Published : 24 Mar 2015 07:00 PM
Last Updated : 24 Mar 2015 07:00 PM
தமிழ் சினிமாவில் கதை திருட்டு குறைந்திருப்பதில் மகிழ்ச்சி என்று கூறிய நடிகர் கமல்ஹாசன், ஒரு படம் தோல்விடையும் பட்சத்தில், விநியோகஸ்தர்கள் பணத்தை திருப்பி கேட்கும் போக்கை கடுமையாக எதிர்க்கிறார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டியின் முழு விவரம்: (வீடியோ இணைப்புகள் கீழே)
கே.பாலசந்தரை 'உத்தம வில்லன்' படத்தில் நடிக்க எப்படி சம்மதிக்க வைத்தீர்கள்?
கே.பியிடம் நடிக்கிறீர்களா என்று கேட்டபோது, பாதியில் நிறுத்த வேண்டியது வரும் பரவாயில்லையா என்று கேட்டார். அவர் எதை சொல்கிறார் என்பதை புரிந்து கொண்டு, அப்படியானால் கதையை மாற்றி எழுதிக் கொள்கிறேன் சார் என்று கூறினேன்.
ஒரு வாரத்தில் யோசித்து சொல்கிறேன் என்றவர், பிறகு நடிக்க ஒப்புக் கொண்டார். நடிக்க வந்த முதல் நாளில் கூட, "இப்போதும் கூட ஒன்றும் பிரச்சினையில்லை. எனது படத்தில் கூட பல நடிகர்களை ஒப்பந்தம் செய்து பிற்பாடு வேறு நடிகர்களை வைத்து படமெடுத்திருக்கிறேன். இப்போது கூட பாருங்க. எவ்வளவு வயசானவனாக இருக்கிறேன்" என்றார். அப்போது கூட, "எனக்கு தெரிந்து வயதான இளைஞர் நீங்க தான் சார்" என்று சொன்னேன். அது படத்தில் கூட வசனமாக வருகிறது. பிறகு அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடித்தவுடன், சீக்கிரம் டப்பிங் முடிங்க என்றார். டப்பிங் முடித்தவுடன், சீக்கிரம் முடித்துவிட்டு காட்டுங்கள் என்றார்.
நான் வெளிநாட்டுக்கு படப்பணிகளுக்கு சென்ற போது, உடல்நலம் சரியில்லை என்றார்கள். போன் போட்டு "நான் வேணா திரும்ப வந்திருட்டுமா சார்." என்றேன். அதற்கு "வேலையை முதலில் முடி. நான் எனது வேலையை முடித்துவிட்டேன்" என்றார். அதற்கு பிறகு கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இறுதியில் அவர் பேசிய வார்த்தைகள் எனக்கு புரியவில்லை.
'உத்தம வில்லன்' எந்த மாதிரியான கதைக்களம்?
ஒரு நட்சத்திர நடிகனின் கதை. அவனுடைய வாழ்க்கையில் முகமூடியுடனும் முகமூடி இல்லாமலும் வரும் காட்சிகள் இடம்பெறும். இது எனது வாழ்க்கை கதையா என்று கேட்கிறார்கள். என்னுடைய எல்லா படங்களிலும் எனது வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி இருக்கும்.ஜெயகாந்தன் எழுதிய எல்லா கதைகளிலும் அவருடைய ஒரு பகுதி இருக்கத்தான் செய்யும். அது எங்கே, எப்படி என்பது, கூட நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும். இப்படத்தை எந்த இந்திய நடிகர் பார்த்தாலும் அவர் தனது வாழ்வை ஒப்பிட்டுக் கொள்ள முடியும். மற்றபடி, சினிமா துறையை கிண்டல் செய்து எடுத்த படமெல்லாம் கிடையாது.
