Published : 13 Mar 2015 05:14 PM
Last Updated : 13 Mar 2015 05:14 PM
'உத்தம வில்லன்' வெளியீட்டு பேச்சுவார்த்தையின் போது 'விஸ்வரூபம்' வழக்கு தொடர்பாக எழுந்த கோரிக்கையை கமல்ஹாசன் நிராகரித்துவிட்டார்.
'விஸ்வரூபம்' சமயத்தில் அபிராமி ராமநாதன் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பன்னீர் செல்வம் இருவரும் படத்தை வெளியிட முடியாது என்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி மற்றும் அறிக்கை வெளியிட்டனர்.
இதனை வைத்துக் கொண்டு 'காம்படிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா (competition commission of india)' அமைப்பில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார் 'விஸ்வரூபம்' படத் தயாரிப்பாளரான சந்திரஹாசன். அந்த வழக்கை விசாரித்த அமைப்பினர், அபிராமி ராமநாதன் மற்றும் பன்னீர் செல்வம் இருவர் மீது பெரும் தொகை அபராதம் விதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தற்போது கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி இருக்கும் 'உத்தம வில்லன்' ஏப்ரல் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது அபிராமி ராமநாதன் மற்றும் பன்னீர்செல்வம் இருவரும் 'விஸ்வரூபம்' வழக்கை கையில் எடுத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக அபிராமி ராமநாதன் தலைமையில் பன்னீர் செல்வம், அருள்பதி, செல்வின்ராஜ், அன்புச் செழியன் ஆகியோர் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் கமல்ஹாசனை சந்தித்து 'விஸ்வரூபம்' வழக்குத் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
விரைவில் 'காம்படிசன் கமிஷன் ஆஃப் இந்தியா' தரப்பில் இருந்து தங்களுக்கு எதிராக தீர்ப்பு வரவிருப்பதால், வழக்கில் சமரசமாக போய்விடலாம் என்று கமல்ஹாசனிடம் பேசியிருக்கிறார்கள். "'காம்படிசன் கமிஷன் ஆஃப் இந்தியா' அமைப்பில் வழக்கில் சமரசம் செய்ய இடமில்லை. ஆகையால் என்னால் எதுவும் செய்ய முடியாது" என்று கமல் தெரிவித்திருக்கிறார்.
அப்படியென்றால் விதிக்கப்படும் அபராதத் தொகையை நீங்களே செலுத்தி விடுங்கள் என்ற கமல்ஹாசனிடம் பன்னீர் செல்வம் கோரிக்கை வைக்க, அதையும் கமல்ஹாசன் நிராகரித்துவிட்டார். வழக்கு செலவையாவது ஏற்க வேண்டும் என்று கூறியதற்கு, ”எதிர்த்து வாதாடியது நீங்கள். அதற்கு நான் ஏன் பணம் தர வேண்டும்?” என்று அதையும் கமல்ஹாசன் நிராகரித்துவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT