Last Updated : 14 Mar, 2015 10:12 AM

 

Published : 14 Mar 2015 10:12 AM
Last Updated : 14 Mar 2015 10:12 AM

விஸ்வரூபம்-2 படத்தை சிடூஎச்-ல் வெளியிடத் தயார்: இயக்குநர் சேரன் பேட்டி

‘‘முதல் முயற்சி இது. எல்லோருக்குமே இதை எப்படி நகர்த்திக்கொண்டு போகப்போகிறோம் என்ற சந்தேகம் இருந்தது. பொருளாதார ரீதியாக பல சவால்களை எதிர்கொண்டோம். இதையெல்லாம் கடந்து படம் ரிலீஸான முதல் நாளில் 10 லட்சம் டிவிடி தொடங்கி இன்று 15 லட்சத்தை கடந்து விற்பனை ஆகியுள்ளது. இதை பெரிய மாற்றத்துக்கான விஷயமாகத்தான் நினைக்கிறேன்’’ என்று உற்சாகமாக பேசத் தொடங்குகிறார், சிடூஎச் (சினிமா டூ ஹோம்) நிறுவனர், இயக்குநர் சேரன்.

‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை சிடூஎச் முறை மூலம் வெற்றிகரமாக வெளியிட்டுள்ள அவரிடம் பேசியதிலிருந்து:

முதல் பட வெளியீடு எப்படியான அனுபவத்தை உங்களுக்கு கொடுத்திருக்கிறது?

ரிலீஸான முதல் நாளே இந்த திட்டத்துக்கும், படத்துக்கும் மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘பாரதி கண்ணம்மா’, ‘ஆட்டோகிராப்’ ஆகிய படங்களை அடுத்து எல்லா வகையினரும் ஏற்றுக்கொள்ளும் படமாக ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ அமைந்துள்ளதாக பாராட்டுகிறார்கள். படத்தின் வெளியீட்டைப் பொறுத்தவரை சினிமாவுக்கு இதுவரை பெரிய நெட்வொர்க் இல்லாமல் இருந்தது. இதையெல்லாம் இந்த திட்டம் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்.

இயக்குநர் சேரன் படங்கள் என்றால் குடும்பத்தோடு பார்க்கும்படியாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. இதே தரம் அடுத்தடுத்து நீங்கள் வெளியிடவுள்ள படங்களிலும் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதே?

அப்படிப்பட்ட படங்களை மட்டுமே வாங்கி வெளியிட உள்ளோம். கமர்ஷியல், திரில்லர், காமெடி இப்படி எந்த வரிசை படமாக இருந்தாலும் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் படங்களை மட்டும்தான் ரிலீஸ் செய்வோம். எல்லா படங்களையும் வாங்கி வெளியிட்டு அதிகம் சம்பாதிக்கும் ஆசையில் இந்நிறுவனத்தை நான் தொடங்கவில்லை.

சிடூஎச் டிவிடியில் இருந்தும் அதிக அளவில் திருட்டு விசிடி தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறதே?

எங்கள் டிவிடியில் இருந்தும் காப்பி செய்ய முடியும். அப்படிச் செய்யாதீர்கள் என்றுதான் சொல்லி வருகிறோம். திரையரங்கத்துக்கு குடும்பத்தோடு சென்றால் அதிக பணம் செலவாகிறது என்பதால்தான் 50 ரூபாய்க்கு டிவிடி கொண்டு வந்திருக்கிறோம். இதிலும் சிலர் தப்பு செய்வது வேதனையாகத்தான் இருக்கிறது. இதில் பலருடைய உழைப்பு இருக்கிறது. இதிலிருந்து திருட்டு விசிடி தயாரிப்பவர்கள் எங்களுடைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்க வேண்டும்.

சிடூஎச் நிறுவனம் நேரடியாக படங்களைத் தயாரிக்குமா?

இப்போதைக்கு அந்த திட்டம் இல்லை. எதிர்காலத்தில் பார்க்கலாம். பெரிய பாராட்டும், விருதும் குவிக்கும் ஈரானிய படங்களில் பெரிய நடிகர்கள் யாரும் இருப்பதில்லை. அப்படியான படங்களையும் எதிர்காலத்தில் கொண்டுவர திட்டம் உள்ளது.

நீங்களே படத்தை ரிலீஸ் செய்ய தொடங்கிய பின் சென்சார் போன்ற கோட்பாடுகளுக்குள் செல்ல வேண்டுமா?

அது இல்லாமல் பண்ண முடியாது. தணிக்கை குழுவுக்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. மக்களிடம் பணம் வசூலிக்கும் எந்த ஒரு திட்டத்துக்கும் சில வரைமுறைகள் உள்ளன. சில தீய சக்திகள் வெளிவரக்கூடாது என்பதற்காகத்தான் இதுபோன்ற விஷயங்கள் நடைமுறைப் படுத்தப்படுகிறது. அதுதான் சரியானதும்கூட.

பெரிய பட்ஜெட் படங்களுக்கு உங்கள் திட்டத்தால் என்ன பயன்?

பெரிய முதலீட்டில் படம் எடுப்பவர்களுக்கும் இந்த திட்டத்தால் பயன் உள்ளது. திரையரங்கில் அவர்கள் 60 கோடி ரூபாய் எடுக்கிறார்கள் என்றால் இங்கே 80 கோடி ரூபாய் சம்பாதிக்கும் முறைகள் உள்ளன. அதுகுறித்த கலந்தாய்வுகள்தான் இப்போது போய்க்கொண்டிருக்கின்றன. அந்த லாப நோக்கத்தை விரைவில் அவர்களே உணர்வார்கள்.

படம் ரிலீஸான அடுத்த நாளில் பண மோசடி என்றெல்லாம் உங்கள் மீது புகார் வந்ததே?

இந்தத் தொழிலில் பல இடர்ப்பாடுகள் உள்ளன. சிடூஎச்- சில் 4000-க்கும் மேற்பட்டவர்கள் என்னை நம்பி இணைந்திருக்கிறார்கள். முதல் படத்தை ரிலீஸ் செய்யும் கடைசி நேரத்தில் முதல் முறையாக என்னுடைய நேர்மையை தவற விட்டுவிட்டேன். கொடுப்பதாக வாக்களித்த நேரத்தில் என்னால் சரியாக பணத்தை கொடுக்க முடியவில்லை. நான் நம்பிய சிலர் அந்த நேரத்தில் கைவிட்டுவிட்டார்கள். இதற்கு முன்பே பல தேதிகள் மாறி மாறி வந்து இப்போதும் அந்த தேதியை தள்ளிப்போட முடியாத சூழல். அதனால்தான் ரிலீஸ் வேலைகளில் கவனம் செலுத்தினேன். அதற்குள் ‘சேரன் பண மோசடி’ என்று நாளிதழில் செய்தி வந்துவிட்டது. கூறிய தேதிக்குள் பணம் செலுத்த முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆண்டுக்கு 30, 40 கோடி ரூபாய் வருமானம் ஈட்டித் தரக்கூடிய நிறுவனமாக மாறக்கூடியது இது. 3 கோடி ரூபாய் கடனுக்காக இதை விட்டுவிட்டு ஓடமாட்டேன்.

திரைப்படத்துறையில் இன்னும் யாருடைய ஆதரவை எதிர்பார்க்கிறீர்கள்?

இயக்குநர் சமுத்திரகனி ஆதரவு தெரிவித்த தோடு எங்கள் நிறுவனத்தில் விநியோகஸ்தராக இணைந்த முதல் இயக்குநராகவும் உள்ளார். பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் ஆதரவு தெரிவித்ததோடு இனி இதுபோன்ற மாற்றங்கள் தவிர்க்க முடியாதது என்றும் கூறி னார்கள். அமீர், பாக்யராஜ், சரத்குமார் ஆகியோர் இதுபற்றி மேலும் விளக்கிக் கூறியுள்ளனர். சிடூஎச் நிறுவனம் புதிய இயக்குநர்களுக்கு சரியான மேடையாக இருக்கும் என்று இயக்குநர்கள் சங்கமே ஆதரவு தெரிவித்துள்ளது. இப்படி ஒட்டுமொத்த திரையுலகினரின் ஆதரவும் இன்று கிடைத்துள்ளது. கலை மக்களுக்கானது. அந்த வகையில் இந்த நிறுவனமும் எல்லோர் ஒத்துழைப்போடும் சரியாக நகர்ந்து செல்லும்

ஆதரவு இருக்கும் அளவுக்கு எதிர்ப்புகளும் இருக்குமே?

இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எதிர்ப்பவர்கள் எல்லோரும் வேறு மாதிரி சம்பாத்தியத்தில் வாழ்பவர்கள். அவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.

‘விஸ்வரூபம்’ படத்தின் ரிலீஸின் போது கமலுக்கு ஏற்பட்ட அனுபவத்தால் இப்படி ஒரு திட்டத்தை கொண்டுவர முடிவெடுத்தார். இந்நிலையில் அவரது ‘விஸ்வரூபம் 2’ படத்தை நீங்கள் வாங்கி ரிலீஸ் செய்யலாமே?

கமல் சார் விரும்பினால் கண்டிப்பாக ‘விஸ்வரூபம் 2’ படத்தை சிடூஎச்-ல் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

டிவிடியாக வெளிவரும் அதே நாளில் திரையரங்கிலும் படம் ரிலீஸாகும் என்று சொன்னீர்கள். ஆனால் ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ தியேட்டரில் ரிலீஸாகவில்லையே?

இப்போதும் நாங்கள் திரையரங்கில் ரிலீஸ் செய்ய தயாராகத்தான் இருக்கிறோம். அவர்கள்தான் ஏதோ வீம்பாக இருக்கிறார்கள். இப்போதும் எங்களது கோரிக்கை என்னவென்றால் நாங்கள் வெளியிடும் படத்தை ஒரு வாரம் திரையரங்கில் ஓட்டினால் அதற்கு வாடகை கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதுதான். இதைக்கூட அவர்கள் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. சரியான புரிதல், ஆழமான பார்வை இல்லாததைத்தான் இது காட்டுகிறது. இப்படிச் செய்வதால் இழப்பு அவர்களுக்குத்தான். இப்போது ஒப்புக்கொண்டாலும் அடுத்த படத்திலிருந்து நாங்கள் திரையரங்கிலும் ரிலீஸ் செய்ய தயாராக இருக்கிறோம்.

அடுத்தப் படத்தை எப்போது ரிலீஸ் செய்கிறீர்கள்?

சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் ஜெய் நடித்துள்ள ‘அர்ஜூனன் காதலி’ ஏப்ரல் முதல் வாரத்தில் ரிலீஸாகும். அதை அடுத்து வாரத்துக்கு ஒரு படம் அல்லது பதினைந்து நாட்களுக்கு 2 படம் வீதம் ஒவ்வொன்றாக வெளியிடவிருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x