ஒரு நடிகனின் வாழ்க்கை.. அவ்வளவு தான். உத்தமன் வில்லன் ரெண்டுமே ஒரே ஆள் தான். வில்லன் என்ற வார்த்தையை ஆங்கிலச் சொல்லாகவே எடுத்துக் கொள்கிறோம். வில்லன் என்பது தமிழ்ச் சொல் கூடத்தான். வில்லுப்பாட்டு இப்படத்தில் ஒரு சிறுபகுதியாக இடம்பெற்று இருக்கிறது. இரண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையை இணைப்பது கே.பி சார் தான் என்று வைத்துக் கொள்ளலாம். முன் ஜென்மம் கதையெல்லாம் இப்படத்தில் இல்லை.
நீங்களே கதை, திரைக்கதை என்று எழுதியிருக்கும் போது இயக்கம் மட்டும் ஏன் ரமேஷ் அரவிந்த்?
ரொம்ப நாளாக படம் பண்ண வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நிறைய கதைகள் பேசும்போது அவர் தேர்ந்தெடுத்த கதை இது. என்னிடம் எப்போதுமே 30 கதைகள் வைத்திருப்பேன். என்னிடம் நீங்கள் பண்ண நினைக்கும் பாத்திரம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்கும் போது எனக்கு சிரிப்புத் தான் வரும். கதையே 30 வைத்திருக்கிறேன். அதே மாதிரி ரமேஷ் அரவிந்திடம் நிறைய கதைகள் பேசும் போது, அவர் இது நல்லாயிருக்கும் என்று தேர்ந்தெடுத்தார். அவரது தேர்வு எனக்கு பிடித்திருந்தது, அது தவிர எனக்கும் இப்படத்தில் வேறு வேலைகள் இருந்தது.
ரமேஷ் அரவிந்த் என்னுடன் பல கதை விவாதங்களில் கலந்து கொண்டவர். அதை அவரது சொந்த பயிற்சியாக எடுத்துக் கொண்டிருக்கிறார். 'தசாவதாரம்', 'விருமாண்டி' இப்படி பல கதைகள் அவருக்கு தெரியும். ஏனென்றால் வேறு ஒருவர் பார்த்து குற்றம் கண்டுபிடிப்பதற்கு முன்னால், பாசமாக இருக்கும் ஒருவர் குற்றம் கண்டுபிடித்தால் தவறில்லை. என்னிடம் இருக்கும் 30 கதைகளில் 20 கதைகள் ரமேஷ் அரவிந்திற்கு தெரியும். நீங்கள் இப்படத்தை இயக்குங்கள் என்று சொன்ன போது வியப்பு ஏதுமில்லை, சந்தோஷம் இருந்தது. என்றைக்காவது ஒரு நாள் நான் சொல்வேன் என்பது அவருக்கு தெரியும்.
கே.பாலசந்தரின் கடைசிப் படத்தை நாம் இயக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறதா?
கே.பாலசந்தரை நான் இயக்கவில்லை என்று நான் வருத்தமடையவில்லை. இதை பல இயக்குநர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நான் பாலசந்தருடைய பள்ளியில் பயின்றவன். பல சமயங்களில் தன்னுடைய உதவி இயக்குநரைக் கூட இயக்க விட்டுவிடுவார். அந்த மாதிரி நிறைய நேரம் அனுபவித்தவன் நான். கேமிரா பேட்டரியை தூக்கி கொண்டுவரும் நடிகரை, கே.பாலசந்தரின் படப்பிடிப்பில் மட்டுமே பார்க்க முடியும். ஏன்டா இரண்டு பொருள் தூக்கிட்டு வர்றேன்.. உதவி பண்ணக் கூடாதா என்பார். எங்கே அவர் வாங்கிவிடக் கூடாதே என்று நான் தூக்கி கொள்வேன். இந்த மாதிரி நான் வியந்த விஷயங்கள் நிறைய இருக்கிறது. ஆகையால், நான் இயக்கவில்லை என்ற வருத்தம் எல்லாம் இல்லை.
