Published : 06 Apr 2015 06:56 PM
Last Updated : 06 Apr 2015 06:56 PM
தமிழ் சினிமாவில் பெண்களை மையமாக வைத்து படம் உருவாகும் டிரெண்ட் தற்போது இல்லாமல் இருக்கிறது என்று நடிகை ஜோதிகா கூறினார்.
2டி எண்டெர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா தயாரித்து, ஜோதிகா நடிக்கும் ‘36 வயதினிலே’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், பாலா, வஸந்த், வெங்கட்பிரபு, பாண்டிராஜ், நடிகைகள் ஜோதிகா, அபிராமி உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகா பேசியதாவது :-
வீட்டுக்கு வெளியே வந்து நான் இந்தப்படத்தில் நடிப்பதற்கு பெரிய பலமாக இருந்தது என் ப்ரெண்ட்ஸ் என்ற பெண் சக்திகள்தான். அனு, லட்சுமி, தேவி, பூர்ணிமா உள்ளிட்ட சில முக்கியமான தோழிகள் கொடுத்த ஊக்கம்தான் இந்தப்படத்தில் நடிக்க உதவியாக இருந்தது.
அத்தை, மாமா இருவரையும் அம்மா, அப்பா என்றுதான் அழைப்பேன். இதுவரைக்கும் ஒரு நாள் கூட ‘இதுமாதிரி பண்ணாதே’ என்று கூறியதே இல்லை. சினிமாவில் இயக்குநர் பிரியதர்ஷன் சார் அறிமுகப்படுத்தினாலும், வஸந்த் சார் வழிநடத்தல் கேரியரை கலர்ஃபுல்லாக்கியது.
இந்தப் படத்தில் எல்லா டெக்னீஷியன்கள் உழைப்பும் ரொம்பவே ஸ்பெஷலாக இருந்தது. இசைக்கோர்ப்பின் போது சந்தோஷ் நாராயணன் மனைவி கூடவே இருந்து பார்த்தாங்க. படப்பிடிப்பின்போது கேமராமேன் திவாகரின் மனைவி உடன் இருந்தாங்க. நல்ல அலைவரிசை கொண்ட ஜோடி. படப்பிடிப்பு முழுக்க பரபரப்பாக ஒரு ஆண் மாதிரியே கேமராமேனுக்கு உதவியாக இருந்ததை எல்லாம் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது.
என்னோட சின்ன வயதில், என் அம்மா தம்பியை எப்படி ட்ரீட் பண்ணுவாங்களோ, அதே மாதிரிதான் என்னையும் ட்ரீட் பண்ணுவாங்க. பையன், பொண்ணு என்று அம்மா பிரித்துப் பார்த்ததில்லை. அதெல்லாம் இப்போ வரைக்கும் எனக்கு பல இடங்களில் உதவியாக இருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லோருமே இப்படி ஒரு அழகான அனுபவத்தோடுதான் கழித்தோம். இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இப்படி ஒரு சிறந்த படத்தை எனக்குக் கொடுத்திருக்கிறார். அவருக்கு நன்றி.
தமிழில் தற்போது பெண்களை மையமாக வைத்து படம் உருவாகும் டிரெண்ட் இல்லை. மலையாளம், தெலுங்கு, இந்தியில் அந்த சூழல் உள்ளது. இங்கே இல்லாமல் இருப்பதற்கான காரணம் ஏனென்று தெரியவில்லை. இந்த சூழலில் பெண்ணை மையமாக வைத்து இப்படி ஒரு கதையின் பின்னணியில் மீண்டும் நடிக்க வந்திருப்பது மகிழ்ச்சி. இதற்கு பின்னணியாக இருப்பது கூட்டு உழைப்புதான்.
இந்தப் படத்தோட தயாரிப்பாளர் சூர்யா. அவர்தான் என் உலகம். சென்னைக்கு புதிதாக வந்தபோது நான் சந்திந்த முதல் மனிதர். அப்போ இருந்து இப்போ வரைக்கும் எல்லா வகையிலும் ஒரு தூண் மாதிரி இருப்பது அவர்தான். கணவருக்கு நன்றி சொல்லக்கூடாது என்று சொல்வார்கள். அவரை கணவராக அடைந்ததை பெருமையான விஷயமாக கருதுகிறேன்’’
இவ்வாறு நடிகை ஜோதிகா பேசினார்.
சூர்யா பேசுகையில், ‘‘ திருமணத்திற்குப் பிறகு கடந்த 8 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விடுவது, குளிக்க வைப்பது என்று எல்லாமே ஜோதிகாதான். அழகான அம்மாவாக இருக்க ஒரு நாள் கூட தவறினதே இல்லை. வீட்டில் இருக்கும் போது ஒரு நல்ல படம் ஓடினால், ‘எப்பவாவது நடித்தால் இது மாதிரி ஒரு படம் நடிக்க வேண்டும்’ என்று பேச ஆரம்பிப்பாங்க. அதையும் பாதியிலேயே பேச்சை நிறுத்தி விடுவாங்க.
வர வேண்டும், வரணும் எல்லாவற்றையும் அவங்களுக்குள்ளேயேதான் வைத்திருந்தாங்க. ஒரு படத்தில் புரமோஷன் அப்போதான் இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் உதவியாளர் மூலம் இந்தப்படத்தின் டிவிடி கிடைத்தது. ரீ என்ட்ரியாக வரும் போது இப்படி ஒரு படம் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று அப்போதே நினைத்தோம்.
அதற்கான வேலைகள் அடுத்தடுத்து உடனடியாகத் தொடங்கி இன்று படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வரைக்கும் தொட்டுவிட்டோம். ரசிகர்கள் கடந்த 8 ஆண்டுகளாகவே படப்பிடிப்பு தொடங்கி என்னை எங்கே பார்த்தாலும் ‘‘ஜோதிகா நடிப்பதை ஏன் தடுத்துவிட்டீர்கள்’’ என்று கேட்டுக்கொண்டே இருப்பாங்க. இது மாதிரி சரியான கதை அமையும் நேரத்திற்காகத்தான் காத்துக்கொண்டிருந்தோம்’’ என்றார்.
நிகழ்ச்சியில், படத்தின் இசைத்தட்டை சூர்யா, ஜோதிகா மகள் தியா வெளியிட, மகன் தேவ் பெற்றுக்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT