Last Updated : 26 Feb, 2015 09:44 AM

 

Published : 26 Feb 2015 09:44 AM
Last Updated : 26 Feb 2015 09:44 AM

த்ரிஷாவைப் போல் சினிமாவில் ஜெயிக்க வேண்டும்: மேகா ஆகாஷின் ஆசை

தமிழ் சினிமா உலகுக்கு புதுவரவாக வந்திருப்பவர் மேகா ஆகாஷ். பாலாஜி தரணீதரன் இயக்கும் ‘ஒரு பக்க கதை’ படத்தில் மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸுக்கு ஜோடியாக நடிக்கும் உற்சாகத்தில் இருக்கும் அவரைச் சந்தித்தோம்.

படத்தில் நடிக்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது?

நான் சென்னைப் பொண்ணு. அப்பா ஆகாஷ் ராஜா வும், அம்மா பிந்து ஆகாஷூம் விளம்பர நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள். நான் லேடி ஆண்டாள் பள்ளியில் பிளஸ் டூ முடித்தேன். பிறகு மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்தேன். நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் சில விளம்பரப் படங்களில் நடித்துள்ளேன்.

இயக்குநர் பார்த்திபன் சாரின் மகள் கீர்த்தனா என் தோழி. பாலாஜி தரணீதரன் சார் தன் படத்துக்கு நாயகி யைத் தேர்ந்தெடுக்க ஆடிஷன் வைத்துள்ளதை அவர் தான் எனக்கு சொன்னார். இதைத் தொடர்ந்து நான் அந்த அதில் கலந்துகொண்டேன். அதில் நான் நடித்ததை வைத்து இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

பாலாஜி தரணீதரன் இயக்கிய ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை பார்த்திருக்கிறீர்களா?

பல முறை திரும்ப திரும்பப் பார்த்திருக்கேன். இயக்குநர் இந்தப் படத்தை உருவாக்க எப்படி மெனக் கெட்டிருப்பாங்கன்னு யோசிச்சுட்டே இருப்பேன். அதே இயக்குநரின் இரண்டாவது படத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன்.

ஜெயராம் மகன் காளிதாஸுக்கும் இது முதல் படம். அவருடனான உங்கள் அனுபவம்?

லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கும்போதே நான் காளிதாஸை பார்த்திருக்கேன். சில சமயங்கள்ல பேசியிருக்கேன். நல்ல நண்பர். இப்போ அவரோட சேர்ந்து நடிப்பது வசதியாக இருக்கிறது. நடிக்கும்போது எங்களுக்குள் எந்த தடுமாற்றமும் இல்லை.

நடிப்புக்கு நீங்கள் யாரை ரோல்மாடலாக வைத்திருக்கிறீர்கள்?

த்ரிஷாதான் என் ரோல் மாடல். 13 வருடங்களாக சினிமாவில் நீடிக்கும் அவருடைய ஆளுமையை நினைத்து பிரமித்துப் போயிருக்கிறேன். அவரைப் போல் சினிமாவில் ஜெயிக்க விரும்புகிறேன். அதே நேரத்தில் எனக்கு அலியா பட் மாதிரியும் நடிக்க ஆசை.

தமிழில் யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?

ஒரு சிலரை மட்டும் குறிப்பிட்டு சொல்வது நன்றாக இருக்காது. எனக்கு எல்லா ஹீரோக்களுடனும் நடிக்க ஆசை இருக்கிறது.

உங்களின் நிஜ கேரக்டர் என்ன?

நான் அன்பாக சிரிச்ச முகமாக இருப்பேன். நன்றாகப் பேசுவேன், அப்பப்போ அழுவேன். என் அக்கா கல்யாணத்தில்கூட அவரை விட்டு பிரியும் ஏக்கத்தால் அழுதேன். எல்லாரையும் சுலபமா நம்பிடுவேன். இதுதான் என் பலமும். பலவீனமும்.

எந்த மாதிரி வேடங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?

நாயகியை மையப்படுத்தும் படங்களில் நடிக்க விரும்புகிறேன். ‘பீட்சா’, ‘டார்லிங்’னு வித்தியாசங்களும், புதுமைகளும் நிறைந்த படங்களில் நடிக்கணும்.

சினிமாவுக்கு வந்ததுக்காக வருத்தப்பட்டதுண்டா?

இல்லவே இல்லை. ஆனா ஷூட்டிங் சமயங்களில் தூக்கத்தைத் தியாகம் செய்வதுதான் ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. இப்போ பழகிட்டேன்.

தமிழில் பிடித்த படங்கள்?

‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘துப்பாக்கி’, ‘ராவணன்’, ‘அந்நியன்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படங்களை அடிக்கடி பார்ப்பேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x