முன்பே நடிக்க அழைக்காமல், ஏன் 'உத்தம வில்லன்' படத்தில் மட்டும் கே.பி-ஐ நடிக்க அழைத்தீர்கள்?
நான் இப்போ நடிக்க கேட்கவில்லை. ரொம்ப நாளாக கேட்டுக் கொண்டு தான் இருந்தேன். மாட்டேன் மாட்டேன் என்று அவர் தான் விலகிப் போய் கொண்டிருந்தார். நான், சிவாஜி, பாலசந்தர் மூவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று நண்பர் பிரதாப் போத்தனிடம் இருந்து தலைப்பை எல்லாம் வாங்கி வைத்திருந்தேன். அந்த தலைப்பு தான் 'பிதாமகன்'. கடைசியாக வீம்பு பிடித்து, நடித்தே ஆக வேண்டும் என்றேன். அதட்டி சொன்னால் பதில் பேசாமல் வந்துவிடுவேன். இந்த முறை வாதாடி செய்ததால் நடித்துக் கொடுத்தார். படத்தில் கே.பி அவர்களின் பாத்திரம் ரொம்ப முக்கியமான ஒன்று.
நீங்கள் பார்த்த படங்களும், படித்த இலக்கியங்களின் பாதிப்பும் 'உத்தம வில்லன்' படத்தில் இருக்கிறதா?
என்னுடைய எல்லா படங்களுமே நான் பார்த்த படங்களின் சாயலும், கேள்விப்பட்ட படங்களின் சாயலும் தான். நான் வந்து ஒரிஜினல் ஆள் கிடையாது. நண்பர்களிடம் இருந்து நல்ல குணங்களை கற்றுக் கொண்டு பின்பற்றும் உங்களைப் போல நானும் ஒருவன் தான். சிரிப்பதா, அழுவதா தெரியவில்லை என்பார்கள் இல்லையா. அப்படி ஒரு ஆள் தான் 'உத்தமவில்லன்'. இப்படத்தில் என்ன இல்லை என்பதை வேண்டுமானால் தெளிவாக சொல்ல முடியும். கார்கள் தலைக்குப்புற விழுந்து வெடிப்பதும், ஒருவர் மீது ஒருவர் கால் கொண்டு பலமாக தாக்குவதும், மூன்று குட்டிக்கரணங்கள் அடிப்பதும் இதில் கிடையாது. இந்தப்படம் வன்முறை அற்ற ஒரு படமாக வாய்த்துவிட்டது.
நீங்கள் என்ன படம் பண்ணினாலும் அதற்கு இடையூறு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறதே?
நான் என்ன செய்தாலும், அதற்கு ஒரு சிலர் இடையூறு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். 'தசாவதாரம்' படத்தின் கதை என்னுடைய என்று ஒருவர் வழக்கு தொடுத்தார். இப்போது வரைக்கும் அவர் எழுந்து நிற்கவில்லை. எங்கிருந்து வந்து கேஸ் கொடுத்தார், எதற்காக கொடுத்தார் எல்லாமே தெரியும். அதே போல தான் 'மும்பை எக்ஸ்பிரஸ்' பெயர் வைக்கக்கூடாது என்றார்கள். ரயில்வே நிலையத்தில் செய்ய வேண்டிய விஷயத்தை படத்தில் செய்ய சொன்னார்கள். விரைவு வண்டி என்று யாரும் சொல்வது இல்லையே. மும்பைக்கு எப்படி தமிழ் பெயர் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை. அதே போல பல விஷயங்கள் இருக்கிறது. நல்ல வண்டி ப்ரீயாக ஏறிக் கொண்டு அடுத்த ஸ்டாப்பில் இறங்கி கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.
