Last Updated : 05 Feb, 2015 12:41 PM

 

Published : 05 Feb 2015 12:41 PM
Last Updated : 05 Feb 2015 12:41 PM

உங்கள் சந்தோஷம் என் சந்தோஷம்!: தஞ்சையில் இளையராஜா நெகிழ்ச்சி

கரந்தை அருகே உள்ள வடவாறு கண்ணியம்மன் படித்துறை குடியிருப்பு பகுதியில் இயக்குநர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படப்பிடிப்பு நடந்துவருகிறது. தஞ்சையை மையமாகக் கொண்டு, நாட்டுப்புற மற்றும் செவ்வியல் இசைக் கலைஞர்களின் வாழ்வியலைப் பேசும் இந்தப் படத்தின் நாயகனாக சசிக்குமார், நாயகியாக வரலட்சுமி நடிக்கின்றனர்.

இது, இளையராஜா இசையமைக்கும் 1000-வது படம் என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ள நிலையில், நேற்று இந்தப் படப்பிடிப்பைப் பார்வை யிட வந்த இளையராஜாவும் படத்தின் நாயகன் சசிக்குமாரும், நாயகி வரலட்சுமி யும் நம்மிடம் பேசியதில் இருந்து…

“பாலா ரொம்ப சிரத்தையோட படம் எடுப்பவர். இந்தப் படம் அவருக்கு ரொம்ப சவாலான படம். நான் சந்தோஷப்பட எதுவும் இல்லை. நீங்கள்லாம் என்னோட ஆயிரமாவது படம்னு சந்தோஷப்படு றீங்க. உங்க சந்தோஷம்தான் என் சந்தோஷம்!

ஆயிரம் படங்கள் வரும், போகும். தினமும் சூரியன் வரும், மறையும். இன்று எத்தனையாவது சூரிய உதயம்னு யாருக்காவது கணக்குத் தெரியுமா?

இந்தியில் ‘ஷமிதாப்’ படத்துக்கு இசை அமைப்பதும், தமிழில் ‘தாரை தப்பட்டை’ படத்துக்கு இசை அமைப்ப தும் எனக்கு ஒண்ணுதான். ஒரு நாடக நடிகன் அரசனா நடிக்கிறப்பவும், பிச்சைக்காரனா நடிக்கிறப்பவும்… அவன் அவனாகத்தான் இருக்கான். அரசனா வேடம் போட்டவுடன அரசனாயிட முடியுமா?’’ இவ்வாறு இளையராஜா பேசினார்.

இப்படத்தின் நாயகன் சசிக்குமார் பேசியபோது, ‘‘சேது படத்தில் பாலா விடம் உதவி இயக்குநராக இருந்திருக் கேன். அப்போ, அவரிடமிருந்து டைரக் ஷன் கத்துக்கிட்டேன். இந்தப் படத்தின் மூலமா நடிப்பு, டைரக் ஷன் இரண்டையும் கத்துக்கிறேன். முன்பு இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர்னு மூணு குதிரையில் போனேன். இப்போ ரெண்டு குதிரையில் போறேன்.

நான் இதுவரை நடித்த படங்களை விட இது வித்தியாசமாக இருக்கும். தாரை தப்பட்டைங்கிற பேருக்கு ஏத்த மாதிரி இதில் எல்லாமே இருக்கும். இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் படங்களை இயக்கப் போறேன்” என்றார்.

இப்படத்தின் நாயகி வரலட்சுமி பேசிய போது, ‘‘இது என்னோட நாலாவது படம். முதல்முறையா ஒரு கிராமத்தில் நீண்ட நாள் தங்கி, கிராமத்துப் பெண் ணாக நடிப்பது வித்தியாசமான அனுபவ மாக உள்ளது.

பாலா சார் படத்தில் நடிப்பது எனக்குப் பெருமை. இந்தப் படத்தில் நான் கரகாட்டக் கலைஞரா நடிக்கிறேன். இந்தப் படத்துக்காக நாலு மாசம் கரகாட்ட அடவு கத்துக்கிட் டேன்’’ என்றார் வரலட்சுமி.

இயக்குநர் பாலா, ஜி.எம்.குமார், பிரபல தவில் கலைஞர் அரித்துவாரமங் கலம் ஏ.கே.பழனிவேல், படத்தின் ஒளிப்பதிவாளர் செழியன் மற்றும் திரைப்படக் குழுவினர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x