Published : 07 Apr 2015 04:32 PM
Last Updated : 07 Apr 2015 04:32 PM

சென்சார் போர்டை கலாய்க்கிறதா ராஜதந்திரம் படக்குழு?

பெரிய நட்சத்திரப் பட்டாளம் இல்லாமல் சில வாரங்களுக்கு முன் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'ராஜதந்திரம்'.

வீரா, ரெஜினா, இளவரசு உள்ளிட்டோர் நடித்த இந்தத் திரைப்படம் ஹாலிவுட்டின் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. பெரிய எதிர்பார்ப்பு இல்லையென்றாலும் படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது 'ராஜதந்திரம்' வெளியாகி 25 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், படக்குழு, சிறப்பு வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளது.

'ராஜதந்திரம்' படத்தில் நடித்துள்ள 'தர்பூகா' சிவா இந்த வீடியோவில் தோன்றி ரசிகர்களிடம் பேசுகிறார். "மாஸ் ஹிட், வசூல் மழை இப்படியெல்லாம் சொல்ல மாட்டோம். சக்ஸஸ் மீட் வெக்க மாட்டோம்" என வீடியோ தொடங்கியதிலிருந்தே கலாய்ப்பு ஆரம்பமாகிறது.

தொடர்ந்து, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, படத்தில் நீக்கப்பட்ட வசனங்கள், காட்சிகளின் தொகுப்பைப் பற்றி சிவா பேசுகிறார். படத்துக்கு யு சான்றிதழே வழங்கப்பட்டுள்ளது. யு/ஏ சான்றிதழ் வாங்கியிருந்தால் என்னவாகியிருக்கும், அப்போது படத்தில் என்ன வசனங்கள், காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்பதை காட்சிகளாகவே விளக்கியுள்ளனர். முக்கியமாக யு சான்றிதழால் படத்தின் இறுதிக் காட்சியே மாறியிருக்கிறது எனத் தெரிகிறது.

"இப்படியெல்லாம் இருந்தா குழந்தைங்க பார்க்க கூடாது. தப்பு" என நையாண்டி தொனியிலேயே வர்ணனை விரிகிறது. சென்சார் போர்டின் செயல்பாடு குறித்து ஏற்கனவே தேசிய அளவில் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், தற்போது ராஜதந்திரம் குழுவும் தன் பங்குக்கு விமர்சனம் செய்துள்ளதாகவே தெரிகிறது.

அந்த வீடியோ