Published : 09 Apr 2014 09:16 AM
Last Updated : 09 Apr 2014 09:16 AM
சந்தானம், சிவகார்த்திகேயன் வரிசையில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் அரிதாரம் பூசிக்கொள்ள வந்திருக்கிறார் தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்த். ‘வானவராயன் வல்லவராயன்’, ‘பஞ்சுமிட்டாய்’ படங்களின் இறுதிகட்டப் படப்பிடிப்பு ஒரு பக்கம், டப்பிங் வேலைகள் மறுபக்கம் என்று பம்பரமாய் சுழன்று திரிந்துகொண்டிருக்கிறார். ஓய்வு நேரம் ஒன்றில் தன் குழந்தைகள் அனிலியா, லொரன்ஷோ ஆகியோருடன் விளையாடிக்கொண்டிருந்த அவரை சந்தித்தோம்.
சினிமாவில் உங்கள் பாணி எப்படி இருக்கும்?
கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் என் முழு கவனத்தையும் செலுத்தப் போகிறேன். ‘படத்தின் கதை நம் மீது இருப்பதை விட, நம்மைச் சுற்றி கதை நகர்ந்தால் போதும்’ என்று நடிகர் கிருஷ்ணா சொல்வார். அவர் தேர்வு செய்து நடிக்கும் படங்களும் அந்த ரகம்தான். அதைத்தான் நானும் பலமாக நினைக்கிறேன். என்னுடைய முதல் படமான ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தின் படப்பிடிப்பில்கூட நிறைய விஷயங்களை கிருஷ்ணாதான் கற்றுக்கொடுத்தார். எனக்கு கிடைக்கும் பாராட்டுகளுக்கும் கை தட்டலுக்கும் அவரும் ஒரு காரணம். அதேபோல, விஜய் சேதுபதியும் ‘சின்ன படமோ, பெரிய படமோ உனக்குப் பிடித்துவிட்டால் உடனே நடிக்க கிளம்பிடு’ என்றார். தற்போதைய பல படங்களின் வெற்றிக்கு இயக்குநரும், அவருடைய குழுவினருமே காரணமாக அமைகிறார்கள். ரசிகர்களும் கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ரசிகர்கள் வியக்கும் கதைகளில் என் பங்களிப்பும் கவனமும் இருக்கும். எல்லாம் நல்லபடியாக அமையும் என்று நம்பிக்கை இருக்கு.
‘வானவராயன் வல்லவராயன்’ படம் எப்படி வந்திருக்கிறது?
அடுத்த மாதம் இப்படத்தின் இசை வெளியீடு. படத்தில் கிருஷ்ணாவும் நானும் அண்ணன் தம்பியாக நடிக்கிறோம். வல்லவராயனாக நான் நடிக்கிறேன். கிருஷ்ணாவுக்கு ஜோடியாகத்தான் மோனல் கஜ்ஜார் நடிக்கிறாங்க. மிஸ் குஜராத் பட்டமெல்லாம் வாங்கினவங்க. படத்தில் எனக்கு நாயகி இல்லை. ஆனால் 2, 3 ஜோடிங்க இருக்காங்க. ஹீரோயின் மோனல் கஜ்ஜார் தோழிகளிடம் காதல் பேசி வம்புக்கு இழுப்பதாக என் டிராக் போகும். செம ஜாலியான படமாக இது உருவாகி வருகிறது.
முதல் படம் முடிவதற்கு முன்பே ‘பஞ்சு மிட்டாய்’படத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டீர்களே?
