Last Updated : 21 May, 2015 12:00 PM

 

Published : 21 May 2015 12:00 PM
Last Updated : 21 May 2015 12:00 PM

’காரிருளே காரிருளே இதயத்தை தொலைப்பதென்ன’- கமல்ஹாசன் குரலில் ‘அவம்’ படப் பாடல்

விஜய் வில்வகிரிஷ் இயக்கத்தில் வெளிவர வுள்ள ‘அவம்’ படத்துக்காக ‘காரிருளே காரிருளே இதயத்தை தொலைப்பதென்ன’ என்று தொடங்கும் பாடலை கமல்ஹாசன் பாடியுள்ளார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப்பாடல் நேற்று வெளியானது.

கமல்ஹாசனின் குரலில் வெளிவந்துள்ள இந்தப் பாடல் உருவான விதம் குறித்து, மதன் கார்க்கி கூறியதாவது:

‘ஒரு பெண்ணுக்கு தீங்கிழைத்த குற்ற உணர்ச்சியில் இருந்து ஆண் ஒருவன் மீள முடியாமல் தவிக்கும் சூழலில் இடம்பெறும் பாடல் இது’ என்று இயக்குநர் விஜய் வில்வகிரிஷ் பாடலுக்கான களத்தை விவரித்தார்.

கதையில் அந்தப் பெண் அவனை மன்னித்தும்கூட தான் செய்த தவறிலிருந்து அவனால் வெளியே வர முடியவில்லை. அந்த குற்ற உணர்ச்சியே ஒரு கட்டத்தில் அவள் மீது அவனுக்கு காதலைத் தூண்டுகிறது. இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி இந்தப் பாடலுக்கு மென்மையாக இசையமைத்துள்ளார்.

இந்தப் பாடலை கமல் சார் பாடினால் நன்றாக இருக்குமே என்று யோசித்தோம். சுந்தரமூர்த்தியின் அப்பா குமார் மூலம் படக்குழுவினரோடு கமல் சாரை சந்தித்தோம். பாடல் வரிகளையும் டியூனையும் கேட்ட அவர், பாடுவதற்கு சம்மதம் தெரிவித்ததுடன் எங்களை பாராட்டி உற்சாகப்படுத்தினார்.

‘புதுப்பேட்டை’ படத்துக்குப் பிறகு வேறொரு இயக்குநர், நடிகர் படத்துக்காக கமல் சார் பாடியுள்ள பாடல் இது. பாடலின் ஒரு இடத்தில் ‘பூமியெங்கும் அலைகிறேன்… ஒலியின்மை தேடியே..’ என்ற வரி இடம்பெற்றிருக்கும். அந்த வரியை கமல் சார் பாடும்போது, ஒரு நடிகர் பாடகராக மாறி பாடும்போது அந்தப் பாடல் எப்படி வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்பதை அருகே இருந்து உணர்ந்தோம்.

இப்பாடல் பதிவின்போது அவர் எழுதிய கவிதைகளை எல்லாம் எங்களிடம் காட்டினார். ‘குறிப்பிட்ட சில கவிதைகள் வெளியிடவே முடியாது. அது வெளிவந்தால் பிரச்சினைகள் வரும்’ என்று கூறி அவரே படித்தும் காட்டினார். அவர் தொடர்ந்து நிறைய பாடல்களை பாட வேண்டும்.

இவ்வாறு மதன் கார்க்கி கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x