகள்... இது எப்படி சாத்தியமானது என்று அஜித்திடம் கேட்டால், அவர் தனது பார்வையை மனைவி ஷாலினி பக்கம் திருப்புவதை அவராலேயே தவிர்க்க முடியாது.

கா.இசக்கிமுத்து - தொடர்புக்கு esakkimuthu.k@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: >ஸ்டார் டைரி 3: அஜித் | எத்தகைய ரசிகர்களை 'தல' விரும்புவார்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x