மேலும், படைப்பாளியின் சுதந்திரத்தை தேசம் முழுவதும் பாதிக்கும் அளவிற்கு தணிக்கை குழு மாறி இருக்கிறது. அது வெறும் சான்றிதழ் அளிக்கக் கூடிய குழு தான். வன்மையாக கண்டிக்க கூடிய ஒரு விஷயம். நீ யார் கண்டிப்பது என்று கேட்டால், நான் கலைஞன். நான் ஒரு விஷயத்தைச் சொல்லத் துடிப்பவன். மொழியும், கலையும் என் கைவசம். அதைச் சொல்ல உரிமையும், கடமையும் எனக்கு இருக்கிறது. மீண்டும் ஒரு பிரிட்டிஷ் ஆட்சி போல, என்ன சொல்ல இருக்கிறேன் என்பதை எழுதி காட்டிவிட்டு முத்திரை வாங்கிக் கொண்டு படம் எடுக்கும் அவசியம் என் பேச்சு சுதந்திரத்தில் கால் பதித்து விட்டதாக நான் நினைக்கிறேன்.
'மருதநாயகம்' எப்போது தொடங்க திட்டம்?
என்னுடைய நண்பர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களிடம் கூட எச்சரிக்கை விடுத்து, இந்தப் படம் எவ்வளவு பெரியது என்று கூறியிருக்கிறேன். தமிழ் படம் என்று மட்டும் நினைத்துவிட வேண்டாம். உலகப் படம், ஆங்கிலப் படம், பிரெஞ்சு படம் என்றெல்லாம் நினைவில் கொள்ளும்படி கூறியிருக்கிறேன்.
'உத்தம வில்லன்', 'பாபநாசம்', 'விஸ்வரூபம் 2' என தொடர்ச்சியாக உங்களது படங்கள் வெளிவர இருக்கிறதே..
ரொம்ப படங்கள் சேர்ந்து விட்டது. என்னால் சும்மா இருக்க முடியாது. எனக்கு இருக்கும் கால நேரத்தை கணக்கில் கொண்டு ஏதாவது செய்து கொண்டே இருப்பேன். ரசிகர்கள் இருக்கிறார்கள், ஆசை இருக்கிறது, திறமை ஒரளவிற்கு இருக்கிறது என்பதால் களத்தில் இறங்கிவிட்டேன். இப்போது 'உத்தம வில்லன்', 'பாபநாசம்' முடியும் தருவாயில் இருக்கிறது. 'விஸ்வரூபம் 2' அதற்குப் பிறகு வரும். அதுக்கு மேலயும் ஆஸ்கர் தாமதித்தால் இன்னொரு படம் வரும்.
படம் தோல்விடையும் பட்சத்தில், விநியோகஸ்தர்கள் பணத்தை திருப்பி கேட்பது பற்றி உங்களது கருத்து?
பணத்தின் ஆசை யாருக்குத் தான் இல்லை. அந்த குணாதிசயம் படம் பார்க்கும் ரசிகனுக்கு வரக்கூடாமல் இருப்பது தான் என் வேண்டுகோள். அவன் பாதி சினிமா பார்த்தேன் எனக்கு பிடிக்கவில்லை 25 ரூபாய் கொடு என்று கேட்டால் என்ன செய்வது?
விநியோகஸ்தர்கள் பாடே திண்டாட்டம்தான். ஏனென்றால் பாதி படம் பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்று சொல்வது போல படங்களை நான் எடுக்கிறோம். அதெல்லாம் சாத்தியமில்லை. பணம் கேட்டு அம்பு எய்துபவர்கள் உத்தம வில்லர்களாக இருக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
'மும்பை எக்ஸ்பிரஸ்' படத்துக்குப் பிறகு இளையராஜாவுடன் நீங்கள் மீண்டும் இணையவில்லை ஏன்?
அவரையும் என்னையும் ஏன் என்றெல்லாம் கேட்க முடியாது. 'சிங்காரவேலன்' படத்துக்குப் பிறகு ஏன் அவர் என்னை வைத்து படம் எடுப்பதில்லை என்று கேட்பது மாதிரி தான்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை படமாக எடுக்க தயங்குவது ஏன்?
அதைத் தொட முடியுமா சொல்லுங்கள். 'தெனாலி' படத்தில் சுற்றி வளைத்து தொட்டதற்கே பெரிய பிரச்சினையாகி விட்டது. நான் ஒன்றைச் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். குழந்தை ஒன்று தடுக்கி விழுந்து விட்டால், அய்யோ கிறிஸ்துவ குழந்தை விழுந்துவிட்டதே என்று நாம் சொல்லுவதில்லை. இனப்படுகொலை எங்கு நடந்தாலும் அதை நமக்கு நிகழும் கொடுமையாக தான் நினைக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் நடக்கும் கொடுமையைக் கூட நமக்கு நேர்வது போல தான் நினைக்க வேண்டும்.
சினிமா என்பது கலையா, வியாபாரமா?
அது பார்ப்பவர்கள் கண்ணோட்டத்தில் இருக்கிறது. இயக்குநரின் பார்வையில் கலை, தயாரிப்பாளரின் பார்வையில் வியாபாரம். இயக்குநர் இது வியாபாரம் என்று நினைத்தாலோ அல்லது தயாரிப்பாளர் இது கலை என்று நினைத்தாலோ தோல்வியடைந்து விடும். அது நியாயமானது என்று நினைக்கவில்லை. குடியிருப்புகளில் வீடுகள் வாங்கினவர்கள் பாதிப்பேர் திரும்பி தான் கேட்பார்கள். விற்கும் போது சொன்ன சத்தியங்கள் எல்லாம் கடைப்பிடிக்கப்பட்டு இருக்காது.
மாற்று முயற்சி - டிஜிட்டல் சினிமா வளர்ச்சி இரண்டையும் எப்படி பார்க்கிறீர்கள்?
மெத்தனமாக இருந்துவிட முடியாது. பல நேரங்களில் ஒப்புக் கொள்ளாமல் போன விஷயங்கள் எல்லாம், இப்போது நினைவில் இல்லாமல் போய்விட்டது. டிஜிட்டல் சினிமாவின் வரவு கிட்டதட்ட 15 வருடங்கள் தாமதமாக வந்திருக்கிறது. ‘அதை வெள்ளைக்காரன் முடிவு பண்றான், நாம எப்படி சார் முடிவு பண்ண முடியும்’ என்று நாம் நினைக்கிறோம். 1000 சினிமாக்கள் உருவாகும் ஒரு மாமல்லன் இந்திய சினிமா. சீன சினிமா, இந்திய சினிமா இணைந்து ஒரு முடிவு எடுத்தால் அதை உலக சினிமா கேட்டுக் கொள்ள வேண்டும். இது தான் வியாபார நிஜம். இதை சீனா புரிந்து கொண்ட அளவிற்கு கூட இந்தியா புரிந்து கொள்ளவில்லை.
எந்தப் படங்கள் எடுத்தாலும், இது ஹாலிவுட் படத்தின் திருட்டு என்கிறார்களே..
இப்போது கதை திருட்டு குறைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். முன்பு சுட்டிக் காட்டுவதற்கு நிறைய பேர் இல்லை.
தேங்காயும் கையுமாக காஸினோ திரையரங்கிற்கு சென்றவர்களை எனக்குத் தெரியும். ஏனென்றால் அங்கேயே உடைத்துவிட்டதால், கதை அவருடையது ஆகிவிடும் என்று எண்ணம். இப்போது இதுவெல்லாம் மாறி, ஒரு சின்ன கர்வம் தமிழனுக்கு வந்திருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. நல்ல விஷயம் ஒரு ஊரில் இருக்கிறது என்றால், அதை நம்ம ஊருக்கு எடுத்து வருவதில் தப்பில்லை என்று நினைக்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT