Published : 17 Feb 2015 09:13 AM
Last Updated : 17 Feb 2015 09:13 AM

‘லிங்கா’ பட விவகாரம்: விநியோகஸ்தர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்

‘லிங்கா’ படத் தயாரிப்பாளரையும், ரஜினிகாந்தையும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம், பிச்சை எடுக்கும் போராட்டம் என்று அறிவித்ததற்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘லிங்கா’ பட ரிலீஸில் இருந்தே, படத்தின் தயாரிப்பாளருக்கும், அப்படத்தில் நடித்த ரஜினிகாந்துக்கும் விநியோகஸ்தர்கள் போட்ட ஒப்பந்தத்தை மீறி பல்வேறு பிரச்சினைகள் செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் ரஜினி நடித்த படங்களில் 97 சதவீத படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபத்தை ஈட்டித் தந்துள்ளன.

இந்நிலையில், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருந்தாலும் அதை அவர்கள், சம்பந்தப்பட்ட சங்கத்தில் தெரிவித்து அந்த சங்கம் முறையாக கூட்டமைப்பில் விவாதித்து தீர்வு கண்டிருக்க வேண்டும். அதை விடுத்து படத்தின் தயாரிப்பாளரையும், ரஜினிகாந்தையும் இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் உண்ணாவிரதம், பிச்சை எடுக்கும் போராட்டம் என்று அறிவித்தது தொழில் தர்மத்துக்கு மாறானது. கண்டனத்துக்குரியது. திரையுலகம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. தேவையற்ற முறையில் அரசியல் தலைவர்களை உள்ளடக்கிக் கொள்வது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.

எனவே, உண்மையில் பிரச்சினை இருக்கும் பட்சத்தில் அதற்காக உள்ள கூட்டமைப்பில் சங்கத்தின் மூலம் பேசி நல்ல முடிவை எடுக்க வழிவகை செய்ய வேண்டுமே தவிர, இதுபோன்ற சூழ்நிலையில் ஒற்றுமைக்கு விரோதமான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது திரையுலகுக்கு செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x