அது முழுக்க பேன்டஸி காமெடி படம். 8 குறும்படங்களை இயக்கிய எஸ்.பி.மோகன் தன் குறும்படங்களிலிருந்து ஒரு படத்தை வெள்ளித்திரைக்கு கொண்டு வருகிறார். இயக்குநர் ஷங்கர் பார்த்து பாராட்டிய ‘கலர்ஸ்’ குறும்படம்தான் ‘பஞ்சுமிட்டாய்’. படம் புதுமையா உருவாகிக்கொண்டிருக்கிறது. ஹீரோயின் நிகிலா கேரளாவைச் சேர்ந்தவங்க. கியூட் கேர்ள். இசை டி. இமான். நேரமே கிடைக்காமல் பல படங்களுக்கு இசை அமைத்துக்கொண்டிருக்கும் சூழலில் கதை பிடித்துப்போய் இந்தப்படத்திற்கு பாடல் அமைத்துக்கொடுத்தார். இன்னும் 2 பாடல் காட்சி மட்டும் படமாக வேண்டி உள்ளது. அதற்கான படப்பிடிப்புக்குத்தான் இப்போது புறப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
சினிமாவில் பிஸியானதால் சின்னத்திரைக்கு விடைகொடுத்து விடுவீர்களா?
நான் எப்போதும் நன்றி மறவாத இரண்டு இடங்களில் ஒன்று, ஆர்.ஜே.வாக வாழ்க் கையைத் தொடங்கிய ரேடியோ மிர்ச்சி. மற்றொரு இடம் விஜய் டி.வி. என் முகத்தை பார்ப்பதற்கு முன்பே ரேடியோ மூலம் பல ஆயிரம் ரசிகர்களிடம் போய் சேர வைத்த ஆர்.ஜே வாழ்க்கையை என்றைக்கும் மறக்க முடியாது. ‘இந்த முகத்தை எல்லாம் யார் பார்ப்பா’ என்று பல சேனல்கள் உதாசீனப் படுத்திய போது கைகொடுத்த விஜய் டி,.வியை விட்டுவிட்டு இங்கே என்ன செய்துவிட முடியும். சினிமாவில் நல்ல நல்ல விஷயங்களை செய்து எத்தனை உயரம் கண்டாலும் என் பங்களிப்பு எல்லா காலத்திலும் சின்னத்திரையில் ஏதாவது ஒன்றை தொட்டுக்கொண்டே இருக்கும்.
சினிமாவில் நாயகிகளோடு ரொமான்ஸ் பண்ணணுமே, உங்க மனைவி கோவிச்சுக்கலையா?
ரொம்பவே அன்பானங்க என் சூசனா. படத்தில் நடிக்கப்போகிறேன் என்றதுமே… ‘படத்தில் ஹீரோயினோடு சேர்த்து உங்களை பார்க்கும்போது கண்களை மூடிப்பேன்.
திடீர்னு கொஞ்ச நேரம் வெளியில் போயிடுவேன். நீங்க தப்பா எடுத்துக்க கூடாது’ என்று சொன்னாங்க. இதெல்லாம் கேட்கும்போது எனக்கே புதுசா இருந்தது. காலப்போக்கில் இதெல்லாம் ஈஸியான ஒரு விஷயமாக மாறும்.
சின்னத்திரை சீனியர்ஸ் சந்தானம், சிவகார்த்திகேயன் பயணங்களை எல்லாம் எப்படி பார்க்குறீங்க?
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு போன ஒவ்வொருவருமே மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருக்காங்க. இதெல்லாம் எப்படி சாத்தியப்படும் என்கிற கேள்விக்கு எடுத்துக்காட்டாகத்தான் இவர்களைப் பார்க்கத் தோணுது.
ஆர்.ஜே.வாக இருந்து பாடகியான சுசித்ரா, மிர்ச்சி சிவா, பாலாஜி சந்தானம், சுவாமிநாதன், மனோகர், ஜெகன், செந்தில் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இரண்டு மாதத்திற்கு முன் புதிய வீடு தேடிக்கொண்டிருந்தபோது சிவகார்த்தி கேயனை எதிர்பாராமல் பார்க்க நேர்ந்தது. விஷயத்தை அறிந்து உடனே அவரோட பிளாட் மேனேஜரிடம் பேசி, அவர் வீட்டுக்கு அருகில் உள்ள பிளாட்டிலேயே உடனடியாக வீடு ஏற்பாடு செய்து கொடுத்தார். இப்படியான அன்பு கொண்டவர்களோடு பயணத்தை தொடர்கிறோம். இது போதுமே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT