Last Updated : 02 May, 2015 09:20 AM

 

Published : 02 May 2015 09:20 AM
Last Updated : 02 May 2015 09:20 AM

இன்று மதியம் முதல் உத்தம வில்லன்: திருப்பதி பிரதர்ஸ் அறிவிப்பு

இன்று மதிய காட்சிகள் முதல் 'உத்தம வில்லன்' திரைப்படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் அறிவித்திருக்கிறது.

கமல், பூஜாகுமார், ஆண்ட்ரியா, பார்வதி மேனன், மறைந்த இயக்குநர் பாலசந்தர் உள்ளிட்ட பலர் நடிக்க, ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கும் படம் 'உத்தம வில்லன்'. ராஜ்கமல் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்க, திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருக்கிறது. ஈராஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

மே 1ம் தேதி வெளியீடு என்று விளம்பரப்படுத்தினார்கள். ஆனால், கடைசி கட்டத்தில் படத்துக்காக கடன் வாங்கிய விவகாரத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சிக்கியது.

சுமார் 40 கோடிக்கும் அதிகமான தொகை தங்களுக்கு வர வேண்டியது இருக்கிறது. அதனைக் கொடுத்துவிட்டு படத்தை வெளியிடும்படி பைனான்சியர்கள் நெருக்கடிக் கொடுத்தார்கள். க்யூப் நிறுவனத்தினரிடம் தங்களுடைய அனுமதியின்றி படத்தை வெளியிடக் கூடாது என்று கூறிவிட்டார்கள் பைனான்சியர்கள். இதனால் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

நேற்று காலை முதல் தயாரிப்பாளர் சங்கத்தில் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்பேச்சுவார்த்தையின்படி மாலை வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆனால், மாலை வரை பிரச்சினை தொடர்ந்ததால் மாலையும் படம் வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கமல் திரைப்படம் என்பதால் தொடர்ச்சியாக பிரச்சினை சுமூகமாக முடித்துவைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்கள்.

அதிகாலை வரை பேச்சுவார்த்தை நீண்டுக் கொண்டே சென்றிருக்கிறது. ஒரு வழியாக அனைத்து பிரச்சினைகளும் சுமூகமாக தீர்க்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், " தாமதமானதுக்கு வருந்துகிறோம். 'உத்தம வில்லன்' திரைப்படம் இன்று மதிய காட்சிகள் முதல் திரையிடப்படும்(We Apologise for the delay #Ulaganayagan #Uttama Villain From Today noon show onwards ....)" என்று திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பால் கமல் ரசிகர்கள் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x