Published : 01 Feb 2015 04:31 PM
Last Updated : 01 Feb 2015 04:31 PM
தொடர்ச்சியாக கிராமத்துப் பெண் கதாபாத்திரங்களே வருவதால், தமிழில் நடிப்பது அலுப்பை ஏற்படுத்துகிறது என்று நடிகை லட்சுமி மேனன் கூறியிருக்கிறார்.
'சுந்தரபாண்டியன்', 'கும்கி', 'ஜிகர்தண்டா', 'பாண்டியநாடு', 'நான் சிகப்பு மனிதன்' உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தவர் லட்சுமி மேனன். தற்போது கார்த்தி நடித்து வரும் 'கொம்பன்', கெளதம் கார்த்திக் நடித்து வரும் 'சிப்பாய்' ஆகிய படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் லட்சுமி மேனன்.
தொடர்ச்சியாக கிராமத்து வேடங்களில் நடித்து வருவதாக அலுப்பை ஏற்படுத்துவதாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அப்பேட்டியில் லட்சுமி மேனன் கூறியிருப்பது:
"ஒரே மாதிரியான உடைகள், தொடர்ச்சியாக கிராமத்து வேடங்களில் நடித்து வருவது அலுப்பை ஏற்படுத்துகிறது. சந்தோஷமான, ஜீன்ஸும் டாப்ஸும் அணிந்து கொண்டு ஒரு படத்திலாவது இயல்பாக நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை.
'கும்கி' படத்தில் கிராமத்து வேடத்தில் நடித்ததால் தொடர்ச்சியான அதே மாதிரியான வேடங்கள் வருகிறது. எனக்கு சவாலான வேடங்களில் நடிக்க ஆசை. ஆனால், தொடர்ச்சியாக கிராமம் சார்ந்த கதைகளே வருவதால் அதில் இருந்து ஒன்றை தேர்வு செய்து நடிக்க வேண்டியுள்ளது. அனைவருமே நான் கிராமத்து பெண் வேடத்திற்கு மட்டுமே சரியாக இருப்பேன் என்று நினைப்பது கஷ்டமாக இருக்கிறது.
சில சமயங்களில் நான் கதையே கேட்காமல் கூட நடித்திருக்கிறேன். சித்தார்த்தின் ரசிகை என்பதால் 'ஜிகர்தண்டா' படத்தில் நடித்தேன்.
நான் தமிழ் படங்களில் நடித்து வருவதால், எனது பள்ளி தோழிகளுக்கு நான் ஒரு நடிகை என்பதே தெரியாதது சந்தோஷமாக இருக்கிறது.
சினிமாவிற்கு தேதிகள் ஒதுக்குவது உள்ளிட்ட பணிகளில் எனது மேனேஜர் தான் கஷ்டப்படுகிறார். எனக்கு படங்களைத் தாண்டி இசை ரொம்ப பிடிக்கும். எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இசை என்னை ஊக்குவிக்கும்" என்று தெரிவித்திருக்கிறார் லட்சுமி மேனன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT