Last Updated : 27 Mar, 2015 12:33 PM

 

Published : 27 Mar 2015 12:33 PM
Last Updated : 27 Mar 2015 12:33 PM

கொம்பன் படத்துக்கு தடை கோரி முதல்வருக்கு மனு

கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'கொம்பன்' படத்துக்கு தடை விதிக்கக் கோரி, தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு நாடார் சங்கம் மனு ஒன்றை அனுப்பியுள்ளது.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'கொம்பன்'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது என்று விளம்பரப்படுத்தப்பட்டு வந்தாலும், படத்தின் சென்சார் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. சென்சாரில் இப்படத்துக்கு என்ன சான்றிதழ் என்று கேட்ட போது, "'கொம்பன்' படத்தின் சென்சார் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இப்போதைக்கு இது மட்டுமே கூற முடியும்" என்று கூறினார்கள்.

இந்நிலையில், படத்துக்கு தடைக்கேட்டு தமிழ்நாடு நாடார் சங்கம் முதல்வருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளது. அம்மனுவில் கூறியிருப்பது, " சுதந்திர போராட்ட தியாகி, வாய்ப்பூட்டு சட்ட வீரர், பேரையூர் வேலுச்சாமி நாடாரைக் களங்கப்படுத்தும் காட்சிகள் நடிகர் கார்த்தி நடித்து முத்தையா இயக்கி வெளிவரவுள்ள 'கொம்பன்' திரைப்படத்தில் உள்ளதாகவும் முதுகுளத்தூர் கலவர பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் அமைந்து உள்ளதாகவும் வார இருமுறை இதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

தனது சமுதாயத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாத ரேகைசட்டம் (எ) படுக்கை சட்டத்தின் கொடுமைக்கு ஆளான மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களுக்காக தனது சமுதாய மக்கள் ஏழாயிரம் பேரை திரட்டி போராடி வாய்ப்பூட்டு சட்டத்திற்கு ஆளானவர் வீரர் வேலுச்சாமி நாடார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டதால் முதுகுளத்தூர் தாலுக்கா காங்கிரஸ் தலைவர் முத்துராமலிங்கதேவருக்கும் வாய்ப்பூட்டு சட்டம் போடப்பட்டது. (ஆதாரம் 7-.11.-1936, தி ஹிந்து)

'கொம்பன்’ பட இயக்குநர் வீரர் வேலுச்சாமி நாடாரின் தியாகத்தை புரிந்து கொள்ளாமல் முதுகுளத்தூர் கலவரத்திற்கு அவர்தான் காரணம் என்பது போல் காட்சிகள் வைத்திருப்பதை ஏற்று கொள்ள முடியாது. இது போன்ற காட்சிகளுடன் 'கொம்பன்' திரைப்படம் திரையிடப்பட்டால் தென் தமிழகத்தில் ஜாதிய மோதல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.

படத்தின் தலைப்பே (ஆப்பநாட்டு மறவன்) ’கொம்பன்’ என்கின்ற பெயரில் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்து உள்ளது. நாடார், பள்ளர், பறையர், மறவர் சமுதாயங்களுக்கிடையே இது மிகப்பெரிய ஜாதிய வன்முறையை தூண்டும் வகையில் அமைந்து உள்ளது.

கடந்த 6 மாதங்களில் தென்மாவட்டங்களில் ஜாதிய மோதல்கள் காரணமாக 50க்கும் மேற்பட்டோர் படுகொலைகள் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சமயத்தில் 'கொம்பன்' திரைப்படத்தை திரையிட்டால் எரிகின்ற தீயில் எண்ணெய் வார்த்தது போல கலவரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே தென் மாவட்டங்களில் ஜாதி கலவரங்களை தூண்டும் 'கொம்பன்' திரைப்படத்தை தடை செய்து அமைதியை நிலைநாட்டிட தமிழக அரசை தமிழ்நாடு நாடார் சங்கம் கேட்டுக் கொள்கிறது" என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x