Published : 03 Mar 2015 12:36 PM
Last Updated : 03 Mar 2015 12:36 PM
'ஆடுகளம்' படத்துக்காக தேசிய விருது வென்ற எடிட்டர் கிஷோர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
'ஈரம்', 'ஆடுகளம்', 'பயணம்', 'எங்கேயும் எப்போதும்', 'காஞ்சனா', 'பரதேசி', 'மதயானைக் கூட்டம்', 'நெடுஞ்சாலை' உள்ளிட்ட பல வரவேற்பு பெற்ற படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்தவர் கிஷோர்.
இன்னும் திருமணம் செய்துகொள்ளாத 32 வயது இளம் திரைப்பட தொழில்நுட்பக் கலைஞரான இவர், தமிழ்த் திரையுலகில் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்படுபவர். 'ஆடுகளம்' படத்தின் எடிட்டிங் பிரிவில் தேசிய விருது வென்று கவனத்தை ஈர்த்தவர்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விசாரணை' படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்து வந்தபோது மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள்.
கிஷோரை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையில் ஓர் இடத்தில் ரத்தம் கட்டியிருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி செய்திருக்கிறார்கள். அப்போது 24 மணி நேரத்தில் நினைவு திரும்பிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் நினைவு திரும்பவில்லை. இன்னும் கோமா நிலையில் இருக்கிறார்.
இந்நிலையில், மீண்டும் இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
கிஷோருக்கு விரைவில் நினைவு திரும்பி பழைய நிலைமைக்கு வரவேண்டும் என்று திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இதற்கென #GetWellSoonKishore என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் பலரும் பதிவிடத் தொடங்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT