Published : 28 May 2015 02:46 PM
Last Updated : 28 May 2015 02:46 PM
'லிங்கா' விவகாரத்தில் ரஜினிக்கு ஆதரவாக, தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் இணைந்து களமிறங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதையொட்டி, முதல்வர் ஜெயலலிதாவையும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 12-ல் வெளியானது ரஜினி நடித்த 'லிங்கா'. அந்தப் படம் மக்களிடையே வரவேற்பு பெறாமல் தோல்வியை தழுவியது. பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட லிங்கா, விநியோகஸ்தர்களுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் தொடர்ச்சியாக போராட்டங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என விநியோகஸ்தர்கள் களம் இறங்கினர். இதனைத் தொடர்ந்து மொத்த நஷ்டமான ரூ.33 கோடிக்கு தயாரிப்பாளர் சங்கம், ரஜினி தரப்பில் திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்டவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள்.
அந்தப் பேச்சுவார்த்தையில் இறுதியில் ரூ.12.5 கோடி ரஜினிகாந்த் தரப்பில் தாணு மற்றும் திருப்பூர் சுப்ரமணியத்திடம் கொடுத்ததாக விநியோகஸ்தர் சிங்காரவேலன் தெரிவித்தார். அந்தத் தொகையில் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.
ஆனால், 'லிங்கா' பிரச்சினையில் முன்னின்று செயல்பட்ட சிங்காரவேலன் மற்றும் சில விநியோகஸ்தர்களுக்கு மட்டும் ரூ.5.9 கோடியை பிரித்துக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை இன்னும் கொடுக்கவில்லை. இதற்கான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இன்னும் எட்டப்படவில்லை. தற்போது 'லிங்கா' பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
மவுனம் காக்கும் ரஜினி
முதல் முறை பிரச்சினை எழுந்தபோது, நீண்ட நாட்களாக மவுனம் காத்து வந்தார் ரஜினி. ஆனால், ஒவ்வொரு முறையும் தனது பெயர் களங்கப்படுத்தப்படுவதால் தயாரிப்பாளரிடம் பேசி, தானும் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் தனது பெயரால் பிரச்சினை நீடித்து வருவதால் தொடர்ச்சியாக ரஜினிகாந்த் மன உளைச்சலில் இருக்கிறாராம். இம்முறை எந்தவித சமரசமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடிவெடுத்து இருப்பதாக ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தார்கள்.
அதுமட்டுமன்றி, இந்த மாதிரியான பிரச்சினை எதுவும் வரக்கூடாது என்றுதான் தனது அடுத்த படத் தயாரிப்பாளரான தாணுவிடம் "சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துக் கொடுக்கிறேன். என்ன பிரச்சினை வந்தாலும் நீங்கள் மட்டுமே பொறுப்பு" என்று தெரிவித்திருக்கிறார் ரஜினி. இனிமேல் தான் நடிக்கும் படங்களால் இது போல எந்த ஒரு பிரச்சினை எதுவுமே வரக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறாராம் ரஜினி
ரஜினி ஆதரவாக களமிறங்கும் நடிகர்கள்
ஒவ்வொரு முறையும் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினியின் பெயர் களங்கப்படுத்தப்படுவதால் பல முன்னணி நடிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.
இது குறித்து முன்னணி நடிகர் ஒருவர் கூறும்போது, "ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் தோல்வி என்றால், அப்படத்தில் நடித்த நடிகர்கள் அல்லது தயாரிப்பாளர் தனது அடுத்த படத்தின் வியாபாரம் மூலமாக நஷ்ட கணக்குகளை சரி செய்து கொள்வது காலங்காலமாக நடந்து வருகிறது.
'லிங்கா' படத்தை புதிதாக வந்திருக்கும் விநியோகஸ்தர்கள் வாங்கிக் கொண்டு ரஜினி சாரின் பெயருக்கு தொடர்ச்சியாக களங்கம் விளைவிப்பது போலவே பேசி வருகிறார்கள். இது குறித்து பல முன்னணி நடிகர்களிடம் பேசி வருகிறோம். விரைவில் இது குறித்து பேசி ஒரு நல்ல முடிவு எடுப்போம். அந்த முடிவு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிடுவதாகக் கூட இருக்கலாம்" என்று தெரிவித்தார்.
ரஜினிக்கு ஆதரவாக நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுவிட்டு, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் திட்டமாம்.
'லிங்கா' விநியோகஸ்தர்கள் பலரும் தொடர்ச்சியாக தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்கள், நடிகர்கள் போன்றவர்களை எதிர்த்து அறிக்கை வெளியிட்டு வருவது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்ற விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT