Last Updated : 16 May, 2015 06:10 PM

 

Published : 16 May 2015 06:10 PM
Last Updated : 16 May 2015 06:10 PM

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை: முதல் பார்வை

'இயற்கை', 'ஈ', 'பேராண்மை' படங்களின் இயக்குநர் ஜனநாதனின் நான்காவது படம் 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை'. ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி என மூவரும் இணைந்திருக்கும் படம் எந்த மாதிரியான அனுபவத்தைக் கொடுத்தது?

டைட்டில் கார்டில் ஆர்யா பெயருக்கு கிடைக்காத கைத்தட்டல் விஜய் சேதுபதிக்குக் கிடைத்தது.

கைதியாக இருக்கும் ஆர்யாவுக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிடுகிறார். ஆனால், ஆர்யா அதுகுறித்த எந்த சலனமும் இல்லாமல் நீதிமன்றத்தில் ஜாலியாக உட்கார்ந்து கடலை சாப்பிடுகிறார். நீதிபதி தீர்ப்பு கூறியதும், என்னை போர்க்குற்றவாளியாகக் கருதி சுடுங்கள் என்று ஆர்யா கேட்கிறார். அப்போதே ரசிகர்கள் சத்தமில்லாமல் படம் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

ஆர்யாவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் பொறுப்பு சிறைச்சாலை அதிகாரி ஷாமிடம் ஒப்படைக்கப்படுகிறது. தூக்கில் போடும் அனுபவம்மிக்க ஊழியர் விஜய் சேதுபதியை ஷாம் தேடிப் பிடிக்கிறார். இதற்கிடையில், போராளி கார்த்திகா, ஆர்யாவை தப்பிக்க வைக்க முயற்சிக்கிறார். இதில் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.

பாலு என்கிற பாலுச்சாமியாக தீவிரமான கம்யூனிஸ்ட் போராளியாக ஆர்யா கச்சிதமாக நடித்திருக்கிறார். அளவான வசனம், தீர்க்கமான பார்வை, நம்பிக்கையோடு இயங்குதல் என எல்லா தளங்களிலும் தன்னை செதுக்கிக்கொண்டிருக்கிறார். ஆனால், மிகப்பெரிய ரயில் கொள்ளையை நடத்திய ஆர்யா எந்த இடத்திலும் புத்திசாலியாகவே காட்டப்படவில்லை.

ஷாம் சிறைச்சாலை அதிகாரி மெக்காலே கேரக்டருக்கு அவ்வளவு பொருத்தம். சட்டப்படிதான் எதையும் செய்வேன். சட்டம் தான் குற்றங்களைத் தடுக்கும். ''செஞ்ச தப்புக்கு ஏத்த மாதிரி கையை வெட்டணும், காலை வெட்டணும், தலையை வெட்டணும், தப்பு பண்ணவனை நடுரோட்டுல நிக்க வெச்சு கல்லாலயே அடிச்சு கொல்லணும்'' என்கிற ஸ்ட்ரிக்ட் ஆபிஸராக தீவிரமாக நடித்திருக்கிறார். நிதானமான, உறுதியான ஷாமின் நடவடிக்கைகள்தான் படத்தை நகர்த்தவே உதவுகின்றன.

தூக்கில் போடும் ஹேங்மேன் எமலிங்கம் கேரக்டரில் விஜய் சேதுபதி பக்கா ஃபிட். சென்னை பாஷை பேசிக்கொண்டு, சரக்கடித்துவிட்டு சலம்புவதும், எமோஷனில் கரைவதுமாக மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். படம் முழுக்க ஃபெர்பாமன்ஸில் கவனம் ஈர்ப்பது விஜய் சேதுபதிதான்.

போராளியாக கார்த்திகா, குயிலி கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடித்திருக்கிறார். காதல், கிளாமர், டூயட் என்று இல்லாத அழுத்தமான பாத்திரத்தில் நடித்ததற்காக கார்த்திகாவைப் பாராட்டலாம்.

ஜனாதிபதி தேர்தலில் நின்றதற்கான காரணத்தை விஜய் சேதுபதி சொல்வது, கைதி பல வருடங்களுக்குப் பிறகு நிரபராதி என்று தெரிந்ததும் விடுதலை செய்யப்படுவதும், அந்தக் கைதி குடும்பத்தை இழந்து கண்ணீரில் கரைவதும் என சமகால சூழலை கொஞ்சம் நையப் புடைத்திருக்கிறார் இயக்குநர் ஜனநாதன்.

விஜய் சேதுபதி அறிமுகப் படலத்தில் அப்படி ஒரு பாடல் அவசியம்தானா சாரே?

படத்தின் முக்கிய மையமாக இருக்கும் ஆர்யாவின் பின்புலம் என்னவென்றே தெரியவில்லை. கார்த்திகாவுக்கும் அப்படியே.

விஜய் சேதுபதியின் பின்புலமும், கதாபாத்திர வடிவமைப்பும் நேர்த்தியாகவும், இயல்பாகவும் உள்ளது.

எல்லோரையும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும், ரகசியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஷாம் எப்படி விஜய் சேதுபதியை மட்டும் கண்காணிக்காமலேயே இருக்கிறார்?

ஷாம் நினைத்திருந்தால் விஜய் சேதுபதிக்குப் பின்னால் இருக்கும் அந்த கூட்டத்தையே பிடித்திருக்கலாமே?

வெள்ளை பேப்பரில் பாலில் எழுதுவது, சமஸ்கிருதத்தில் துப்பு கொடுப்பது, சட்டையில் க்யுஆர் கோடு (QR code) எல்லாம் நல்ல ஐடியா தான். ஆனால், எதுவும் அடடே என ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கு க்ளிக் ஆகவில்லை.

உலகக் கழிவுகளை இந்தியாவில் கொட்டுவதைக் குறித்து உரக்கப் பேசுகிறார் ஆர்யா. அதற்குப் பிறகு யாருமே அதை கண்டுகொள்வதில்லையே. மரண தண்டனையின் நீட்சியாகவே படம் நீள்கிறதே?

ஷாமும்- ஆர்யாவும் தனியாக பேசும் காட்சி எந்த அளவுக்கு காத்திரமாக இருந்திருக்க வேண்டும்? எதைப்பற்றியும் தெளிவுபடுத்தாமல் காமா சோமோவென்று நகர்வது எந்த விதத்தில் நியாயம்? படத்தின் மொத்த பலமும் அங்கே புஸ்ஸாகிப் போய்விடுகிறது.

செல்வகுமாரின் சிறைச்சாலை செட் 'ரியல்' உணர்வைத் தருகிறது. சிறைச்சாலை குறித்த விதிமுறைகள், கட்டுப்பாடுகள் எல்லாம் இம்மி பிசகாமல் அப்படியே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆனால், அதே போல படத்தின் திரைக்கதையை ஜம்ப் ஆகாமல் இருக்கும்படி கவனம் செலுத்தி இருந்தால், வசன ரீதியான பிரச்சாரத்தைத் குறைத்திருந்தால் 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக பட்டா போட்டு அமர்ந்திருக்கும்.

ஆனாலும், அசுத்தம், மரணதண்டனை , கருணை மனு ஆகியவற்றைப் பேசிய விதத்தில் புறம்போக்கு தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம்.













FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x