Published : 02 Mar 2015 10:13 AM
Last Updated : 02 Mar 2015 10:13 AM
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், பூஜா குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'உத்தம வில்லன்'. ஜிப்ரான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. லிங்குசாமி தயாரித்திருக்கும் இப்படத்தை ஈராஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
'உத்தம வில்லன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கமல்ஹாசன் படத்தின் பாடல்களை பதிவிறக்கம் செய்யும் இணையதளத்தை வெளியிட, மும்பையில் இருக்கும் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் FACETIME தொழில்நுட்பம் மூலம் பெற்றுக் கொண்டார்.
இசை வெளியீட்டு விழா தொடக்கத்தில் மறைந்த இயக்குநர் பாலசந்தர் கமலுக்கு எழுதிய கடிதம் ஒலி வடிவில் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமல் மேடையில் தோன்றினார்.
அதனைத் தொடர்ந்து கமல் பேசியது:
இந்த இசை நிகழ்ச்சிக்காக நிறைய ஒத்திகை பார்த்து வந்தேன். இப்போது பாலசந்தர் சார் பேசிய வார்த்தைகள் என்னை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது. நான் ஒத்திகை பார்த்த அனைத்தையும் என்னால் பேச முடியுமா என்று தெரியவில்லை.
எனக்கு அவருக்குமான உறவு 40 ஆண்டுகளைக் கடந்த உறவு. பாலசந்தர் சாரைப் பற்றி தாமதமான நினைவுக் கூறல் என்றாலும் அவரது இறப்புக்கு பிறகு பல மேடைகளில் பேசியிருக்கிறேன். என்னைப் போல நிறையப் பேருக்கு பாலசந்தர் அவர்கள் அடையாளமாக இருந்திருக்கிறார். எனக்கு அவர் குரு அல்ல, மகா குரு.
'உத்தம வில்லன்' படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்ட போது, மறுப்பு ஏதும் சொல்லாமல் நடிக்க வந்தததுக்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இது போன்ற ஒரு மேடையில் அவர் இருக்க மாட்டார் என்ற விஷயம் எனக்குத் தெரியாது. அதனால், பல தகவல்களை சேகரிக்காமல் விட்டு விட்டேன். பார்த்திபன் பேசும் போது, கே.பி.சாரின் பாதிதான் கமல் என்றார். அந்த வார்த்தையை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
கர்வமாக இல்லாமல் உரிமையோடு, கடமையோடு ஏற்றுக் கொள்கிறேன். அந்த உரிமையையும், கடமையையும் அங்கீகரிக்கும் விதத்தில் அவரின் நிழலாக இருந்து அவரின் பணிகளைத் தொடர்வேன்.
ரஜினியும், கமலும் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள். ரஜினி கூட 'முரட்டுக்காளை' மாதிரியான படங்களில் நடித்து நடிகனாக வளர்ந்திருப்பார். ஆனால், பாலசந்தர் சார் மட்டும் இல்லை என்றால் இப்போது இருக்கிற கமல் வேறு ஒரு கமலாக மட்டுமே இருந்திருப்பேன்.
இனிமேல் நான் வாழும் வாழ்க்கையில் அவரை மறவாமல் வாழ்வதே என்னுடைய முக்கியமான பணி" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT